விவசாயி....கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருக்கும் ஜி.ராமகிருஷ்ணன் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் ஒரு சில அரிய தலைவர்களில் ஒருவர். 
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார் ஜி.ராமகிருஷ்ணன். இவர் அடிப்படையில் ஒரு விவசாயி ஆவார். வழக்கறிஞரான ஜி.ராமகிருஷ்ணன் அடித்தட்டு மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கம்யூனிசத் தலைவர் ஆவார்.

பிறப்பு...

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், மேமானூர் கிராமத்தில், மத்திய தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜி.ராமகிருஷ்ணன்

கல்வி...

ஆரம்பப்பள்ளியை மேமானூர் கிராம அரசு ஆரம்பப்பள்ளியிலும், மேல் நிலைக் கல்லூரியை ஜி.அரியூரிலும் முடித்தவர். உயர் கல்விக்காக காஞ்சிபுரத்திலும், சென்னையிலும் படித்தவர். 

வழக்கறிஞர்... 

சென்னை சட்டக் கல்லூரியில் பிஎல் படித்து வழக்கறிஞர் ஆனார். 1969-ல் மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். 8 ஆண்டுகாலம் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.

கட்சிப் பொறுப்பு...

மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர்கள் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்னாற்காடு மாவட்டச் செயலாளராகவும், அகில இந்திய நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1981-ம் ஆண்டு முதல் கட்சியின் முழு நேர ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கௌரவத் தலைவர்...

மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான சி.ஐ.டி.யு.வின் தென்னாற்காடு மாவட்டச் செயலாளராகவும், அதன் மாநிலத் துணைத் தலைவராகவும் செயல்பட்டார். இப்போது நெய்வேலி சி.ஐ.டி.யு. சங்கத்தின் கௌரவத் தலைவராகவும் இருக்கிறார்.

மத்தியக்குழு உறுப்பினர்...

1989-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ராமகிருஷ்ணன், 2008-ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அவதூறு வழக்குகள்...

2010ம் ஆண்டு அவர் மாநிலச் செயலாளராக உயர்வு பெற்றார். இன்று வரை அப்பணியில் தொடர்ந்து தொய்வின்றி செயல்பட்டு வருகிறார். எல்லோரையும் போலவே இவர் மீதும் ஜெயலலிதா அரசு அவதூறு வழக்கைப் பாய்ச்சத் தவறவில்லை.

தனிக்கூட்டணி...

இதுவரை திமுக, அதிமுக கூட்டணிகளுக்குத் தாவி வந்த கம்யூனிஸ்டுகள் இந்த முறை வைகோ தலைமையில் தனிக் கூட்டணி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings