அதிமுக பொதுச்செயலாளர்.. தமிழக முதல்வர் !

எனக்கென்று குடும்பம் எதுமில்லை... உங்களால் நான்... உங்களுக்காகவே நான்... இது முதல்வர் ஜெயலலிதாவின் சமீபத்திய அறிக்கைகளிலும், பேச்சுக்களிலும் தவறாமல் இடம் பெறுகிறது. 
இந்த உருக்கமான பேச்சு அப்படியே அனுதாப ஓட்டுக்களாக மாறும் என்பது முதல்வர் ஜெயலலிதாவிற்கு நிச்சயம் தெரியும். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகைகளின் அதிக பட்ச ஆசை, நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வேண்டும், 

பிரபல நாயகர்களின் ஜோடியாக நடித்து புகழ் பெற வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் பதினைந்து வயதில் திரை நட்சத்திரமாகத் தனது வாழ்வைத் துவங்கிய ஜெயலலிதா ஒருவர் மட்டுமே தமிழக வாழ்வில் ஒரு பெண் ஆளுமையாக திகழ்கிறார். 

அதிமுக தொண்டர்களால் அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதா, 1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி, தமிழ் மாதமான மாசியில் மகம் நட்சத்திரத்தில் மைசூரு சமஸ்தானத்தில் உள்ள மேல்கோட்டை கிராமத்தில் ஜெயராம் - வேதவல்லி தம்பதியரின் மகளாக பிறந்தார். 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தனது பூர்வீக ஊர் என்று அடிக்கடி கூறுவார் ஜெயலலிதா. இவரது தாத்தாவின் குடும்பம், ஸ்ரீரங்கத்தில் இருந்து மேல்கோட்டைக்கு இடம் பெயர்ந்த குடும்பம் என்றும் கூறுகின்றனர். 

தந்தை ஜெயராமின் மறைவிற்குப் பின்னர் பெங்களூருவிற்கு இடம் மாறிய ஜெயலலிதாவின் குடும்பம், அவரது தாயாருக்கு கிடைத்த திரைப்பட வாய்ப்புகளால் சென்னையின் குடியேறியது. 

வேதவல்லியாக இருந்த ஜெயலலிதாவின் தாயார் சினிமாவில் நடிப்பதற்காக சந்தியாவாக மாறினார். சென்னைக்கு வந்த பின்னர், சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்த ஜெயலலிதா மெட்ரிக் தேறினார்.

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில்தான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பை கைவிட்டு நடிகையானார்.

திரைப்பட கதாநாயகி

ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார்,

ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்

எம்.ஜி.ஆரின் கதாநாயகி

1965ம் ஆண்டு வெண்ணிற ஆடை படத்தில் நடித்த போதோ அதன் ரஷ் பார்த்த எம்.ஜி.ஆர்., அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ஜெயலலிதாவை தனது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நாயகியாக நடிக்க வைத்தார்.

அப்போதே ஜெயலலிதாவின் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்து விட்டது என்றுதான் கூற வேண்டும். எம்.ஜி.ஆருடன் மட்டும் ஜெயலலிதா இருபத்தி எட்டு படங்களுக்கும் மேலாகக் கதாநாயகியாக நடித்தார்.

தாயாரின் மரணம்

ஜெயலலிதா முதலில் குடியிருந்தது சென்னை தியாகராயர் நகர் சிவஞானம் தெருவில் பிறகு, அடையாறு பகுதியில் குடி இருந்தார். படங்கள் குவிந்து, நடிப்பில் கொடிகட்டிய காலத்தில்தான், போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது. அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் வைத்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971ம் ஆண்டு காலமானார்.

நதியை தேடி வந்த கடல்

ஜெயலலிதாவின் 100வது படமான "திருமாங்கல்யம்" 1977ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டார். 1980ல் வெளிவந்த "நதியைத்தேடி வந்த கடல்" என்ற சினிமாதான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம்.

கருணாநிதியிடம் பாராட்டு

ஜெயலலிதாவின் 100 வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் `நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்' என்று பாராட்டபட்டவர்!.

மதுரையில் உலகத் தமிழ் மாநாடு

1981ம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் காவிரி தந்த கலைசெல்வி என்னும் நாட்டிய நாடகம் நடைபெறுவதாக இருந்தது. 

அந்த நாடகத்தில் நடிப்பதற்காக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்து வந்தார் ஆர்.எம்.வீரப்பன். அந்த வகையில் ஜெயாவின் அரசியல் பிரவேஷத்திற்கு வித்திட்டவர் ஆர்.எம்.வீரப்பன் என்றுதான் கூறவேண்டும்.

அதிமுகவில் ஜெயலலிதா

1982 ஜூனில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க பெரிதும் பாடுபட்டதோடு மட்டுமல்லாமல் அந்த திட்டத்திற்கு 

நன்கொடையாக ரூபாய் 40,000 வழங்கினார். சத்துணவு திட்டத்தின் மீது ஜெயலலிதாவிற்கு இருந்த அக்கறையை பார்த்த எம்.ஜி.ஆர். அவரை சத்துணவு திட்ட உயர்மட்டக் குழுவிலும் இடம் கொடுத்தார்.

கொள்கை பரப்பு செயலாளர்

1983ம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலமும், 

பிரச்சாரங்கள் மூலமும் மக்களை வசீகரிக்க ஆரம்பித்தார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின் உத்தரவிற்கிணங்க ஜெயலலிதாவிற்கு அந்த பேச்சுக்களை வலம்புரி ஜான் எழுதிக்கொடுத்தார்.
அதீத நினைவாற்றல்

ஜெயலலிதா நிறைய வாசிப்பவர். நாவல், சிறுகதைகள் எழுதியுள்ளார். புத்தக விமர்சனங்கள் எழுதியவர். ஆங்கிலத்தில் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் அதீத நினைவாற்றலும் கொண்டவர் என்கின்றனர் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள்.

ராஜ்யசபா உறுப்பினர்

ஜெயலலிதாவை 1984ம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக்கி அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். அதிமுகவில் ஜெயலலிதாவின் ஆதிக்கம் பரவுவதாகக் கூறி, மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். கட்சியில் கலகக்குரல் ஒலித்தது.

எம்.ஜி.ஆர் அமெரிக்கா பயணம்

1984 செப்டம்பர் மாதம் கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து எம்.ஜி.ஆர். விடுவித்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆர். உடல் நிலை மோசம் அடைந்து,

மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக டிசம்பர் மாதம் அமெரிக்கா சென்றார். அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி மூலம் தமிழக முதல்வராக முயற்சித்து சர்ச்சை அரசியலில் உச்சத்துக்கு சென்றார் ஜெயலலிதா.

சூறாவளி சுற்றுப்பயணம்

எம்.ஜி.ஆர். உடல் நலமின்றி அமெரிக்காவில் மருத்துவச் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தபோது 1984 டிசம்பரில் லோக்சபா பொதுத் தேர்தலிலும் மற்றும் 

தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தலையும் சந்தித்தது அதிமுக. தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அதிமுக - காங்கிரஸ் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்து மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தார்.

அமோக வெற்றி

அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு அபார வெற்றி.153 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க.,விற்கு 132 தொகுதிகள் கிடைத்தது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 62 இடங்கள் கிடைத்தன. 

இந்த தேர்தலில் தான் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்தே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், அ.தி.மு.க12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

கட்சியில் மீண்டும் நியமனம்- அரசியல் வாரிசு

1985 பிப்ரவரி 12ம் தேதி எம்.ஜி.ஆர் சென்னை திரும்பினார். ஜெயலலிதாவை மீண்டும் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தார் எம்.ஜி.ஆர். ஆக்கினார். 1986ம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அனைத்துலக எம்.ஜி.ஆர். 

ரசிகர் மன்ற மாநாட்டில் வெள்ளி செங்கோலை எம்.ஜி.ஆருக்கு வழங்கி "அரசியல் வாரிசு"தானே என்பதை அடையாளப்படுத்திக் கொண்டார். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் அதுதான்.

எம்.ஜி.ஆர் மரணம்

உடல்நிலையில் ஏற்பட்ட கோளாறினால் 1987 டிசம்பர் 24ம் தேதி எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தார். எம்.ஜி.ஆரின் உடலருகே இருந்த கண்ணீரோடு இருந்த ஜெயலலிதா எல்லோராலும் கவனிக்கப்பட்டார். 

எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வேனில் ஏறியபோது கே.பி.ராமலிங்கத்தால் வலுக்கட்டாயமாக இழுத்து கீழே தள்ளப்பட்ட சம்பவமும் அப்போது நடந்தது. அதனால் அனுதாபமும் பெற்றார்.

பிளவுபட்ட கட்சி

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின், அ.இ.அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழ, அ.தி.மு.க.வில் பதவிச் சண்டை உருவானது ஜெயலலிதா கோஷ்டி, ஆர்.எம்.வீ. கோஷ்டி என்று கட்சி 2 ஆக பிளவு பட்டது. முடிவில் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாள் முதல்வர் பொறுப்பு ஏற்றார்.

சட்டசபையில் ரகளை

சட்டசபை கூடிய போது பெரும் ரகளை ஏற்பட்டது. 24 நாட்களே ஆட்சியில் இருந்த ஜானகி அம்மாள் அமைச்சரவை, 1988 ஜனவரி 28ம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.

முடக்கப்பட்ட இரட்டை இலை

எம்.ஜி.ஆர். துணைவியார் ஜானகி அம்மாள் தலைமையில் ஒரு அணியும் ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியுமாக அதிமுக (ஜெ), அதிமுக (ஜா) என்று அதிமுக இயங்கவே கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

முதல் பெண் எதிர்கட்சித்தலைவி

1989ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக (ஜெ) அணி 27 இடங்களைக் கைப்பற்றியது. போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் 

இருந்து வெற்றி பெற்று முதல் முறையாக ஜெயலலிதா எம்.எல்.ஏவானார். அத்துடன் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்வானார். ஜானகி அணி படுதோல்வி அடைந்தது.

அதிமுக பொதுச்செயலாளர்

இதன் பின்னர் 1989ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச்செயலரானார் ஜெயலலிதா. பின்னர் இரட்டை இலை சின்னமும் மீட்கப்பட்டது.

1989 மார்ச் 25 சட்டசபை கலவரம்

அதே 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி தமிழக சட்டசபை வரலாறு காணாத கலவரத்தை எதிர்கொண்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது அமளி ஏற்பட்டு பின்னர் மோதலாக வெடித்தது. மைக்குள் பறந்தன..

முதல்வராக திரும்புவேன்

இந்த களேபரத்தின் போதுதான் திமுகவினர் தன்னை தாக்க முயன்றதாக தலைவரி கோலத்துடன் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார் ஜெயலலிதா. அத்துடன் அப்போது, 
நான் முதல்வராகத்தான் இந்த சட்டசபைக்கு திரும்புவேன்.. அதுவரை சபை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவது இல்லை என்று ஜெயலலிதா சபதம் எடுத்தார்.

ராஜீவ் கொலையும் அனுதாப அலையும்

1991ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது ராஜீவ் காந்தி கொல்லப்பட அந்த அனுதாப அலையில் மொத்தம் 234 தொகுதிகளில் 225யௌ அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அள்ளியது. 40 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

முதல்வரான ஜெ

1991ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்று மீண்டும் சட்டசபைக்குள் நுழைந்தார் ஜெயலலிதா. இதன் மூலம் தனது சபதத்தை நிறைவேற்றினார். 

அதே நேரத்தில் ராஜிவ் மரணத்தால் தனக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றும் தனது செல்வாக்கினால் தான் வெற்றி கிடைத்ததாகவும் அறிவித்தார் ஜெயலலிதா.

ரூ.60 வருவாய்... 66 கோடி சொத்துக்குவிப்பு

அந்த 1991-96ஆம் ஆண்டு கால ஆட்சியில் தமக்கு மாத வருமானம் ரூ1 ஒன்று போதும் என்று அறிவித்தார். சொத்து குவிப்பு வழக்கு அப்படியானால் 5 ஆண்டுகாலத்தில் மொத்தம் அவர் ஊதியமாக பெற்றது ரூ60தான்.

1996ல் வரலாறு காணாத தோல்வி

வளர்ப்பு மகன் திருமணமும், அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழலும், ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பும் ஊடகங்களில் வெளியாக, 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 

அதிமுக வரலாறு காணாத தோல்வியை தழுவியது. பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் திமுக வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வியடைந்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதா, இரண்டாவது குற்றவாளியாக சசிகலா, மூன்றாவது குற்றவாளியாக வளர்ப்பு மகன் சுதாகரன், 

நான்காவது குற்றவாளியாக இளவரசி ஆகியோரைச் சேர்த்து, 1996 செப்டம்பர் 18 அன்று முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அதன்பிறகே 5.5.1997ல் நீதிபதி சம்பந்தம், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் விசாரணையைத் தொடங்கினார்.

டான்சி வழக்கில் தண்டனை

டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல். ஆனாலும் 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, 

புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால் ஜெயலலிதாவின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

முதல்வர் பதவியேற்பும் உச்சநீதிமன்ற தீர்ப்பும்

2001 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெறவே, அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 

அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா முதலமைச்சர் ஆனது செல்லாது என அதிரடியாக தீர்ப்பளித்தது.

டான்சி வழக்கில் விடுதலை

ஜெயலலிதாவின் பதவி பறிபோகவே, ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதல்வர் ஆனார். பிறகு டான்சி வழக்கில் இருந்து விடுதலை பெற்று, 2002ம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வர் ஆனார்.

எதிர்கட்சித்தலைவி

2006ம் ஆண்டு மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 73,927 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஆனாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றி பெறவே எதிர்கட்சித் தலைவியானார் ஜெயலலிதா.

2011ல் மீண்டும் முதல்வர்

2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு, 1,05,328 வாக்குகளைப் பெற்றார். அதிமுக - தேமுதிக கூட்டணி அமோக வெற்றி பெறவே,

அசைக்கமுடியாத முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா. ஆனாலும் காலை சுற்றிய பாம்பாக சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்து ஜெயலலிதாவின் நிம்மதியை தொலைக்க வைத்தது.

7வது முறையாக பொதுச்செயலாளர்

எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் ஜெயலலிதா. இதன்பிறகு தொடர்ச்சியாக அவரே பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வருகிறார். 

இதுவரை ஏழு முறை போட்டியின்றி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் 27 ஆண்டுகாலமாக அதிமுக பொதுச்செயலாளராக பதவி வகிக்கிறார் ஜெயலலிதா.

களத்தில் எதிரிகள் இல்லை

2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து 

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ஜெயலலிதா, இப்போது அரசியல் களத்தில் எதிரிகளைக் காணவில்லை என்று கூறினார்.

சிறை தண்டனை பதவி பறிப்பும்

18 ஆண்டுகாலம் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தார். 4 ஆண்டுகாலம் சிறைதண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கவே அடுத்த நொடியே முதல்வர் பதவியும், எம்.எல்.ஏ பதவியும் பறிக்கப்பட்டது.

5வது முறையாக முதல்வர்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழந்த ஜெயலலிதா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யவே, நீதிபதி குமாரசாமி , தனி நீதிபதி அளித்த 

தண்டனையை ரத்து செய்து ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுதலை செய்தார். இதனை அடுத்து கடந்த மே மாதம் 23ம் தேதி 5வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா.

சாதனை வெற்றி

கடந்த ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா பெற்ற வாக்குகள் 1,60,432. அவரை எதிர்த்து போட்டியிட்ட சி.மகேந்திரன் பெற்ற வாக்குகள் 9,710. ஜெயலலிதா 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்தார் ஜெ.
எதுவந்தாலும் சமாளிப்பேன்

சென்னையில் அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஜெயலலிதா, யாரையும் சார்ந்திருக்கக் கூடிய வாய்ப்பு என் வாழ்க்கையில் அமையவில்லை. 

எப்போதுமே நல்லது என்றாலும் கெட்டது என்றாலும், எனக்கு நானேதான் முடிவுகளை எடுத்துக் கொண்டு, வாழ்க்கையில் எது வந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்துக் கொண்டு, இப்படியே நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டார். 

`நான் அனுசரித்துப் போகிறவள்தான். ஆனால், எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன்" என்று தனது கேரக்டருக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

மீண்டும் ஜெயிப்பாரா ஜெ?

எம்.ஜி.ஆர் மட்டுமே தொடர்ந்து மூன்று முறை முதல்வராக வெற்றி பெற்றுள்ளார். 1991ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் அதிமுகவும்,
திமுகவும் மாறி மாறியே தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளன. இம்முறை தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்போடு தேர்தல் வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளார் ஜெயலலிதா.

வெற்றியா? தண்டனையா?

ஆளும் அதிமுகவை எதிர்க்க பல எதிரிகள் இப்போது களத்தில் உள்ளனர். ஜெ ஜெயிப்பாரா? அல்லது வேகமெடுத்திருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு அவருக்கு தண்டனையை பெற்றுத் தருமா? காலம்தான் பதில் சொல்லும்.
Tags:
Privacy and cookie settings