அரசியல் சாணக்கியர் முதுபெரும் தலைவர் !

இந்தியாவின் முதுபெரும் தலைவராகவும் 5 முறை தமிழக முதல்வராகவும் பதவி வகித்த திமுக தலைவர் கருணாநிதி 6வது முறையாக அரியணையில் அமருவதற்காக தேர்தல் களத்தில் வியூகங்களுடன் காத்திருக்கிறார். 
தமிழக அரசியலில்

தமிழக அரசியலில் இதுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஒரே ஒருவராக திகழ்ந்து வருகிறார் கருணாநிதி. இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர் கருணாநிதி. 

வயது 93. நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்த கருணாநிதி 1930களிலேயே தம்முடைய மாணவர் பருவத்திலேயே இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போதைய நீதிக்கட்சி, பின்னர் திராவிடர் கழகம் என திராவிடர் இன விடுதலைக்கான பயணத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். 

தந்தை பெரியாரின் குடியரசு ஏட்டில் துணை ஆசிரியராக ஈரோட்டில் சிறிது காலமும் பணிபுரிந்தார் கருணாநிதி. 1949-ம் ஆண்டு திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது.

அப்போது அண்ணா தலைமையிலான திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருணாநிதி உருவெடுத்தார். திமுகவைப் பொறுத்தவரை திராவிடர் கழகத்தைப் போலவே தேர்தல் அரசியலில் பங்கேற்காத நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.

இதனால் 1952ம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் முதலாவது பொதுத் தேர்தலை திமுக புறக்கணித்தது. ஆனால் 1956ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுகவின் 2-வது மாநில மாநாட்டில் தேர்தல்களில் பங்கேற்பது என திமுக முடிவெடுத்தது.

இதனடிப்படையில் 1957ம் ஆண்டு முதல் 12 சட்டசபை தேர்தல்களில் கருணாநிதி போட்டியிட்டுள்ளார். இந்த 12 சட்டசபை தேர்தல்களிலுமே வென்று சாதனை படைத்தவர் கருணாநிதி. 

சட்டசபை தேர்தல்களில்... 

1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சாவூர், 1967, 71-ல் சைதாப்பேட்டை, 1977, 80-ல் அண்ணா நகர், 1989, 91-ல் துறைமுகம்; 1996, 2001, 2006 தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் கருணாநிதி.

2011ம் ஆண்டு தமது சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட்டு 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். 

5 முறை முதல்வர் 

1967-ம் ம் ஆண்டு திமுக வென்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்த போது பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் கருணாநிதி.

ஆனால் 1969-ல் அண்ணா மறைந்தபோது முதல் முறையாக முதல்வர் பதவியை ஏற்றார். பின்னர் 1971-76; 1989-91; 1996-2001; 2006-2011 என 5 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்திருக்கிறார் கருணாநிதி. 

தேசிய அரசியலில்... 

இந்திய தேசிய அரசியலில் 1970களின் இறுதியில் இருந்தே தீர்மானிக்கும் சக்திகளில் ஒருவராக திகழ்ந்தவர் கருணாநிதி.

இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியை திமுக தீரமுடன் எதிர்த்ததுடன் மட்டுமின்றி தேசிய அளவிலான எமர்ஜென்சி எதிர்ப்பு அணியிலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டது.

1989-ல் வி.பி.சிங். தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஒரு சமூக நீதி அணியாக தேசிய முன்னணி அணி அமைவதில் முக்கிய பங்கு வகித்தவர் கருணாநிதி.

மேலும் பிரதமர் வி.பி. சிங்கின் உதவியோடு தேசிய அளவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி- வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கவும் செய்தார். 

அதேபோல் 2004-2013ம் ஆண்டுவரை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைவதிலும் மிக முக்கிய பங்கு வகித்தவர் கருணாநிதி. தற்போதும் தேசிய அரசியலில் ஆக்கமுடன் இயங்கி வரும் முதுபெரும் தலைவர் கருணாநிதிதான்.

பன்முக ஆளுமை 

அரசியல் பயணத்துடனேயே தம்முடைய கலை இலக்கியப் பயணத்தையும் இணைத்துக் கொண்டு பயணித்தவர் கருணாநிதி. நாடகங்கள், திரைப்படங்கள் மூலம் திராவிடர் இயக்க கொள்கைகளை, திமுகவின் அரசியல் நிலைப்பாடுகளை வெளியிட்டவர்.

கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் பெரும் புரட்சிகரமான திருப்புமுனையாக இருந்தது.

மறைந்து போன தமிழ் இலக்கியங்களை, கதா பாத்திரங்களை, வரலாற்று மாவீரர்களை பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் திரைக்காவியங்களில் மக்கள் மொழியில் வசன நடையில் படைத்தவர் கருணாநிதி. 

அதேபோல் எண்ணற்ற இலக்கிய நூல்களையும் பொன்னர் சங்கர், பாயும் புலி பண்டாரக வன்னியன் என வரலாற்று நாவல்களையும் படைத்துள்ளார் கருணாநிதி. 

குடும்பம் 

கருணாநிதிக்கு 3 மனைவிகள். பத்மாவதி, தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள். பத்மாவதி அம்மாவின் மகன் மு.க. முத்து. பத்மாவதி மறைந்த பின் குடும்பத்தினரால் இவருக்கு தயாளு அம்மாளுடன் மணம் முடித்து வைக்கப்பட்டது.
தயாளு அம்மாவின் மகன்கள் மு.க. அழகிரி; மு.க. ஸ்டாலின்; மு.க. தமிழரசு; ராசாத்தி அம்மாளின் மகள் கனிமொழி. இவர்களில் மு.க. ஸ்டாலின் 2007-ல் கருணாநிதி அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் 2009-11ல் துணை முதல்வராகவும் பதவி வகித்தார். 

கனிமொழி தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். 

2016 தேர்தல் 

தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் கருணாநிதி தலைமையில்தான் திமுக களமிறங்குகிறது.

திமுக எப்படி கூட்டணி அமைக்கப் போகிறது என்கிற சந்தேகங்களுக்கெல்லாம் தமக்கே உரித்தான பாணியில் காய்களை நகர்த்தி 6-வது முறையாக முதல்வர் பதவி எனும் அரியணையில் அமர வியூகம் வகுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் 93 வயது கருணாநிதி... 

இந்திய அரசியலில் இது ஒரு பேரதிசயம்!
Tags:
Privacy and cookie settings