நமக்கு நாமே பயணத்தின் சாதனையாளர் !

திமுக பொருளாளர் பதவி வேண்டுமா? அல்லது திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி வேண்டுமா என்று என்னைக் கேட்டால் எனக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் பதவிதான் வேண்டும் என்று நான் தயங்காமல் சொல்வேன், 
என்று சில தினங்களுக்கு முன்பு நமக்கு நாமே பயணத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னார் மு.க. ஸ்டாலின். 1953 மார்ச் 1ம் நாள் மு.கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக ஸ்டாலின் பிறந்தபோது அவரது தந்தை தமிழகத்தின் முதல்வராக இருக்கவில்லை.

அண்ணாவின் தம்பியாக இருந்தார் கருணாநிதி. 1949ம் ஆண்டு வட சென்னையில் தி.மு.கவை அண்ணா தொடங்கினார். அதைத் தொடர்ந்து 1957ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. களமிறங்கியது. 1962ம் ஆண்டு 50 சட்டசபை உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

பின்னர் 1967ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. ஸ்டாலினை 64 வயது இளைஞர் என்று சொல்லலாம். 

அந்த அளவிற்கு சுறுசுறுப்பாகவே செயல்படுவதால்தான் இன்றைக்கும் தளபதி என்று அழைக்கின்றனர் திமுகவினர். மிசா சிறைவாசம் தொடங்கி நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் வரை ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையை சற்றே திரும்பி பார்க்கலாம்.

14 வயதில் பிரச்சாரம்

மு.க. ஸ்டாலின் தனது 14 வயதில் அரசியலை ருசிக்கத் தொடங்கினார். 1967 தேர்தலில் ஸ்டாலின் தி.மு.கவுக்கு பிரச்சாரம் செய்தார். அவருக்குக் கீழ் குழந்தைகள் சீர்திருத்த சங்கம் உருவாயிற்று. ஒரு முடிதிருத்தும் கடையில் இளைஞர் அணியின் எளிமையான தொடக்கம் நடந்தது.
மிசாவில் கைது

உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (மிசா) கீழ் 31 ஜனவரி 1976 அன்று அவர் கைது செய்யப்பட்டபோது ஸ்டாலினுக்கு வயது 23. மிசா காலத்தில் சிறையில் அனுபவித்த கொடுமைகளையும், தன் உயிரைக்காத்த சிட்டிபாபுவையும் இன்றைக்கும் ஒருவித சிலிர்ப்புடனேயே அடிக்கடி நினைவு கொள்கிறார்.

திமுக இளைஞரணி

1980ல் ஜூலை 20ம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் திமுக தலைவர் கருணாநிதியால் கழகத்தின் இளைஞர் அணி தொடங்கப்பட்டது. இந்திய அரசியலில் மாநிலக் கட்சி ஒன்று தொடங்கிய முதல் இளைஞரணி கழகத்தின் அணிதான். 1981ல் இளைஞரணி அமைப்பாளர்கள் ஐவரில் ஒருவராக தளபதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

இளைஞரணி செயலாளர்

1982ம் ஆண்டு மே மாதம் திருச்சியில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கழக இளைஞரணியின் அமைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டு தளபதியாக பட்டம் சூட்டம் பெற்றார் மு.க.ஸ்டாலின். 

1984ல் அவர் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 32 ஆண்டுகாலமாக இளைஞரணி செயலாளர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார் தளபதி ஸ்டாலின்.

சட்டமன்ற உறுப்பினர்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு 1989ல் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக எம்.எல்.ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது முதல் அதே தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு நான்கு முறை 1989, 1996, 2001, 2006ம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை மேயர்

1996ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் முதல் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் என்ற பெருமை பெற்றார். 

2001ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய அதிமுக ஆட்சி கொண்டு வந்த சட்டத்தால் மேயர் பதவியை துறந்து, சட்டசபை உறுப்பினராக தொடர்ந்தார்.
அமைச்சர், துணை முதல்வர்

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், 2006ல் திமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர், 2008ல் திமுக பொருளாளர் ஆக நியமனம் செய்யப்பட்ட ஸ்டாலின், 2009ம் ஆண்டு மே 29ம் தேதி தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக துணை முதல்வர் பதவியை வகித்தார்.

நமக்கு நாமே பயணம்

2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். தொகுதி மக்களை வாரம் தோறும் சந்தித்த ஸ்டாலின், 

கடந்த ஆண்டு 'நமக்கு நாமே'என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கி 234 தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டுள்ளார்.

அமைதியான குணம்

ஸ்டாலினை பொறுத்தவரை அதிகம் கோபப்படமாட்டார் என்று அவருடன் பழகியவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அதே நேரத்தில் வெற்றிக்காக எதையும் காம்பரமைஸ் செய்து கொள்ளும் குணம் ஸ்டாலினிடம் மிஸ்சிங் என்கின்றனர்.

அரசியல் எதிரிகள்

மு.க.ஸ்டாலினுக்கு அரசியலில் எதிரிகளாக இன்றைக்கு பலர் உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக அன்புமணி என பட்டியல் நீள்கிறது.

முதல்வர் பதவி

அண்ணாவிற்குப் பிறகு கருணாநிதி முதல்வரானது எளிதாகி விட்டது. ஆனால் திமுகவில் ஸ்டாலின் முதல்வராவதற்கு பல முட்டுக்கட்டைகள் உள்ளன. 
படிப்படியாக அரசியலில் பாடம் படித்து துணை முதல்வர் பதவி வரை பார்த்து விட்ட ஸ்டாலின் தற்போது உள்ள முட்டுக்கட்டைகளை சமாளித்து அவர் முதல்வராவாரா என்பது காலத்தின் கையில் உள்ளது.
Tags:
Privacy and cookie settings