மாற்று கருத்தை முன்வைக்கும் அரசியல் தலைவர் சீமான் !

சிவகங்கை மாவட்டம் அரணையூரில் 1970-ம் ஆண்டு பிறந்தவர் சீமான். படிப்பை முடித்ததும் சினிமா துறையில் சேருவதற்காக சென்னைக்கு வந்தார் சீமான். 
மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். பின்னர் 1996-ல் பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தை இயக்கினார். 1998-ல் இனியவளே, 

2000-ம் ஆண்டில் வீரநடை ஆகிய திரைப்படங்களையும் இயக்கி இருந்தார். அதே கால கட்டங்களில் திராவிடர் இயக்கம், இடதுசாரிகள் இயக்கங்களின் மேடைகளில் பிரசாரகராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்..

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முழுமையாக ஆதரித்து பேசிவந்தார். இதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் அழைப்பின் பேரில் கிளிநொச்சி சென்று அவரை சந்தித்தார். 

2009-ம் ஆண்டு இலங்கையில் இறுதி யுத்தம் நிகழ்ந்த போது லட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தடுக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 

அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு பேச்சுக்காக கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் அனுபவித்தார். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் என்ற தமிழர் நலன் சார்ந்த இயக்கத்தை தொடங்கினார். பின்னாளில் இதை நாம் தமிழர் கட்சியாக மாற்றினார். 
2011 சட்டசபை தேர்தலில் இலங்கை தமிழர் இனப்படுகொலைக்கு காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

தற்போதைய 2016 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடுகிறது. 

திராவிட அரசியலுக்கு மாற்றாக 'தமிழர் நிலத்தை தமிழரே ஆள வேண்டும்' என்ற முழக்கத்தை முன்வைக்கிறது சீமானின் நாம் தமிழர் கட்சி.
Tags:
Privacy and cookie settings