மருத்துவமனையில் நோயாளியை பார்க்க செல்கிறீர்களா ?

மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நோயாளிக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் அல்லது இருவர் போனால் போதும். 
மருத்துவமனையில் நோயாளியை பார்க்க செல்கிறீர்களா ?
13 வயதுக்கு குறைந்த மற்றும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செல்வதை தவிர்க்கலாம். உடல்நலம் இல்லாதவர் களை பார்க்கச் செல்லும் போது, பூச்செண்டு கொடுப்பது நல்லதல்ல. 

அதிலிருக்கும் சிறு பூச்சிகள், நோயாளிக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்; பூஞ்சைகள் நோய்த் தொற்றை உண்டாக்கலாம். தன்னம்பிக்கை தரும் விதமாக, அவர்களிடம் பேச வேண்டும். 
'நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம்' என்று, நம்பிக்கை அளிக்க வேண்டும். 'விரைவில் குணமாகிவிடும்' என, உற்சாகம் தர வேண்டும்; அவர்களின் மனவலிமையை அதிகப்படுத்த வேண்டும்.

தனி அறையில் இல்லாமல், 'செமி பிரைவேட்' அறைகளில், நான்கு நோயாளிகள், ஒரு அறையை பகிர்ந்து இருப்பர். 

ஒவ்வொருவருக்கு மான நோயின் தன்மை, வலி, துாங்கும் நேரம் வெவ்வேறாக இருக்கும். இத்தகைய சூழலில், பார்வையாளர்கள் மெதுவாக பேச வேண்டும்.

புற்று நோய்க்கான, 'கீமோதெரபி' மருத்துவம் செய்யும் போது தலைமுடி கொட்டும். முடியை பாதுகாப்பதை விட, உயிரை பாதுகாப்பதே முக்கியம்.
இத்தகைய சூழலில், கூகுளில் தேடுவது தேவையற்ற பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தும். 
உங்கள் உடலில் உண்டாகும் பாதிப்புகளின் அடிப்படையில், மருத்துவரிடம் நேரடியாக ஆலோசனை பெறுவதே, தெளிவை ஏற்படுத்தும்.

மருத்துவமனையில் நர்ஸ், டாக்டர், உதவி மருத்துவர் போன்றோர், ஒரே நாளில், பல நோயாளிகளை கவனிக்க வேண்டியிருக்கும். 

அதனால், சில நேரங்களில் அவர்கள், எரிச்சலுடனும், கோபத்துடனும் நடந்து கொள்வர். அவற்றை பெரிதாக்கி, அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள தேவையில்லை.

மருத்துவர்களிடம் தேவையான கேள்விகளை யோசித்து கேட்க வேண்டும். முக்கியமாக, நோயாளிக்கு பீதியை ஏற்படுத்தக் கூடாது.

வயிறு மற்றும் கிட்னி தொடர்பான சிகிச்சைக்கு, நோயாளி ஒரு நாளில் எடுத்துள்ள, திட, திரவ உணவு அளவு, சிறுநீர், மலம் அளவீடுக்காக, 'இன் புட், அவுட் புட்' சார்ட் எடுப்பர்; 

அதை வைத்து, நோய் எந்தளவு குணமாகியுள்ளது என்பதை மதிப்பிடுவர். 
அவ்வாறு இருக்கையில், நோயாளி மீதம் வைத்த உணவை, 'அட்டெண்டர்' சாப்பிட்டால், நோயின் தன்மையை கணக்கிட முடியாது என்பதால், கவனமாக இருக்க வேண்டும்.
நோயாளிக்கு ஓய்வும் அவசியம் என்பதால், பார்வையாளர் நேரத்தில் மட்டும், சந்திப்பது சரியாக இருக்கும். 

நோயாளியை கவனிக்கும் போது, சரியான துாக்கம் இருக்காது. நோயாளி முறையாக மருந்து, உணவு எடுத்துக் கொள்ள உதவும் மனநிலையிலும், அட்டெண்டர் இருக்க வேண்டியது அவசியம்
Tags: