எந்த ஆணின் விந்தணு குழந்தை பெற ஏற்றவை?

ஆண்களின் இளம்பருவ விந்தணுக்களில் மரபுவழி நோய்க்கூறுகள் பெருமளவு இருக்காது என்பதால் ஆண்களின் இளவயது விந்தணுக்களை சேமித்து உறைநிலையில் பாதுகாத்து, 

அதைப் பயன்படுத்தி பிற்காலத்தில் ஆரோக்கியமான பிள்ளைகள் பெறலாம் என்கிற யோசனை ஒன்று பிரிட்டனில் முன் வைக்கப் பட்டிருக்கிறது.

பிரிட்டனில் இருக்கும் 18 வயது ஆண்கள் அனைவரின் விந்தணுக்களும் உறை நிலையில் பாதுகாக்கப்பட்டு, அந்த விந்தணுக்கணைப் பயன்படுத்தி அவர்கள் பிற்காலத்தில் குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் 

என்று டண்டீயில் அபெர்டி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கெவின் ஸ்மித் பரிந்துரை செய்திருக்கிறார்.

வயதான ஆண்களின் விந்தணுக்களில் இருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சில வகை நோய்கள் உருவாகும் சாத்தியங்கள் கூடுதலாக இருப்பதால், 

இளவயது விந்தணுக்களை சேமித்து வைத்து அதைப் பயன்படுத்தி பிள்ளைகளை பெற்றுக் கொள்வதன் மூலம், குழந்தைகளின் எதிர்கால நோய்களை தடுக்க முடியும் என்கிறார் அவர்.

 18 வயதில் எல்லா ஆண்களும் விந்தணுக்களை சேமிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் கெவின் ஸ்மித்

"வயதான ஆண்களில் பெரும்பான்மை யானவர்கள் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதில் சில ஆபத்துக்கள் இருக்கவே செய்கின்றன.

ஆண்களுக்கு வயதாக, ஆக, அவர்களின் விந்தணுக்களில் மரபணுமாற்றக் கோளாறுகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மரபணு மாற்றங்களால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே ஆண்களுக்கு வயதாக ஆக, அவர்களின் விந்தணுக்களின் மரபணு மாற்றத்தால் ஏற்படக்கூடிய குறிப்பிட்ட சில வகையான பாதிப்புகளும் அதிகரிக்கும்.

இத்தகைய மரபணு பாதிப்புகள் பல வகைப்பட்டன. குறிப்பாக நரம்பு மண்டலம் மற்றும் உளவியல் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது.

ஆடிசம் என்கிற மனவளர்ச்சி குன்றிய நிலை, ஸ்கிட்சோப்ரீனியா என்கிற மனப்பிறழ்வு நோய் மற்றும் அறிவுத்திறன் குறைபாடு உள்ளிட்ட 

பல்வேறு வகையான நோய்கள் உருவாக்கும் வகையில் வயதான ஆண்களின் விந்தணுக்களில் மாற்றம் ஏற்படுகிறது," என்று பிபிசியிடம் விளக்கினார் அபெர்டி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கெவின் ஸ்மித்.

இந்த பிரச்சனையை தவிர்க்கும் வகையில் பிரிட்டனில் இருக்கும் 18 வயதான ஆண்கள் அனைவரின் விந்தணுக்களையும் தேசிய சுகாதாரச் சேவையின் மருத்துவமனைகளில் சேகரித்து உறை நிலையில் பாதுகாக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்திருக்கிறார் அவர்.

விந்தணு சேமிப்பு வங்கிகளை அனைவருக்கும் பரிந்துரைக்கிறார் மருத்துவர் கெவின் ஸ்மித்

பிரிட்டன் உள்ளிட்ட பல வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் வயதான ஆண்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் போக்கு அதிகரித்தபடி இருக்கிறது. 

அது மட்டுமல்லாமல், பொதுவாகவே ஆண்கள் தந்தையாகும் சராசரி வயதின் அளவும் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது.

உதாரணமாக 1990களில் இங்கிலாந்திலும் வேல்ஸிலும் ஆண்கள் தந்தையாகும் சராசரி வயது 31 ஆக இருந்தது. அது தற்போது 33 வயதாக அதிகரித்திருக்கிறது.

அறுபது வயதுக்கு மேலும் ஆண்கள் எளிதில் தந்தையாகலாம் என்கிற சாத்தியம் இருந்தாலும் அதற்கான பலாபலன்களும் இருக்கவே செய்கின்றன.

மருத்துவ தார்மீக அற நெறிகளுக்கான ஆய்வு சஞ்சிகையில் தனது பரிந்துரையை முன் வைத்திருந்த மருத்துவர் ஸ்மித், வயதான ஆண்களின் விந்தணுக்களில் ஏற்படும் பாதிப்புக்களின் சதவீத அளவு தனிப்பட்ட ரீதியில் மிகவும் குறைவாகத் தோன்றினாலும், 

ஒட்டுமொத்த நாட்டின் மக்கள் தொகையை கணக்கிட்டுப் பார்த்தால் பாதிப்பின் அளவு மிகப்பெரிதாக இருக்கும் என்கிறார் அவர். உறை நிலை விந்தணு சேமிப்பு உகந்த தீர்வல்ல என்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன

எனவே இளவயது விந்தணுக்களை பாதுகாப்பது விதியாக்கப்பட வேண்டும் என்கிறார் அவர். சமூகத்தின் நன்மையை கணக்கில் எடுத்துக் கொண்டால், தற்போதைய தலைமுறையின் தந்தையாகும் ஆண்களின் வயது தான் 

அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் என்பது குறித்து நாம் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் பிபிசியிடம் வலியுறுத்தினார்.

அப்படியானால் ஆண்கள் எந்த வயது வரை இயல்பாக தந்தையாகலாம்? எந்த வயதுக்குப் பிறகு ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் தங்களின் இளவயது விந்தணுக்களை பயன்படுத்தி தந்தையாக வேண்டும்? என்கிற கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 

இதற்கு குறிப்பிட்ட வயது என்று ஒன்றை வரையறுப்பது கடினம் என்றாலும், நாற்பது வயது கடந்த ஆண்கள் தமது இளவயது விந்தணுக்களை பயன்படுத்தும்படி பரிந்துரைக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

பிரிட்டனில் தனியார் விந்தணு வங்கிகளில் விந்தணுக்களை சேமித்துவைக்க ஒரு ஆணுக்கு ஆண்டுக்கு 150 முதல் 200 பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்ட்கள் கட்டணம் செலுத்தவேண்டும். 

ஆனால் தேசிய சுகாதார சேவை மையத்தில் இந்த விந்தணு சேமிப்பு செய்யும்போது இதற்கான கட்டணத்தை பெருமளவு குறைக்க முடியும் என்கிறார் அவர்.

விந்தணு சேமிப்பும் செயற்கை கருத்தரிப்பு முறையும் சரியான தீர்வாக அமையாது என்று மருத்துவர்கள் மறுப்பு ஆனால் இந்த ஒட்டுமொத்த யோசனையுமே முட்டாள்தனமானது என்கிறார் ஷெபீல்ட் பல்கலைக் கழகத்தின் ஆண் இனப்பெருக்கவியல் துறையின் பேராசிரியர் ஆலன் பேசி.

வயதான ஆண்களின் விந்தணுக்களில் இருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் உருவாகும் சாத்தியம் மிக மிகக் குறைவு என்கிறார் அவர்.

அதுவும் தவிர பல ஆண்களின் விந்தணுக்களை உறை நிலையில் பாதுகாப்பது கடினம் என்கிறார் அவர். 

ஏனென்றால் பல ஆண்களின் விந்தணுக்கள் சரியாக உறையாது என்று சுட்டிக் காட்டும் ஆலன் பேசி, அதனால் தான் பல ஆண்களால் விரும்பினாலும் தமது விந்தணுக்களை தானமாக வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.

எனவே இளவயதில் விந்தணுக்களை சேமித்து வைத்து முதிய வயதில் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்கிற வழிமுறையின் கீழ், அந்த ஆண்களின் மனைவிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செயற்கை கருத்தரிக்கும் சிகிச்சைக்கு உள்ளாக வேண்டி வரும் என்றும் அவர் கூறினார்.

இவரைப் போலவே, பிரிட்டிஷ் மகப்பேறு சங்கத்தின் பேராசிரியர் ஆடம் பேலனும் விந்தணுக்களை இளவயதில் சேமிக்கும் பழக்கத்தை விமர்சிக்கிறார். விந்தணுக்களை உறை நிலையில் வைக்கும் போது அவற்றின் கருவுறச் செய்யும் திறன் பாதிக்கப்படும் என கவலை

ஒட்டுமொத்த இனப்பெருக்க செயற்பாட்டையுமே செயற்கையானதாக மாற்றும் இந்த நடைமுறையில், உறுதியாக குழந்தை பிறக்கும் என்பதற்கோ,

அப்படி பிறக்கும் குழந்தை கண்டிப்பாக எந்த நோயும் இல்லாமல் பிறக்கும் என்பதற்கோ எந்த உத்தரவாதமும் இல்லை என்கிறார் அவர். இது ஒருவித பொய்யான பாதுகாப்புணர்வைத் தருவதாக கூறுகிறார் ஆடம் பேலன்.

அது மட்டுமல்ல, உறை நிலையில் சேமித்து வைக்கப்பட்ட விந்தணுக்கள் முட்டையை கருவாக்கும் திறனில் இயல்பான விந்தணுக்களை விட வீரியம் குறைவாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஆண்களையும் பெண்களையும் தங்களின் விந்தணுக்களையும், கரு முட்டைகளையும் உறை நிலையில் சேமித்து வைக்கச் சொல்வதற்கு பதிலாக, இளவயது தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக் கொள்வதையும், 

வேலைக்குச் செல்வதையும் ஊக்குவிக்கும் வகையிலான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதே இந்த பிரச்சனைக்கு ஏற்கத்தக்க நிரந்தர தீர்வாக இருக்கும் என்கிறார் அவர்.

ஸ்கேண்டிநேவிய நாடுகளில் இத்தகைய அணுகு முறையும், அதற்குத் தேவையான கட்டமைப்பும் சிறப்பாக செயற்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இளம் வயதில் குழந்தைகளை பெற்று வளர்க்க உதவுவதே சரியான தீர்வு என்று மருத்துவர்கள் பரிந்துரை

அதேசமயம், ஆண்களும்கூட தங்களின் எதிர்கால குடும்ப அமைப்பு குறித்து இளவயதிலேயே சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்கிறார் பிரிட்டனின் ஆண் இனப்பெருக்கச் சங்கத்தின் தலைவி ஷீனா லுவிஸ்.

ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி தங்களின் இருபது அல்லது முப்பது (வயது)களில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதே சிறந்தது என்கிற செய்தியை இளம் தலைமுறைக்கு வலுவாக புரியவைக்க வேண்டும் என்கிறார் ஷீனா லுவிஸ்.
Tags: