இனியும் உருப்படியாக செயல்படா விட்டால் !

தேமுதிக கட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அடியை அந்தக் கட்சி சற்றும் எதிர்பார்த்திருக்காது. அந்த அளவுக்கு மரண அடியைக் கொடுத்துள்ளனர். 
அதை விட அந்தக் கட்சிக்கு பெரிய அதிர்ச்சி என்னவென்றால், தேமுதிகவுக்கு மிக மிக நெருக்கத்தில் நாம் தமிழர் கட்சி வந்து அமர்ந்திருக்கிறது என்பதுதான். தமிழக மக்கள் எப்போதுமே அதிரடியான முடிவுகளைக் கொடுப்பதில் அலாதியனவர்கள். 

அந்த வகையில் இந்த முறையும் அவர்கள் பலருக்கும் ஷாக் தரும் வகையிலான தீர்ப்பை அளித்துள்ளனர். அதில் பெரிய அதிர்ச்சி தேமுதிவுக்குக் கொடுத்துள்ள ஆப்புதான். தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை 3வது இடத்திற்குத் தள்ளி விட்டதோடு அந்தக் கட்சியையும் காலி செய்து விட்டனர். 

தேமுதிகவின் வாக்கு வங்கி என்ற மாயை சுக்கு நூறாக சிதறிப் போய் விட்டது. வெறும் 2.3 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது தேமுதிக. பாஜகவை விட குறைந்த வாக்கு சதவீதம் இது. 

அதை விட முக்கியமானது நேற்று பிறந்த நாம் தமிழர் கட்சி தேமுதிகவுக்கு அடுத்த இடத்தில், மிக மிக நெருக்கமான நிலையில் வந்திருப்பதுதான். நாம் தமிழர் கட்சிக்கு 1.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. சொற்பமான வாக்குதானே என்று குறைத்து மதிப்பிட்டு விட முடியாது இதை. 

காரணம், தேமுதிகவுக்கு வெகு அருகே வந்து நிற்கிறது இந்தக் கட்சி. தேமுதிக இனியும் சுதாரித்துக் கொண்டு தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு, மக்களுக்காக பாடுபட முயலாவிட்டால்,

மேலும் மேலும் விஜயகாந்த்தின் சேஷ்டைகள் தொடர்ந்தால் நிச்சயம் நாம் தமிழர் கட்சி, தேமுதிகவை தூக்கியடித்து விரட்டியடித்து விடக் கூடிய வாய்ப்புகள் நிறையவே உள்ளன. 

அதேபோல நாம் தமிழர் கட்சி தனக்குக் கிடைத்துள்ள இந்த வாக்குகளை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் செயல்பட்டால் தன் மீதான விமர்சனங்களையும் மதித்து 

சீர்தூக்கிப் பார்த்து ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுமானால் நிச்சயம் பாஜகவையும் தாண்டிப் போகக் கூடிய வாய்ப்பை மக்கள் கொடுக்கத் தயங்க மாட்டார்கள் என்பது உறுதி. 

யாராக இருந்தாலும், தங்களுக்காக செயல்படக் கூடியவர்களை மட்டுமே மக்கள் விரும்புவார்கள் என்பதை தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Tags: