கொரோனாவால் வீட்டில் இருக்கும் போது, சும்மா இருப்பீங்களா?

சமீபத்தில் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்ட மீம்ஸ் ஒன்று நினைவுக்கு வருகிறது. ‘ஊரடங்கு முடிந்த பிறகு நம்மை வெளியே அனுமதிப்பார்கள். 
கொரோனாவால் வீட்டில் இருக்கும் போது,

ஆனால், நம்மால் வீட்டிலிருந்து வெளியேற முடியுமா?’ என்று கூறும் கணவனும் மனைவியும் உடல் பருத்துக் காணப்படுகிறார்கள். 

வாரக்கணக்கில் வீட்டிலேயே இருந்ததால் உடலில் கொழுப்பு நிறைய சேர்ந்து, வீட்டுக் கதவைவிட அவர்கள் அதிக அகலமாகி விட்டிருக்கிறார்கள்!
நண்பர்களே, இதற்கு சிரித்தால் மட்டும் போதாது. உடலை உறுதியாக வைத்துக் கொள்வது இப்போது இரண்டு மடங்கு அவசியம். வீட்டிலேயே இருப்பதால் அதிகம் உண்ண வாய்ப்பு உண்டு. 

அதேவேளை உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்துக் கொள்வது காலத்தின் கட்டாயம். எனவே, உடற்பயிற்சி மிக அவசியம்.

உடலை உறுதியாக வைத்துக் கொள்ள எவ்வளவோ வழிகள் உள்ளன. ஆனால், உடலைப் பெரிதாக வருத்திக் கொள்ள சிலர் ஒருபோதும் முன்வர மாட்டார்கள். தவிர சில சீனியர் சிட்டிசன்களால், அது முடியாமலும் போகலாம். 

அப்படிப் பட்டவர்களுக்கு இதோ மிக எளிமையான சில பயிற்சிகள். இவற்றின் சிறப்பு என்ன வென்றால் இதற்கென்று தனி நேரம் ஒதுக்காமல் வேறு வேலையைச் செய்யும் போதே இவற்றையும் செய்து கொள்ள முடியும். 
இந்த ஊரடங்கு காலத்தில் தொலைக் காட்சியின் முன்போ கணினியின் முன்போ மிகுந்த நேரம் உட்கார்ந்திருப்போம். அப்போதே கூட இந்தப் பயிற்சிகளை செய்ய முடியும்.

கைகளுக்கு...
கைகளுக்கு

யாருடனாவது கைபேசியில் பேசும் போது ஒரு கைதான் மொபைலைப் பிடித்துக் கொண்டிருக்கும். இன்னொரு கையும் உடலின் மற்ற பல பகுதிகளும் ஏன் சும்மாயிருக்க வேண்டும்?

இடது கையில் செல்போன் இருந்தால் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வலது கையில் கனமான ஒரு பொருளைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பேப்பர் வெயிட், கனமான புத்தகம் போன்றதாக இருக்கலாம்.

1. இப்போது அந்த எடையை உச்சிக்குத் தூக்குங்கள். பிறகு உங்கள் தலைக்குப் பின்புறம் வழியாக, அதை நன்கு கீழே கொண்டு வாருங்கள்.
2. பிறகு, அதைப் பக்கவாட்டில் இங்குமங்குமாக ஆட்டுங்கள். அதாவது, உங்கள் மார்புப் பகுதியை நோக்கி கொண்டு வந்து விலக்குவது போலிருக்க வேண்டும்.

3. பிறகு மெதுவாகக் கையைப் பக்கவாட்டில் இறக்குங்கள், தரையைத் தொடுவது போல். நாள்தோறும் இந்தப் பயிற்சியை சில முறை செய்தால் கைகள் வலிமை பெறும்.

இடுப்புக்கு...
இடுப்புக்கு

இது இடுப்புக்கான பயிற்சி. உடலின் கீழ்ப் பகுதியைச் சிறிதும் அசைக்காமல் இடுப்புக்கு மேல் உள்ள பகுதியை வலதும் இடமுமாக திருப்புங்கள். பார்ப்பதற்கு நீங்கள் யாரையோ தேடுவது போலிருக்கும்.

தொப்பைப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாகி கொழுப்புச் சத்தில் ஒரு பகுதியையாவது இந்தப் பயிற்சி காணாமல் போகச் செய்யும்.

வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை கொஞ்சம் தம் பிடித்து உட்புறமாக இழுத்துக் கொள்ளுங்கள். சில நொடிகளுக்கு வயிற்றுப் பகுதியை உள்ளடக்கியே வைத்திருங்கள். 
பிறகு வழக்கமான நிலைக்கு வந்து சேரட்டும். சில நொடிகள் என்பது தொடக்க நாட்களில் தான். போகப்போக இந்த நேரத்தை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொள்ளலாம். 

வெகு சுலபமாக எந்த சூழலிலும் செய்யக்கூடிய உடற்பயிற்சி இது. தொப்பை கரைய இதுவும் உதவும்.

முதுகெலும்புக்கு...
முதுகெலும்புக்கு

உட்கார்ந்திருக்கும் போது ஆழமாக மூச்சை உள்ளே இழுங்கள். பிறகு மெதுவாக மூச்சை வெளியே விடுங்கள். 

அப்படி மூச்சை வெளியே விடும் போது உங்கள் உடலை முன்புறமாக வளையுங்கள் - இரு கைகளும் தரையைத் தொடும் அளவுக்கு.

பிறகு? உடற்பயிற்சி முடிவடைந்து விட்டது என்று விலுக்கென்று எழுந்து உட்கார்ந்து விடக்கூடாது. மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக் கொள்ளும் 
அதே வேளை, உடலை மேலே கொண்டு வந்து வழக்கமான உட்காரும் நிலைக்குக் கொண்டு வாருங்கள். இப்படி அடிக்கடிச் செய்வது முதுகெலும்புக்கு நல்லது. இறுக்க மில்லாமல் இருக்கும்.

திட உணவு சாப்பிட்ட 45 நிமிடங்களுக்குள் இந்தப் பயிற்சிகளை செய்யக்கூடாது; வலி தோன்றினால் நிறுத்தி விட வேண்டும்; 

இதயப் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே எந்தவித உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிந்தது தானே!
Tags: