சிறு வயதில் பூப்படைவது காரணமும் உணவுகளும் !

கருத்தரிக்கும் கடமை ஒன்றுக்காக மட்டும் படைக்கப்பட்டதல்ல மாதவிடாய் என்பதை நவீன அறிவியல் உணர்ந்தது சமீபத்தில் தான். மாதவிடாய் துவங்கியது முதல் முடியும் வரை. 

அந்த மூன்று நாட்கள் சோர்வையும் வலியையும் களைப்பையும் போக்கும் விஷயத்தில் மட்டும் தான் கவனம் கொண்டிருந்தது மருத்துவ உலகம்.இன்னும் கருத்தரிப்பு சார்ந்த விஷயத்தில் வரும் இடையூறுகளுக்கு மட்டும் மாதவிடாய் உற்றுப்பார்க்கப்பட்டது.

மாதவிடாய் முடிவுக்குப் பின் வந்த கால்சிய குறைவின் ஆஸ்டியோபோரோசிஸ், அல்சர், மார்பகப் புற்றுநோய் மற்றும் மன அழுத்தம் ஆகிய துன்பங்கள்தாம் அட! இந்த மாதவிடாய் பல்வேறு உடல் செயல்பாடுகளுடன் தொடர்புடையது போலும் என்ற புரிதலை துவக்கியது.

சரியாக 11-14 வயதில் துவங்கும் இந்த மாதவிடாய் தற்போது 8 வயதில் 9 வயதில் துவங்க ஆரம்பித்துள்ளது..ஏனிந்த அவசரம்? எப்படி நிகழ்கிறது இந்த மாற்றம்? என்ற சிந்தனை இன்று பல மருத்துவ ஆய்வாளர்களிடையே வேகமாக எழுந்துள்ளது. 

உணவா? வாழ்வியலா?பாரம்பரியமா? சுற்றுச்சூழலில் நிகழும் மாசுக் குவியலா? மன அழுத்தமா? மருந்தா? இன்னும் என்ன காரணத்தால் இந்த அவசரமாக வெகு இளம்வயதில் ஏற்படுகிறது

இந்த மாதவிடாய் என்ற ஆய்விற்கு இன்னும் சரியாய் முடிவு கிடைக்கவில்லை.. ஆனால் பல முக்கிய காரணங்கள் முதல் ஆய்வுத் தகவல் அறிக்கைகள் வந்து சேர ஆரம்பித்துவிட்டன. என்ன அவை?

அதில் முதலும் முக்கியமும் மான காரணம் “நம் உணவு “

1 ) பிராய்லர் கோழி

2) பால்

3) ஓட்ஸ்

முதலில் பால்:

“அடிக்கடி பால் வேண்டாம்” பால் (என்றால் மாட்டுப்பால்) நான் அடிகடி சொல்வதுண்டு “மாட்டுப்பால் கன்றுகாக தாய்ப்பால் தான் குழந்தைகாக” சமீபமாக பால் மீதான
குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்று கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் சிறுவயதில் அதிகம் பால் மட்டும் குடிக்கும் குழந்தைகள் சீக்கிரமாக பூப்பெய்துகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது. 

இனி பெண் குழந்தைகளை கூடுதல் பால் கொடுத்து, பாலூட்டி வளர்த்த கிளியாக்க வேண்டாம்.. அப்புறம் 4 ம் வகுப்பு படிக்கையிலேயே அதிகம் அவஸ்தைப்பட வைக்கும் அந்த குழந்தையை.

பால் மட்டுமல்ல, பால்பவுடர் கலந்து செய்யப்படும் சாக்லேட்டுகளாலும் இது நிகழக் கூடும். கன்னாபின்னாவென மில்க் சாக்லேட் சாப்பிடும் கூட்டம் இன்று நடுத்தர வர்க்கத்தில் அதிகம்.. 

என் குழந்தை கண்ட கண்ட மிட்டாய் எல்லாம் சாப்பிடுவது கிடையாது, ஒன்லி மில்க் சாக்லேட்” என்று பெருமைப்படும் அப்பாவி அம்மாவின் குழந்தை ஓவர் வெயிட்டாகத் தான் திரியும். 

இந்த குட்டி குண்டுக்கள் கூட விரைவில் பூப்படையும் என்கிறது அறிவியல். இன்னும் இது போன்ற சிறுவயது குண்டு குழந்தைகள் விரைந்து மிக இளம் வயதில் பூப்படைவது மட்டுமல்லாமல், சரியாக மாத மாதம் இதனைப் பெறுவதில்லை.. 

சினைப்பையினுள் நீர்க்கட்டிகள் உருவாகி பின்னர் பூப்பும் முழுமையாய் irregular ஆகிவிடும். Polycystic ovarian disease இன்று அதிகம் பெருகி, ஒழுங்கற்ற மாதவிடாய் வருவதற்கும், இளவயது குண்டும், சீக்கிரம் பூப்பெய்துவதும் காரணமாகிவிடும்.

மாடு கூடுதலாகப் பால் பீச்ச RCBGH(recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் சேர்ப்பதை மேனாட்டு FDA – வே அங்கீகரித்திருக்கிறது.

இந்த RCBGH(recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் பாலிலும் தயிரிலும் மில்க் சாக்லேட்டிலும் இருக்கும் பட்சத்தில், அதுவும் குழந்தைகளை விரைவில் பூப்பெய்த வைக்கும்.

அடுத்தது பிராய்லர் கோழி :

“சிக்கனில்லாமல் எம் பொண்ணு சாப்பிடவே மாட்டாளாக்கும்” என்று இனி பெருமை கொள்ள வேண்டாம். அதிலும் தற்போது பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழிக்கறிகளில் சேர்க்கப்படும் சில ஹார்மோன்கள் 8வயதிற்கு முன்னர் பூப்பெய்துவதற்கானக் காரணமாக கருதுகிறார்கள்.”

இந்த மேனாட்டு கோழிக்கறி கடைகள் பல இப்போது படு அலங்காரமாக வந்திருக்கிறதே! . அதற்காக சிறு பிள்ளைங்களுக்கு கோழியே காட்ட வேண்டாம் என்றல்ல. 

நாட்டுக் கோழியை கொடுங்க (காலை இட்லிக்கு கொத்துக்கறி; மத்தியானம் சிக்கன்பிரியாணி, மாலை சிக்கன் லாலிபப் என புகுந்து விளையாடுவதை, “வளர்ற பிள்ளை அதைப்போயி..” என பேசாமல் இருக்க வேண்டாம்.) அதையும் குறைவாகொடுங்க

பிராய்லர் கோழியில் மட்டுமல்ல, பதப்படுத்தபட்டு டின்களில் அடைக்கபட்ட புலாலிறைச்சியில் அதிக எடை கிடைக்க பல ஹார்மோன்கள் சேர்ப்பது, எல்லா விலங்கிறைச்சியிலும் நடக்கிறது. 

இதில் சேர்க்கப்படும் ஈஸ்டர்டியால் ஹார்மோன் கொஞ்சம் கூடுதலாக அப்படியே இறைச்சியிலும் இருப்பதுதான் இந்த இளம் வயது பூப்பிற்கு காரணம் என மேல்நாடுகளில் சண்டையே நடந்து வருகிறது. 

நாம தான் இந்தியாவை உரம் போட்டு வளர்க்க, அத்தனை வெளிநாட்டுக் குப்பையையும் சிகப்புக்கம்பளம் விரித்து கடை விரிக்கிறோமே! நாளை நாமும் இந்த கூக்குரலிட வேண்டியிருக்கலாம்.

அப்புறம் ஓட்ஸ்:

எப்போதும் இல்லாத அளவு இப்போது ஓட்ஸ் வியாபாரம் பெருகிவருகிறது. வணிக உத்திகள் சரியாக இருந்தால் எதையும் எங்கும் கொண்டு செல்ல்லாம் என்ற விதிக்கு தற்போதைய உதாரணம், சத்தியமங்கலம் காடு முதல் சங்கரங்கோயில் முள்ளிக்குளம் வரை அமோகமாக விற்கப்படும் ஓட்ஸ்தான். 

இந்த ஓட்ஸிலும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் தரும் க்ளூட்டன் சத்து கூடுதலாக உள்ளது. ஐஸோஃப்லாவின்ஸ், லிக்னைன் சத்துக்கள் அதிகமுள்ள எந்த தாவரமும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் 

உடலுக்கு தரக் கூடியவை அந்த வரிசையில் எள், உளுந்துக்கு இணையாக ஓட்ஸ்-உம் ஒய்யாரத்தில் உள்ளது. “நாங்க ஒட்ஸ் சாப்பிட்டு ஒல்லியாயிட்டு இருக்கோம்னு,” நினைச்சு ’நாகரீக’ பாட்டிகள் ஒரு டம்ளர் உங்க பேத்திக்கும் இனி அடிக்கடி தர வேண்டாம்.

அட! கொஞ்சம் சீக்கிரம் வயதிற்கு வந்தால் என்ன? என்போருக்கு ஒரு செய்தி… மார்பகபுற்று நோய் வரும் வாய்ப்பு சீக்கிரம் வயதிற்கு வரும் குழந்தைகட்குத்தான் அதிகமாம். அதுவும் தற்போது மார்பகப் புற்றுநோய் மிக அதிகமாக வருவதில் மருத்துவ உலகம் திணறிக்கொண்டிருக்கிறது. 

இன்னும் ஒரு கூடுதல் செய்தி.. விரைவாக பூப்பெய்தும் பெண்களின் வாழ்நாள் விகிதம் சரியான வயதில் பூப்பெய்தும் பெண்ணைக்காட்டிலும் குறைவு என மருத்துவப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு-என்பதை மறக்க கூடாது. கோழியோ, பாலோ ஓட்ஸோ எப்போதோ சாப்பிடுவது நிச்சயம் கேடு கிடையாது. 

விளம்பரம் பார்த்தோ, வசதியாக இருக்கிறதே என்ற சோம்பலிலோ, குழந்தைகள் அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவதுதான் ஆபத்தாகக் கூடும்.
Tags: