தலித் மக்களின் முகமாக உருவெடுத்தவர் !

அரசு தடவியல் துறை ஊழியராக இருந்து கொண்டே 1980களில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காக போராட தொடங்கி இன்று தலித் மக்களின் முகமாக உருவெடுத்திருக்கிறார் 
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக அரசியலில் காலந்தோறும் ஆதி திராவிடர் சமூகத் தலைவர்கள் ஏராளமானோர் உருவாகி வந்துள்ளனர்... 

1980களில் இந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தத்துவார்த்த புரிதலோடு களமிறங்கியவர் தொல். திருமாவளவன். அரியலூர் மாவட்டம் அங்கனூரில் 1962-ம் ஆண்டு பிறந்த திருமாவளவன் சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர். 

அவர் படித்தது 1980களின் தொடக்கம்... தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் தொடக்க காலம்... தமிழீழ இனப்படுகொலைகள் அரங்கேறிய காலம்.. ஆகையால் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளராக மாணவர் பருவத்தில் செயல்பட்டார் திருமாவளவன். 

விடுதலைப் புலிகளின் பெயரிலேயே கையெழுத்து பத்திரிகையும் நடத்தியவர். திராவிடர் கழகத்தினருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் தடவியல் துறையில் அரசு ஊழியராக மதுரையில் பணியாற்றினார் திருமாவளவன். 

அப்போது அதாவது 1988-ல் மலைச்சாமி தலைமையிலான தலித் பேந்தர்ஸ் என்ற அமைப்பில் இணைத்துக் கொண்டு தீவிரமாக இயங்கினார். திடீரென மலைச்சாமி இறந்துபோக தலித் பேந்தர்ஸ் அமைப்பின் தலைவரானார் திருமாவளவன். 

அதன் பின்னர் தொடர்ந்து தீவிரமாக தலித்திய செயற்பாட்டாளராக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடி வந்த திருமாவளவன் 1997-ம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்த காலத்தில் தலித் பேந்தர்ஸ், விடுதலைச் சிறுத்தைகளானது.

1999-ம் ஆண்டு வரை தேர்தல் பாதையை புறக்கணித்து வந்தது விடுதலைச் சிறுத்தைகள். 1999-ல் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது விடுதலை சிறுத்தைகள். 

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 2001 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இணைந்தது. 

அதில் மங்களூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் திருமாவளவன். 2-வது முறையாக 2004 லோக்சபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் திருமாவளவன். 

2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தது விடுதலை சிறுத்தைகள். இத்தேர்தலில் 2 இடங்களில் வென்றது விடுதலைச் சிறுத்தைகள். 

லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்டு வென்று எம்.பி.யானார் திருமாவளவன். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் திருமாவளவன். 

தற்போதைய சட்டசபை தேர்தல் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுகவுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி தேர்தல் களத்தை சந்தித்து வருகிறார் தொல். திருமாவளவன்.
Tags:
Privacy and cookie settings