குடல் இறக்கம் சரி செய்வது எப்படி? #hernia

வயிற்றில் உண்டாகும் நோய்களில் வயிற்றுக்கு வெளியே தெரியும் நோய்கள் சில உள்ளன.அவற்றுள் ‘குடல் இறக்கம்’ முக்கியமானது. 
குடல் இறக்கம் சரி செய்வது எப்படி?

சிலருக்கு குடலின் ஒரு பகுதி, வயிற்றுக்கு முன்புறம் உள்ள தசைச் சுவரின் வலு குறைந்த பகுதி வழியாக வெளியே பிதுங்கித் தெரியும். 

அதைத் தான் ‘குடல் பிதுக்கம்’ அல்லது ‘குடல் இறக்கம்’ (Hernia) என்று அழைக்கிறோம்.

குழந்தைகள் ஊதி விளையாடும் சாதாரண பலூனை பார்த்திருப்பீர்கள். பலூனில் காற்றை ஊதும் போது, அது நல்ல பலூனாக இருந்தால், ஒரே சீராக விரிவடையும். 

ஆனால், சில பலூன்களில் ஒன்றிரண்டு இடங்களில் இயல்புக்கு மீறி புடைப்பதையும் பார்த்திருப்பீர்கள். 
பலூனில் வலுவிழந்த பகுதிகளில் காற்றின் அழுத்தம் அதிகமாகும் போது இந்தப் புடைப்பு அல்லது பிதுக்கம் ஏற்படுகிறது. 

இது மாதிரி தான் நம் வயிற்றிலும் குடல் பிதுக்கம் ஏற்படுகிறது. வயிற்றின் அமைப்புவயிறு மற்றும் முதுகுப் பகுதிகள் பல தசைகளால் ஆனவை. 

இவற்றில் முதுகுப் பகுதி உறுதியான முதுகெலும்பு மற்றும் வலு மிகுந்த தசைகளால் ஆனது. 

எனவே, குடலானது வயிற்றின் பின்புறமாக பிதுங்குவதற்கு வழியில்லை. ஆனால், வயிற்றுப் பகுதியோ சற்றே வலுக்குறைந்த தசைகளால் ஆனது.

வயிற்றுக்குள் உள்ள உறுப்புகளைப் பாதுகாப்பதற்கு ஒரு சுவர் போல் அமைந்திருக்கும் இத்தசைகள், நாம் சுவாசிக்கும் போது உப்பி மீண்டும் பின்னிலைக்குத் திரும்ப வேண்டும். 

இதற்கு உதவும் வகையில் இந்தத் தசைகள் அமைந்துள்ளன. 

இவற்றில் சில தசைப்பகுதிகள் மட்டும் நம் உடற்கூறு அமைப்பின்படி வலு குறைந்து காணப்படுகின்றன. இவ்விடங்களில் தான் குடல் இறக்கம் ஏற்படுகிறது.
குடல் இறக்கம் ஏற்படும் பகுதிகள்

1. ‘கவட்டைக் கால்வாய்’ பகுதி (Inguinal region): 
கவட்டைக் கால்வாய் பகுதி - Inguinal region

வயிற்றில் உள்ள உறுப்புகள் ஒரு மெல்லிய உறையால் சூழப்பட்டுள்ளது. இதற்கு ‘வயிற்றறை உட்சுவர்’ (Peritoneum) என்று பெயர். 

இந்தச் சுவரின் கீழ்ப்பகுதியில், அதாவது, வயிறும் தொடையும் இணைகிற இடத்தில், ‘கவட்டைக் கால்வாய்’ உள்ளது. வயிற்றையும் விரைப்பையையும் இணைக்கின்ற பாதை இது. 
ஆண்களுக்கு இதன் வழியாக வயிற்றி லிருந்து விந்துக் குழாய், விரைக்கு ரத்தம் வழங்கும் ரத்தக் குழாய்கள், நரம்புகள், நிணநீர்க் குழாய்கள் ஆகியவை விரைப்பைக்குச் செல்கின்றன. 

பெண்களுக்கு கருப்பையின் ‘உருண்டைப் பிணையம்’ (Round ligament) இதன் வழியாகச் செல்லும்.

பொதுவாக, ஆண்களுக்குக் கவட்டைக் கால்வாய் மிகவும் இறுகலாக இருக்கும். விந்துக்குழாய், விரை ரத்தக் குழாய்கள், 

நரம்புகள், நிணநீர்க் குழாய்கள் தவிர வேறு எந்த உறுப்பும் இதன் வழியாக வெளியே வர முடியாது.

சில நேரங்களில் வயிற்றறை உட்சுவர் தளர்ந்து போகும்போது, கவட்டைக் கால்வாயும் சற்று தளர்ந்து போகும். 
இதன் விளைவாக, வயிற்றி லிருந்து குடலின் ஒரு பகுதியும் வயிற்றுக் கொழுப்புறையும் (Omentum) கவட்டைக் கால்வாயைத் துளைத்துக் கொண்டு விரைப்பைக்குள் பிதுங்கும். 

இது ஆரம்பத்தில் விரைப்பையின் மேல் பகுதியில் ஒரு எலுமிச்சைப் பழம் அளவுக்குப் புடைப்பாகத் தெரியும். இதைத்தான் ‘கவட்டைக் குடல் இறக்கம்’ (Inguinal hernia) என்கிறோம். 

பெண்களுக்குப் பெண்ணுறுப்பின் மேல் பகுதியில் இப்புடைப்பு தெரியும். இந்தக் குடலிறக்கம் ஆண்களுக்கு 90 சதவிகிதமும் பெண்களுக்கு 50 சதவிகிதமும் ஏற்படுகிறது.

2. மேல் தொடைப் பகுதி (Femoral region): 
மேல் தொடைப் பகுதி - Femoral region
மேல் தொடையும் முன்புற இடுப்பும் இணைகின்ற இடத்தில் ‘தொடைக் கால்வாய்’ (Femoral canal) உள்ளது. 

இதன் வழியாக வயிற்றிலிருந்து காலுக்கு ரத்தக் குழாய்களும், நரம்புகளும், நிணநீர்க் குழாய்களும் செல்கின்றன. 

சிலருக்கு இதன் வழியாகவும் குடல் இறங்கி விடும். இந்த நிலைமையை ‘தொடைக் குடல் இறக்கம்’ (Femoral hernia) என்கிறோம்.

3. தொப்புள் பகுதி (Umblical region): 

சிலருக்கு வயிற்றில் உள்ள தொப்புள் வழியாகக் குடல் இறங்கி விடும். இதற்குத் ‘தொப்புள் வழிக் குடல் இறக்கம்’(Umbilical hernia) என்று பெயர்.

4. தழும்பு வழியாகவும் (Operative scar) குடலிறக்கம் :
ஏற்கனவே வயிற்றில் ஏதாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தழும்பு வழியாகவும் (Operative scar) குடலிறக்கம் ஏற்படலாம். 

காரணம், இவர்களுக்கு அறுவை சிகிச்சையின் போது தையல் போட்டிருப்பார்கள். 

நாளடைவில், இந்தத் தையல் போடப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
தழும்பு வழியாகவும் குடலிறக்கம் - Operative scar

அப்படிப் பலவீனம் அடைந்துவிட்டால், அந்தப் பகுதிக்கு அருகில், வயிற்றிலிருக்கும் பகுதிகள் அந்தத் தழும்பு வழியாக வெளிப்பக்கத்தில் புடைக்கும். 

இதற்குத் ‘வெட்டுவழிக் குடல் இறக்கம்’ (Incisional hernia) என்று பெயர். பெண்களுக்கு இவ்வகை குடலிறக்கம் அதிகமாக வருகிறது. 

காரணம், இவர்களுக்குக் குழந்தை பிறக்கும் போது ‘சிசேரியன் அறுவை சிகிச்சை’ செய்யப் படுவதாலும், 

கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப் படுவதாலும் ‘வெட்டுவழிக் குடலிறக்கம்’ ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டாகின்றன.

5. தழும்பில் குடல் இறக்கம் (Recurrent hernia) ஏற்பட காரணம் என்ன?
இது போல ஏற்கனவே குடல் இறக்கத்துக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தழும்பிலேயே மீண்டும் குடல் இறக்கம் (Recurrent hernia) ஏற்படுவதும் உண்டு. 

காரணம் என்ன? ஆண், பெண், குழந்தை, இளைஞர், முதியோர், ஏழை, பணக்காரர் என்று எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல்
அனைவருக்கும் குடல் இறக்கம் ஏற்படலாம். என்றாலும் இது ஏற்படுவ தெற்கென்று சில காரணங்கள் உள்ளன. அவற்றையும் தெரிந்து கொள்வோம்.

வயிற்றுக்குள் அழுத்தம் அதிகமானால் குடல் இறக்கம் ஏற்படும். அளவுக்கு மீறிய உடற்பருமன் இதற்கு நல்ல உதாரணம். 
தழும்பில் குடல் இறக்கம் ஏற்பட காரணம் என்ன? - Recurrent hernia
தொப்பை உள்ளவர்களுக்கு வயிற்றுத் தசைகளில் கொழுப்பு சேர்வதால் அங்கு அழுத்தம் அதிகரித்து அத்தசைகள் வலு விழக்கின்றன. 

இதனால் தொப்பை உள்ளவர்களுக்கு குடல் இறக்கம் உண்டாகிறது. வயிற்றில் கட்டிகள் இருந்தாலும் அவற்றின் அழுத்தம் காரணமாக குடல் இறக்கம் ஏற்படுவதுண்டு.

ஆஸ்துமா, தீராத இருமல், அதிக பளுவான பொருளை திடீரெனத் தூக்குதல், குழந்தைகளுக்கு ஏற்படும் 

கக்குவான் இருமல், சிறுநீர்த்துளை அடைத்துக் கொள்வது, புராஸ்டேட் சுரப்பி வீங்கிக் கொள்வது போன்ற நிலைமைகளில் குடல் இறக்கம் உண்டாகும். 

அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும் போது குடல் இறக்கம் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது.

எப்படியெனில், மலச்சிக்கலின் போது முக்கி மலம் கழிப்பதால், வயிற்றுக்குள் அழுத்தம் அதிகரிக்கிறது. இது நாளடைவில் வயிற்றறை உட் சுவரைத் தளர்ச்சி அடையச் செய்கிறது. 
இது குடல் இறக்கத்துக்கு வழி அமைக்கிறது. அடிக்கடி கர்ப்பமாகும் பெண்களுக்கு குடல் இறக்கம் உண்டாகலாம். முதுமை காரணமாக வயிற்றறைச்சுவர் தளர்ந்து போகலாம். 

இதனால் வயதானவர்களுக்கும் குடல் இறக்கம் ஏற்படலாம். குழந்தைகளுக்குப் பிறவியிலேயே கூட குடல் இறக்கம் (Congenital hernia) ஏற்படுகிறது. 
Tags: