வாக்களித்து விட்டு பேட்டி தர மறுத்த விஜயகாந்த் !

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவியுடன் வந்து வாக்களித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், பேட்டியளிக்க மறுப்பு தெரிவித்ததால் செய்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 
பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதாலும், வெயிலுக்கு பயந்தும் இன்று காலை நேரத்திலேயே பல இடங்களில் கட்சித் தலைவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். 

அந்தவகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா மற்றும் மகன்களுடன் சேர்ந்து சென்னை சாலிகிராமத்திலுள்ள காவேரி பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். 

தேர்தல் பிரச்சார காலங்களில் அவ்வப்போது தனது கோப முகத்தைக் காட்டி, சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசி சர்ச்சைகளில் சிக்கினார் விஜயகாந்த். 

இப்போது மட்டுமின்றி இதற்கு முன்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போதும், ‘தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க, தூ' என துப்பி அவர் பிரச்சினைகளில் சிக்கியது உண்டு.

இதனால், விஜயகாந்தின் பேட்டியை எதிர்நோக்கி செய்தியாளர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால், விஜயகாந்த் வாக்குப்பதிவு செய்வதை படமெடுக்க செய்தியாளர்கள் முண்டியடித்த போதே, லேசாக கோபப்பட்டார் விஜயகாந்த். 

அதன் தொடர்ச்சியாக ஓட்டுப் போட்டுவிட்டு பேட்டி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு செய்யாமல் பேட்டி கொடுக்க மறுத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார் அவர். 

செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்ற பலத்த குற்றச்சாட்டுக்கு ஆளான முதல்வர் ஜெயலலிதா கூட குறிப்பிட்ட சில சேனல்களுக்கு மட்டும் பேட்டியளித்துச் சென்ற நிலையில், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த் பேட்டி அளிக்காமல் சென்றது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings