ஆர்.கே.நகர் தொகுதியில், அழியக்கூடிய மை...திமுக அதிர்ச்சி !

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், அழியக்கூடிய மை பயன்படுத்தப்படுவதால் கள்ள ஓட்டுப் போடும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். 
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வரானார். 

இதனால் சட்டசபை தேர்தலிலும் அதே தொகுதியில் அவர் போட்டியிட்டுள்ளார். இத்தொகுதியில் திமுக சார்பில் சிம்லா ராஜேந்திரனும், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி சார்பில் முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் அழியாத மைக்குப் பதிலாக, எளிதாக அழியக்கூடிய பேனா மையை வாக்காளர்களின் விரல்களில் தடவி வருவதாக திமுகவினருக்கு தகவல் கிடைத்தது. 

உடனடியாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு விரைந்து சென்ற திமுகவினர், அங்கிருந்த மையைச் சோதித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தேர்தல் ஆணையம் வழங்கிய அழியாத மை எப்படி மாறியது என அவர்கள் குழப்பம் அடைந்தனர். 

மேலும், காலையில் சிறிது நேரம் மின் தடை ஏற்பட்டதாகவும், அதனை பயன்படுத்தி அதிமுகவினர் இவ்வாறு மையை மாற்றி விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதனால் கள்ளஓட்டு அபாயம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings