காய்ச்சல் வந்தால் முதலுதவி செய்வது எப்படி?

மழைக்காலம் தொடங்கி விட்டது. இனி, நோய்க் கிருமிகளுக்குக் கொண்டாட்டம் தான்.  
சரியாகப் பராமரிக்கப் படாத தெருக்களும் சாலைகளும் இனி வெள்ளக்காடாகி  விடும்.

அப்போது சாக்கடை நீர் மழைத் தண்ணீரில் கலந்து விடும். அதுவே குடிநீராக வீட்டுக்கு வந்துசேரும்.


விளைவு, காய்ச்சல், தலைவலி, வாந்தி, பேதி என்று நோய்கள் தலைதூக்கும். 

‘ஃபுளு’ காய்ச்சல்: 

மழைக்காலத்தில் பலருக்கும் பொதுவாக வரக்கூடியது ‘தடுமக்காய்ச்சல்’ என்று அழைக்கப்படுகிற ‘ஃபுளு’ காய்ச்சல்.

இது வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. அசுத்தமான காற்று மூலம் பரவுகிறது.

காய்ச்சலுடன் மூக்கு ஒழுகுதல், கண்ணில் நீர் வடிதல், இருமல் போன்ற அறிகுறிகள் இதில் இருக்கும். காய்ச்சல் ஒரு வாரம் நீடிக்கும். 

காய்ச்சலைத் தடுக்க 6 யோசனைகள்:

1. சுயசுத்தம் பேண வேண்டும்.

2. சுற்றுப்புற சுகாதாரம் காக்க வேண்டும்.

3. சுத்தமான குடிநீர் குடிக்க வேண்டும். அல்லது காய்ச்சி ஆற வைத்த தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

4. ஈக்கள் மொய்த்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

5. சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம்.

6. தடுப்பூசிகளை முறைப்படி போட்டுக் கொள்ள வேண்டும் .

காய்ச்சலுக்கு முதலுதவி: 

1. காய்ச்சலைக் குறைக்க ‘பாராசிட்டமால்’ மாத்திரையைச் சாப்பிடலாம்.

2. காய்ச்சல் அதிகமாக இருந்தால், பஞ்சு அல்லது பருத்தியிலான துண்டு ஒன்றை சாதாரணத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கொண்டு 

நோயாளியின் நெற்றி, மார்பு, வயிறு, அக்குள், தொடை முதலிய இடங்களில் விரிக்க வேண்டும்.

3. துணி உலர்ந்ததும் மீண்டும் அதைத் தண்ணீரில் நனைத்து உடலில் விரிக்க வேண்டும். 

இப்படிச் செய்தால் அரை மணி நேரத்தில் காய்ச்சல் குறைந்து விடும்.

4. காய்ச்சலுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். அதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது. 

டெங்கு காய்ச்சல்:

‘டெங்கு’ எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இந்தக் காய்ச்சல் வருகிறது. ‘எய்டஸ் எகிப்தி’ என்னும் கொசுக்கள் இந்தக் காய்ச்சலைப் பரப்புகின்றன. 
குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, வாந்தி, இருமல், தொண்டை வலி ஆகிய அறிகுறிகள் காணப்படும். பல் ஈறு மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் கசியும்.

என்ன முதலுதவி?

1. ‘ஃபுளு’ காய்ச்சலுக்குச் சொல்லப் பட்டவை இதற்கும் பொருந்தும்.


2. டெங்குவைத் தடுக்க வேண்டுமென்றால் கொசு கடிப்பதைத் தடுக்க வேண்டும். அதற்கு ‘டை எதில் டாலுவாமைடு’ 

அல்லது ‘டை எதில் பென்சாமைடு’ எனும் மருந்து உள்ள களிம்பை பகல் மற்றும் இரவில் உடலில் பூசிக் கொண்டால் கொசு கடிக்காது.

3. குழந்தைகளுக்கு உடல் முழுவதும் மூடக்கூடிய முழுக்கை ஆடைகளை அணிவிப்பது நல்லது.

4. கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க வீட்டிலும் வீட்டைச் சுற்றியும் நீர் தேங்க அனுமதிக்கக் கூடாது.

5. தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு மற்றும் காலரா:  

பாக்டீரியா மற்றும் ரோட்டா வைரஸ் கிருமிகள் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் நமக்குப் பரவுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. 

ஈக்களும் எறும்புகளும் இக்கிருமிகள் நமக்குப் பரவ உதவுகின்றன.

நோயாளியின் உடல் இழந்த நீரிழப்பைச் சரிசெய்வதே சிகிச்சையின் முக்கிய நோக்கம்.

இதற்கு என்ன முதலுதவி?

1. சுத்தமான குடிநீரை அடிக்கடி குடிக்க வேண்டும் அல்லது ‘எலெக்ட்ரால்’ பவுடர்களில் ஒன்றைக் குடிக்கலாம்.

2. கொதிக்க வைத்து ஆற வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரையையும் 5 கிராம் சமையல் உப்பையும் கலந்து கொள்ளவும்.

3. இதை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 50 மிலி அளவு குடிக்க வேண்டும்.

4. இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் உப்பு சோடா குடிக்கலாம்.

வயிற்றுப் போக்கைத் தடுக்கும் வழிகள்:

1. சாப்பிடும் முன்பும் பின்பும் கைகளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

2. தெருக்களில் மலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

3. தண்ணீரை லேசாக சூடாக்கிக் குடிப்பது பாதுகாப்பு தராது. குறைந்தது 10 நிமிடம் கொதிக்க வைத்து, ஆற வைத்துக் குடிப்பது நல்லது.
4. குடிநீர் பாத்திரங் களையும் சமைத்த உணவுகளையும் ஈக்கள் மொய்க்காமல் மூடி வைக்க வேண்டும்.

5. காலராவுக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

சென்னை கண்நோய்:

‘அடினோ வைரஸ்’ கிருமிகளின் தாக்குதலால் இந்த நோய் வருகிறது. மழைக்கால ஆரம்பத்தில் ஆண்டு தோறும் இது தோன்றுவது வழக்கம்.


அடுத்தவர் களுக்கு மிக எளிதாகப் பரவக் கூடியது. கண் சிவந்து கண்ணீர் வடிதல், கண் எரிச்சல், வலி, வீக்கம் இதன் அறிகுறிகள்.

இதற்குச் சொட்டு மருந்துகள் உள்ளன. மருத்துவர் யோசனைப்படி கண் சொட்டு மருந்தைத் தேர்வு செய்வது நல்லது. 

வலிநிவாரணி மாத்திரைகளும் பலன் தரும்.

கண்நோய் - தடுக்கும் வழிகள்:

1. கண்நோய் வந்தவர் வீட்டில் உள்ள மற்றவர்களிடமிருந்து தள்ளியே இருப்பது நல்லது.

2. கண்ணை அடிக்கடி கசக்கக் கூடாது.

3. கைகளை அவ்வப்போது சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

4. நோயுள்ளவர் பயன்படுத்திய கைக்குட்டை, துண்டு, சோப்பு, தலையணை, பற்பசை போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. 

தலைவலி:

சாதாரண காய்ச்சலில் இருந்து ஆபத்தான மூளைக் கட்டிகள் வரை தலை வலிக்குப் பல காரணங்கள் உண்டு.

குறிப்பாக வைரஸ் காய்ச்சல்கள் எல்லாமே தலைவலியை ஏற்படுத்தும். ‘சைனஸ்’ என்று 

அழைக்கப்படும் முகக்காற்றறை களில் அழற்சி ஏற்பட்டால் தலைவலி வரும்.
ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, கண்பார்வைக் குறைபாடு, மூளைக் காய்ச்சல், 

மூளைக்கட்டி, பல்நோய், காதுநோய், தொண்டை நோய் போன்றவையும் தலை வலியை ஏற்படுத்தும்.

தலையில் அடிபட்டாலும் தலைவலி வரும். அதிக நேரம் தொலைக் காட்சி பார்ப்பது, 

கம்ப்யூட்டர் விளையாட்டு களை விளையாடுவது போன்றவையும் தலைவலிக்குக் காரணமாக லாம்.


பசி கூட தலைவலியை உண்டாக்கும். குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் காலை உணவைச் சாப்பிடாமல் சென்றால் வகுப்பறையில் தலை வலிக்கும்.

தலைவலிக்கு முதலுதவி:

1. பாராசிட்டமால், புரூஃபன் மாத்திரைகளில் ஒன்றைப் பயன்படுத்தி, போதிய ஓய்வெடுத்துக் கொண்டால் சாதாரண தலைவலி சரியாகி விடும்.

2. தலையைச் சிறிது நேரம் அழுத்திக் கொடுக்கலாம்.

3. இளஞ்சூடான தண்ணீரில் துணியை நனைத்து ஒத்தடம் தரலாம்.

4. வலிநிவாரணி தைலங்களை நெற்றியில் தடவலாம்.

5. ‘டிங்சர் பென்சாயின்‘ சொட்டு மருந்தைப் பயன்படுத்தி நீராவி பிடிக்கலாம்.

டாக்டர் கு.கணேசன்
Tags: