திருவாரூர் அருகே பேரளம் பகுதியில்  உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் பள்ளியிலேயே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பேரளம் தனியார் பள்ளி முதல்வர் விஷம் குடித்து தற்கொலை !
திருவாரூர் அருகே பேரளம் பகுதியில்  உள்ள தனியார் பள்ளியில் மருதவஞ்சேரியை சேர்ந்த கணேசன் என்பவரது மகள் சத்யா முதல்வராக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் தாளாளர் திட்டியதாகவும் இதனால் வேலை பார்க்க பிடிக்கவில்லை என கூறி அவரது தந்தையிடம் சத்யா கூறியதாக தெரிகிறது. 

இதனை தொடர்ந்து நேற்று பள்ளிக்கு சென்று பார்த்து வருவதாக கூறி சென்ற நிலையில், பள்ளி தாளாளர் வெற்றிச்செல்வம், சத்யாவுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த சத்யா பள்ளியிலேயே, திடீரென பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. 

உடனடியாக அவரை மீட்ட சக ஆசிரியர்கள், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இன்று அதிகாலை சத்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சத்யா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு  13 வயதில் மகள்  உள்ளார். அவரும் அதே தனியார் பள்ளியில் படித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பேரளம் தனியார் பள்ளி முதல்வர் விஷம் குடித்து தற்கொலை !
சத்யாவின் தற்கொலைக்கு காரணமான பள்ளி தாளார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பேரளம் காவல் நிலையத்தில் சத்யாவின் தந்தை கணேசன் புகார் அளித்துள்ளார். 

சத்யாவின் உடல் மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது