அதிமுக குண்டர்கள் தாக்க முயற்சித்தனர்... வானதி சீனிவாசன் !

துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்புகையில், அதிமுக குண்டர்கள் தன்னை ஆபாசமாகப் பேசி தாக்க முயற்சித்ததாக கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். 
தமிழக பாஜக தலைவர்களில் முக்கியமானவர் வானதி சீனிவாசன். இவர் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். நேற்று இவர் கோவையில் உள்ள ஜெயின் கோயிலுக்கு அருகே துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று திரும்பும் போது, அதிமுக தொண்டர்கள் சிலரால் தாக்கப்பட்டார். 

இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் அவரது கார் பலத்த சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தப்பியோடிய தாக்குதல் நடத்தியவர்களையும் அவர்கள் தேடி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக குண்டர்கள் சிலரே தன்னை ஆபாசமாகப் பேசி தாக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளார் வானதி. 

மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், "துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வெளியே வந்த என்னை கவுன்சிலரோடு சேர்ந்து கொண்டு சுமார் 40 அதிமுக குண்டர்கள் என்னை அங்கிருந்து வெளியேற விடாமல் தடுத்தனர். அப்போது மோசமான வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தினர். 

பின்னர் வேறொரு வாகனம் மூலம் அங்கிருந்து நான் வெளியேற முயற்சித்தேன். அப்போது அந்தக் காரையும் அவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்தன. வன்முறைக்கு முயற்சிப்பது போல, ஆபாசமாகப் பேசி, ரகளையில் அவர்கள் ஈடுபட்டனர்.

இது அதிமுகவின் தோல்வி பயத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. அதோடு பெண் வேட்பாளரை அச்சுறுத்தலாம் என்ற எண்ணமும் தெரிகிறது. என்னுடன் வந்த பெண் நிர்வாகியையும் அவர்கள் ஆபாசமாகப் பேசி, புடவையைப் பிடித்து இழுத்து தாக்கினார்கள். 

தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த பாஜக நிர்வாகிகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியாளரிடமும், தேர்தல் அதிகாரியும் புகார் அளிக்க உள்ளோம். என்னைத் தாக்கிய கவுன்சிலர் தனது வீட்டிலும், அலுவலகத்திலும் பணத்தை பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்து வருகிறார்' என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings