சட்டசபை தேர்தலின் போது, கோடை வெயிலில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ள தலைவர்களுக்காக, 'குளுகுளு' வசதிகளுடன் கூடிய பிரசார வேன்கள் தயாராகி வருகின்றன.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதனால், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சை நடத்தி வருகின்றன.
மார்ச், ஏப்ரல் மாதங்களில், தொகுதி வாரியாக பிரசாரம் செய்ய தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
அதனால், தலைவர்களுக்கான பிரசார வாகனங்கள், தற்போது தயாராகி வருகின்றன.
அதாவது, சிலருக்காக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன; மற்ற சிலர், பழைய வாகனங்களில் மாற்றங்களை செய்யும்படி கூறியுள்ளனர்.
இதுதொடர்பான பணிகள், கரூர், நாமக்கல், கோவை, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் கர்நாடகாவின் பெங்களுரூ நகரங்களில் உள்ள, சில நிறுவனங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு பிரசார வாகனத்திலும், தலைவர்களின் விருப்பத்திற்கேற்ப, 'ஏசி, டிவி, இன்டர்நெட்' போன்றவற்றை பொருத்துவது, தொலைபேசி, கழிப்பறை,
சொகுசு இருக்கைகள் மற்றும் படுக்கைகள் அமைப்பது உட்பட, பலவிதமான உள் அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக, வாகன உள் அலங்கார நிபுணர் ஒருவர் கூறியதாவது:
தேர்தல் நேரத்தில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ள தலைவர்களில் பலர், 50 வயதை கடந்தவர்கள்; வீட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள்.
தேர்தல் பிரசாரத்தின் போது, வேனில் தான் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அத்துடன், தேர்தல் பிரசார நேரம் கோடை காலம் என்பதால், அதற்கேற்ற வகையில் வசதிகள் செய்யப்படுகின்றன.
அதாவது, ஆறு பேர் உட்காரும் வகையில், 'குஷன்' இருக்கை; ஒரு படுக்கை போன்றவை பொருத்தப் படுகின்றன.
இவற்றில் அமர்ந்து, எவ்வளவு நேரம் பயணம் செய்தாலும், முதுகு வலி ஏற்படாது. இதுதவிர, தலைவர்களின் விருப்பத்திற்கேற்ப, உள் அலங்கார வேலைகள் செய்யப் படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
வேனில் இடம் பெறும் வசதிகள்
● தலைவர்களின் விருப்பத்திற்கேற்ப, 50 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விலையுள்ள, நவீன, எல்.இ.டி., 'டிவி' இடம் பெறும். வாகனம் எவ்வளவு வேகமாக சென்றாலும், 'டிவி'யில் காட்சிகள் தெளிவாக தெரியும்
● வேன் முழுவதும் குளிர்ச்சி நிலவ, 'சென்ட்ரலைஸ்டு ஏசி' பொருத்தப்படும்; இதற்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும்
● வாகனத்தில் நின்றபடி தலைவர்கள் பேசும் பேச்சு, துல்லியமாக மக்களுக்கு கேட்க, நவீன, 'மைக், ஸ்பீக்கர்' பொருத்தப்படும்
● தலைவர்கள் ஓய்வு நேரத்தில் பாட்டு கேட்க, 'ஹோம் தியேட்டர்' இடம் பெறும்
● வேனில் உள்ள இருக்கையில் அமர்ந்தபடியே, வேனில் மேல் பகுதிக்கு செல்ல, 'லிப்ட்' வசதியும் உண்டு
● வேனில் உள்ள பேட்டரி மூலம், அனைத்து மின் சாதனங்களையும் இயக்க முடியாது. அதனால், கூடுதலாக, இரண்டு மினி ஜெனரேட்டர்கள் பொருத்தப்படும்.
ஒன்று, 'ஏசி'யை இயக்கவும், மற்றொன்று, மற்ற சாதனங்களை இயக்கவும் பயன்படுத்தப்படும்
● வேனில் ஆறு பேர் அமரும் வகையில், 'குஷன்' இருக்கையும், ஒரு படுக்கையும் அமைக்கப்படும்
● நவீன கழிப்பறை வசதியும் உண்டு
● ஜன்னல் விரிப்பு, தரை விரிப்பு, சிறிய குளிர்பதன பெட்டியும் இடம் பெறும்
● வேனில் உள்ள விளக்குகள் மூலம், அதிக வெளிச்சம் பெற முடியாது. அதனால், அதிக வெளிச்சம் தரக்கூடிய, நவீன எல்.இ.டி., விளக்குகள், வாகனத்திற்குள்ளும், வெளியிலும் பொருத்தப்படும்
● மொத்தத்தில், இந்த வசதிகள் எல்லாம், பல லட்சம் ரூபாய் செலவில் செய்யப் படுகின்றன.


