துணை முதல்வர் பதவி மீது துளிகூட விருப்பமில்லை வைகோ உறுதி......அப்படியா !

துணை முதல்வர் பதவி மீது தமக்கு துளிகூட விருப்பமில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று நடந்தது.


கூட்டத்தில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் சுதிஷ் கலந்துகொண்டு பேசுகையில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று அமைக்கப்படும்

அமைச்சரவையில் வைகோவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய வைகோ, கூட்டணி ஆட்சியில் எனக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று சகோதரர் சுதீஷ் சொன்னார். சுதீஷ் எல்லை மீறிய உணர்ச்சிவயப்பட்டு அப்படி பேசிவிட்டார்.

தமக்கு பதவியின் மேல் கற்பனையில் கூட விருப்பமில்லை என்றும் வைகோ கூறினார். விஜயகாந்த் முதலமைச்சர் ஆனபிறகு கூட்டணிக் கட்சிகள் எல்லாம் அமைச்சரவையில் இடம்பெறும். எந்தெந்த இலாக்காக்கள் என்பது அவர் முடிவு செய்யவேண்டியது.

துணை முதலைமைச்சர் என்ற பொறுப்போ அல்லது அவையில் அமைச்சர் என்ற பொறுப்போ என் கற்பனையில் கூட இடம்பெற முடியாது. அந்த எண்ணத்திற்கே ஒரு சதவிகிதம் கூட இடம் கிடையாது. வைகோ சொன்னால் சொன்னதுதான்.

யாரும் மாற்றமுடியாது என்று உறுதியாக கூறினார். முன்னதாக பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி எண்ணிக்கைக் கூட இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று விமர்சனம் செய்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில்தான், தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings