கண்ணுங்களா அம்மா தியேட்டர்கள் திட்டம் என்ன ஆச்சு?

சரியாக ஓராண்டுக்கு முன்பு சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியால் மாமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிய திட்டம் அம்மா தியேட்டர். 
அனைத்து நவீன வசதிகளுடனுடன் குறைந்த கட்டணத்தில் மக்கள் படம் பார்க்கும் வகையில் இந்தத் தியேட்டர்கள் உருவாக்கப்படும் என்றும்,

சென்னையில் மட்டும் குறைந்தது 25 அரங்குகளை முதல் கட்டமாக உருவாக்கப் போவதாகவும் அறிவித்தனர். காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்கும் இத்திட்டத்தை தமிழக அரசு விரிவாக்கம் செய்யப் போவதாகவும் கூறப்பட்டது. 

தியேட்டர்கள் அனைத்தும் புரோக்கர்கள் கைகளுக்குப் போய்விட்டதால், சுதந்திரமாக படமெடுக்கும் சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு இந்தத் திட்டம் வரப்பிரசாதமாக இருக்கும் என திரையுலகம் கொண்டாடியது. 

சென்னையில் இந்த அம்மா தியேட்டர்களுக்காக தியாகராய நகர், கோடம்பாக்கம், தங்கச்சாலை, ராயபுரம், புளியந்தோப்பு, வால்டாக்ஸ் ரோடு, பேசின் பிரிட்ஜ், கோட்டூர்புரம்,

முகப்பேர் போன்ற பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பும் வெளியானது. ஆனால் அறிவிப்பு வெளியாகி ஓராண்டு காலம் உருண்டோடிய பின்னும் அந்த இடங்களில் ஒரு செங்கல் கூட நடப்படவில்லை என்பதே உண்மை. 

இந்த தியேட்டர்களுக்காக ஒதுக்கப்பட்ட அத்தனை இடங்களும் முன்பு எப்படி இருந்தனவோ அப்படியேதான் உள்ளன. எந்த ஒரு பூர்வாங்க வேலையும் தொடங்கப்படவே இல்லை.

இது மிகப் பெரிய ஏமாற்றுத் திட்டம்... நிச்சயம் அம்மா தியேட்டர் என்பது வெறும் காகிதத்தோடு நின்று போகும் சமாச்சாரம்தான் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன் வைத்துள்ள நிலையில், 'அம்மா தியேட்டர் சொன்னபடி வந்துவிடும்' என்கிறார் மாநகராட்சி மேயரான சைதை துரைசாமி. 

இதுகுறித்து அவரிடம் பேசியபோது, 'அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆய்ந்துதான் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். 

அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன' என்றார். 'மேற்கொண்டு எந்த விவரமானாலும் முடிந்த பிறகு பேசுங்கள்' என்று கூறிவிட்டார் மேயர்.
Tags:
Privacy and cookie settings