இன்று திரும்பிய இடமெல்லாம் கேப்டன் விஜயகாந்த் அணியின் சார்பில் பிரேமலதா தான் நின்று பேசிக் கொண்டிருக்கிறார். தேசிய முற்போக்கு திராவிடர் கழக மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கிறார்.
தேமுதிக வின் மகளிர் அணித் தலைவர் என்ற முறையில் இந்த முன்னுரிமை 'அண்ணியாருக்கு' - இப்படித் தான் இவரை தேமுதிக தொண்டர்கள் அழைக்கிறார்கள் - கொடுக்கப் பட்டிருக்கிறது
என்று நினைத்தால் நீங்கள் இந்திய அரசியலின் அடிச்சுவடியும், குடும்ப அரசியிலின் அடிப்படைக் கோட்பாடுகளும் கிஞ்சித்தும் அறியாதவர்கள் என்று அர்த்தம்.
கேப்டனின் மனைவி என்ற அந்தஸ்து உள்ளதால் மட்டுமே இந்த முன்னுரிமை அண்ணியாருக்கு தேமுதிக வில் தாரை வார்க்கப் பட்டிருக்கிறது.
கடந்த மார்ச் 23ம் தேதி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி உதயமானது. அன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் நாடு பொதுச் செயலாளர் முத்தரசன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ் நாடு பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோருடன் சேர்ந்து
காமிராக்கள் முன்னின்று பொது மக்களுக்கு அருள் பாலித்தார் விஜயகாந்த். சில நிமிடங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் பிறகு சுமார் ஒரு வார காலம் தேமுதிக சார்பில் தனியாகவும் மற்றும் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தும், தமிழகம் முழுவதும் நடைபெற்ற எந்தவொரு கூட்டத்திலும் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை.
மாறாக பிரேமலதாவோ அல்லது விஜயகாந்த் மைத்துனரும், தேமுதிக வின் இளைஞர் அணித் தலைவருமான சுதீஷோதான் கலந்து கொள்ளுகின்றனர்.
இன்று ஊர், ஊராகப் போய் தேமுதிக கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறார் பிரேமலதா.
அவரது பேச்சு ஆக்ரோஷமாகத் தான் இருக்கிறது. கொச்சையான மொழியில் தான் அவர் பேசுகிறார். ஆனால் கோர்வையாகப் பேசுகிறார். மக்களுக்குப் புரியக் கூடிய மொழியில் பேசுகிறார்.
அடிக்கடி ஆங்கிலத்திலும் பேசுகிறார். தமிழ் நாட்டில் கடந்த ஐம்பதாண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை யென்கிறார்.
தமிழ் நாடு காவல் துறைக்கே கேப்டன் தான் ரோல் மாடல் என்றெல்லால் சராமாரியாக, புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு தம்பட்டம் அடித்துக் கொள்ளுகிறார்.
தமிழ் நாட்டு மக்களை ரட்சிக்க வந்த புண்ணிய புருஷன் தான் கேப்டன் என்றும் அவரது வாழ்க்கையே மக்களின் வாழ்க்கையை உய்விக்க வந்த தவ வாழ்க்கை தான் என்றும் கூச்ச நாச்சமில்லாமல் பேசுகிறார்.
கேப்டனை விட்டால் தமிழ் நாட்டிற்கு வேறு நாதியில்லை என்ற தொனியில் பிரேமலதா பேசுவது கருணாநிதியும்,
ஜெயலலிதாவும் ஏன் கேப்டனின் இன்றைய நிலைய வித்வான்கள் குழுவின் தளகர்த்தரான புரட்சிப் புயல் வைகோ வும் கூட பேசாத பேச்சுத் தான்.
பிரேமலதா வின் பேச்சு பெருமளவு எரிச்சல் தரும் வகையில் இருந்தாலும், சிலருக்கு அதிலும் ஒரு விதமான ஈர்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.
அவர் ஜெயலலிதாவை குறி வைத்து தாக்கும் போது அது மக்களால் கவனிக்கப் படுகிறது. விஜயகாந்த் ஜெயலலிதா வை விமர்சிக்கும் போது கிடைக்காத வரவேற்பு பிரேமலதா பேசும் போது கிடைக்கின்றது.
ஒரு பெண் அரசியல்வாதி மற்றோர் பெண் அரசியல்வாதியை விமர்சிக்கும் போது கிடைக்கும் வரவேற்பு அது. மேலும் இது தான் மநகூ- விஜயகாந்த் அணியின் பிரச்சார யுக்தியாகவும் இருக்கிறது.
வைகோ பெரும்பாலும் திமுக வைத்தான் உறித்தெடுத்துக் கொண்டிருக்கிறார். திருமா திமுக, அஇஅதிமுக இரண்டு பேரையும் அரசியல் ரீதியாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.
இரண்டு கம்யூனிஸ்டுகளும் பிரச்சனைகளை பேசிக் கொண்டிருக்கிறார்கள். தனி மனித தாக்குதல்கள் இல்லை. ஆனால் பிரேமலதா தெளிவாகக் குறி வைத்து ஜெயலலிதாவைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்.
மக்கள் நலக் கூட்டணியிருந்தாலும், விஜயகாந்த் தான் இந்தக் கூட்டணியின் தலைவர் என்பதை நிறுவவதற்கு அவர் தயங்குவதே இல்லை.
மேலும் முக்கிய பிரச்சனைகளில் தங்களது கருத்துத் தான் இறுதியானது, வலுவானது என்பதையும் ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும் அவர் நிறுவிக் கொண்டிருக்கிறார்.
'இது கேப்டன் விஜயகாந்த் அணி' கிடையாது, மாறாக மக்கள் நலக் கூட்டணி தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு சொன்ன போது, ‘இல்லை இது கேப்டன் விஜயகாந்த் அணி தான்.
அப்படிச் சொன்னால் தான் கிராமத்து மக்களுக்குப் புரியம்' என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல பதில் சொல்லுகிறார் பிரேமலதா.
'தேமுதிக கூட்டணிக்கு திமுக 500 கோடி பேரம் பேசியது' என்று வைகோ சொன்ன போது, சில மணி நேரங்களிலேயே ‘இல்லை பேரம் எதுவும் பேசப்பட வில்லை' என்று பகிரங்கமாக வைகோ வுக்கு பதிலடி கொடுக்கிறார் பிரேமலதா.
ஆகவே ஒவ்வோர் கட்டத்திலும் தன்னுடைய சொல் தான் இறுதியானது என்ற செய்தியை உடனுக்குடன் 'அண்ணியார்' பதிவுப் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
பாஜக வுடன் தங்களுக்கு எந்த மனஸ்தாபமும் இல்லை என்றும், கம்யூனிஸ்ட் இருப்பதால் பாஜக இந்தக் கூட்டணியில் இடம் பெற முடியவில்லை என்றும்,
வேறு பிரச்சனை எதுவும் தங்களுக்கு பாஜக வுடன் இல்லை என்றும் சொல்லுவதன் மூலம் காவிக் கட்சியுடனான தங்களது பாலத்தை நிரந்தரமாக உடையாமல் காப்பாற்றிக் கொள்ளுகிறார்.
மதச் சார்பின்மையைக் காப்பாற்றுவதற்காக தாங்கள் நடத்திக் கொண்டிருக்கும் தர்ம யுத்தத்தில் தங்களுக்கு கிடைத்த ஐஎஸ்ஓ முத்திரை பொறித்த தரச் சான்றிதழாக 'பொது உடைமைத் தங்கங்கள்' இதனை கவ்விக் கொள்ளலாம்.
பிரேமலதா இன்று நன்றாக தன்னை தமிழக அரசியல் களத்தில் நிலை நிறுத்திக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
ஆங்கிலத்தில் இதனை "Political Positioning" என்று சொல்லுவார்கள், அதாவது அரசியல் ரீதியாக தன்னுடைய பாத்திரத்தை வரையறுத்துக் கொள்ளுவது.
ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு எதிராக தன்னை மாற்றாக முன்னிறுத்தவது.
பிரேமலதா அவரது கணவரை முதலமைச்சர் வேட்பாளராக மக்கள் மன்றத்தில் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் கேப்டன் இதுவரையில் களத்தில் இல்லை.
இது ஒரு வகையில் மறைமுகமாக தன்னுடைய இமேஜை பிரேமலதா நன்கு திட்டமிட்டு, ஆங்கிலத்தில் சொன்னால் 'focused' ஆக, அதாவது குறிப்பாக வரையறுத்து உயர்த்திக் கொள்ளும் வேலைதான்.
திரும்ப, திரும்ப கேப்டன் கேப்டன் என்று பிரேமலதா சொன்னாலும், மக்கள் மன்றத்தில் ‘அண்ணியார்' தான் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
இது கேப்டனை ஊடகங்களிடம் இருந்தும், மற்ற கட்சிகளிடம் இருந்தும் காப்பாற்ற மநாகூ வும், தேமுதிக வும் வகுத்த வியூகம்தான்.
என்னைத் தாண்டித் தான் விஜயகாந்த்' தை எவரும் அணுக முடியும் என்கிறார் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ. இது ஊடகங்களிடம் இருந்து கேப்டனை காப்பாற்றும் வார்த்தைகள்.
அதாவது ஊடகங்கள் கேப்டனை அணுகி ஏதாவது கேட்டு, அதற்கு அவர் வழக்கமான தன்னுடைய பாணியில், 'நயத் தகு நாகரீக மொழியில்' வார்த்தைகளை உதிர்த்தாலோ
அல்லது வேறு சில அதி நாகரீக உடல் மொழிகளில் எதிர் வினை ஆற்றினாலோ வரும் சிக்கல்களைத் தவிர்க்கத்தான் இந்த ஏற்பாடு.
இது தேர்தல் காலம் பாருங்கள், அதனால் தான் இந்த முன்னெச்செரிக்கை. இன்று முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் களத்தில் இல்லை.
அவர் எங்கே யிருக்கிறார் என்று தெரியவில்லை. கேப்டன் சிங்கப்பூர் போகவில்லை. அவர் தேமுதிக அலுவலகத்தில் அமர்ந்து திட்டங்களை வகுத்து வருகிறார்.
நான் இல்லாமல் கேப்டன் எங்கும் போக மாட்டார்' என்று திருவாய் மலர்ந்தருளுகிறார் பிரேமலதா. ஜெயலலிதா தன் கட்சிக் காரர்களிடம் நேர்காணல் நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா வின் நேர்காணல் வெளிப்படையாக இல்லை, ஜெ வின் புகைப் படங்கள் கூட சமீப நாட்களாக வருவதில்லை என்று ஏகடியம் பேசுகிறார் பிரேமலதா.
முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்ப்பட்ட ஒருவர் ஏன் களத்தில் இல்லை என்பதற்கான இந்த பதில் ‘ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை'' என்ற பழமொழியைத் தான் நினைவு படுத்துகிறது.
அதைவிட கேவலம் ஜெயலலிதாவுக்கு வீட்டில் அறுவைச் சிகிச்சை நடந்ததாக அவர் உளறியது.
விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்று பரவலாக மக்கள் உணருவது பற்றிய பிரேமலதாவின் கருத்து ஆணவத் தெறிப்பாக இருக்கிறது. ‘எம்ஜிஆர் சுடப்பட்டார்.
அதன் பிறகு அவர் பேசியது யாருக்காவது புரிந்ததா? கேப்டன் பேசுவது புரியவில்லை என்று சொல்லுகிறீர்கள்.... என்னா புரியவில்லை... எனக்குப் புரியவில்லை.
கேப்டன் பேசுவது என்னா புரியவில்லை.... சொல்லுங்க ...'' என்று விஜயகாந்த்தை விமர்சிப்பவர்களை ஒண்டிக்கு ஒண்டி வா என்று அழைக்காத குறையாக சவால் விடுகிறார் பிரேமலதா.
கருணாநிதியின் பேச்சிலும், ஜெயலலிதா வின் பேச்சிலும் இல்லாத ஒரு விதமான ஆணவத் தொனி பிரேமலதா பேச்சில் இருக்கிறது. கருணாநிதி மண்ணிலிருந்து வந்தவர்.
அவரது பேச்சில் இந்தத் தொனி என்றைக்குமே இல்லாததில் ஆச்சரியமில்லை. ஆனால் ஜெயலலிதாவின் பேச்சிலும் கூட, 1982 ல் அவர் அரசியிலுக்கு வந்த காலத்திலிருந்து இன்று வரையில் இந்த ஆணவத் தொனி இருந்தது கிடையாது.
ஜெயலலிதாவின் நடவடிக்கைகளில் சற்றே தான்தோன்றித் தனம் இருக்கும். ஆனால் பொது வெளியில் அவரது பேச்சில் இந்த ஆணவத் தொனி என்றும் இருந்தது கிடையாது.
2014 ல் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் என்டிஏ எம் பிக் களிடம் பேசினார்.
அப்போது தேமுதிக சார்பில் விஜயகாந்தும், பிரேமதலதாவும் கூட அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். பிரேமலதா வை மோடி பெயர் சொல்லி அழைத்து நன்றி தெரிவித்தார்.
இதுவெல்லாம் பிரேமலதாவின் அரசியல் ஆளுமையில் ஏற்படுத்திய பாதிப்புகளாகக் கூட அவரது தற்போதய நடவடிக்கைகள் இருக்கலாம் என்பதை ஒதுக்கித் தள்ள முடியாது.
விஜயகாந்த் இன்று களத்திலேயே இல்லை. இனியும் களத்துக்கு வருவாரா, அல்லது கோயம்பேடு அலுவலகத்திலேயே தேர்தல் வரை திட்டங்கள் வகுத்துக் கொண்டிருப்பாரா தெரியவில்லை.
தேமுதிக வினரை வழி நடத்திக் கொண்டிருப்பவர் கமாண்டர் பிரேமலதா. தேமுதிக இன்று முழுக்கவும் அவரது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.
பிரேமலதாவின் மேடைப் பேச்சுக்களில் தென்படும் அவரது உடல் மொழி அவரது அரசியல் கனவுகளின், எதிர்ப் பார்ப்புகளின் வெளிப்பாடாகவும் தான் இருக்கிறது.
பிரேமலதாவே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகவும் கூட ஒரு கட்டத்தில் அவரது கட்சியாலும், மநாகூ வாலும்கூட முன்னிறுத்தப் படலாம்.
தனி மனித வழிபாட்டிலும், துதி பாடலிலும், குடும்ப அரசியலிலும், கடந்த ஐம்பதாண்டு கால இந்திய வரலாற்றில் புதிய சகாப்தத்தை
படைத்துக் கொண்டிருக்கும் தமிழகம் இன்று மற்றுமோர் சரித்திர சாதனைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
1994 ம் ஆண்டில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அவரது வலது கரம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தி.சு. கிள்ளிவளவன்.
முதலமைச்சர் ஜெயலலிதா வை கடுமையாக காங்கிரஸ் விமர்சித்துக் கொண்டிருந்த காலம் அது. காங்கிரஸ் தனியாக நின்று ஆட்சியமைக்க வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம்.
அப்போது ஒரு நாள் சத்தியமூர்த்தி பவனில் கிள்ளிவளவன், ஆஃப் தி ரெகார்டாக செய்தியாளர்களிடம் இவ்வாறு சொன்னார்...
'ஒருவேளை தப்பித் தவறி காங்கிரஸ்காரர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் திமுக, அஇஅதிமுக வை கோயில் கட்டி கும்பிடுவார்கள்' என்று.
பிரேமலதா பேசுவதை, அவரது அரசியல் காய் நகர்த்தல்களைப் பார்க்குமே போது கிள்ளிவளவன் சொன்னது தான் இன்றைக்கு நினைவுக்கு வருகிறது.
ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்குமான மாற்று, அம்மாவையும், ஐயா வையும் விட நூறு மடங்கு மோசமானதாக இருக்கப் போகிறது.
விதிவசத்தால் அப்படி ஒன்று நிகழ்ந்தால், நிச்சயம் தமிழக மக்கள் ஜெயலலிதா வையும், கருணாநிதியையும் கோயில் கட்டித் தான் கும்பிடுவார்கள். சத்தியமாக கிள்ளிவளவன் ஒரு தீர்க்க தரிசி தான்!