அம்மாவா? அன்புமணியா? இதுதான் போட்டி ராமதாஸ் !

தமிழக சட்டசபைத் தேர்தல் களத்தில் 234 தொகுதிகளிலும் அன்புமணியா, அம்மாவா என்ற போட்டி தான் நிலவுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
இது குறித்த அவரது அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்க இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில் அதற்கான களப்பணிகளில் பாட்டாளி மக்கள் கட்சி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. 

தேர்தலில் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரின் கவனமும் களப் பணிகளில் தான் இருக்க வேண்டும். 

ஆனால், தி.மு.க. தலைவர் கலைஞரோ கள நிலவரம் புரியாமல் அ.தி.மு.க.வுக்கு மாற்று தமது கட்சி தான் என்று தமக்குத் தாமே ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். 

தெளிவாக கூற வேண்டுமானால் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே தான் போட்டி என்று கலைஞர் கூறியிருப்பதே ஒரு நயவஞ்சக திட்டம் ஆகும். 

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையுமே ஆட்சிக்கு வர அனுமதிக்கக்கூடாது என்பது தான் மக்களின் விருப்பம். இந்த இரு கட்சிகளுக்கும் மாற்று தேவை என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அந்த மாற்று தான் பாட்டாளி மக்கள் கட்சி. மக்கள் விரும்பும் மாற்றை அவர்களின் பார்வையிலிருந்து மறைத்து வைத்து விட்டு, அதிமுக, திமுக ஆகிய 

இரு தீமைகளை மட்டும் மக்கள் முன் வைத்தால் அவற்றிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் தான் கலைஞர் இப்படி ஒரு கருத்தைக் கூறியுள்ளார். 

கலைஞரின் இந்த நாடகம் வெற்றி பெறாது. இந்த தேர்தலில் திமுக மாற்று அல்ல... ஏமாற்று சக்தி என்பதை மக்கள் அறிந்துள்ளனர். 2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து எழுவதற்கு தி.மு.க.வால் முடியவில்லை. 

2014 தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. அதுமட்டுமின்றி, 8 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. களத்திலேயே இல்லை. 

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே திமுகவின் தோல்வி உறுதிசெய்யப்பட்டு விட்டது என்பது தான் உண்மை. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அன்புமணியா, அம்மாவா? என்ற போட்டி தான் நிலவுகிறது. 

இத்தகைய நிலையில் திமுக தான் மாற்று என்பது நல்ல நகைச்சுவை. 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் கதாநாயகன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தான். கதாநாயகி பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை தான். 

இந்த கூட்டணி தான் வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்... தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக சுரண்டி வந்த திமுகவும், அதிமுகவும் வீழ்ச்சியடையப் போவது உறுதி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings