கொஞ்சம் போட்டுக் கொடுத்து காங்கிரஸை சாந்தி படுத்துமா திமுக?

காங்கிரஸ் கட்சி 63 சீட்டுகளைக் கேட்டு வந்த நிலையில் திமுக தரப்பில் 30 சீட்தான் தரப்படும் என்று கூறியுள்ளதாக பேராயர் எஸ்றா சற்குணம் தெரிவித்துள்ளதன் மூலம் காங்கிரஸ் - திமுக இழுபறிக்கான காரணம் தெளிவாக்கியுள்ளது.
அதேசமயம், காங்கிரஸ் கோரும் 63 சீட்களுக்கு சத்தியமாக வாய்ப்பில்லை என்று திமுக தீர்மானமாக கூறி விட்டதாம். கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவிடம் கடுமையாக பேரம் பேசிய கட்சி காங்கிரஸ். திமுகவின் நெருக்கடியை தனக்கு சாதகமாக்கி 63 தொகுதிகளைப் பெற்றது காங்கிரஸ்.

இந்த முறையும் அதே அளவிலான தொகுதிகளை காங்கிரஸ் கேட்டது. முதலில் தேமுதிக வரும் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்தது திமுக.

ஆனால் தேமுதிக வராததால், திமுக அதிர்ச்சி அடைய, காங்கிரஸோ நிம்மதிப் பெருமூச்சு விட்டது. கேட்ட தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அது இருந்தது.

ஆனால் அதில் திமுக மண்ணை அள்ளிப் போட்டு விட்டது. காங்கிரஸுக்கு அத்தனை சீட்களைத் தூக்கிக் கொடுக்க திமுக விரும்பவில்லை. காரணம், வாசன் இல்லாத காங்கிரஸை பலமான காங்கிரஸாக திமுக கருதவில்லை.

இதனால்தான் ஜி.கே.வாசனின் தமாகாவையும் திமுக கூட்டணிக்கு இழுக்கப் பார்க்கிறது. அவரையும் இணைத்து, காங்கிரஸ் மற்றும் வாசன் கட்சிகளுக்கு சம அளவில் சீட் தர திமுக உத்தேசித்துள்ளது.

மேலும் காங்கிரஸுக்கு அது எத்தனை சீட் தரும் என்பது தெளிவாகத் தெரியாத நிலை இருந்தது. அதைத்தான் தற்போது எஸ்றா சற்குணம் வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு 30 சீட்களை திமுக தருவதாக கூறியுள்ளார் எஸ்றா. 
அப்படியென்றால் வாசன் கட்சிக்கும் 30 சீட்களை திமுக தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவருக்கும் சேர்த்து 60 சேட்களை திமுக ஒதுக்கினால்,

ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய 13 சீட் போக (இதில் 3 கட்சிகள் உதயசூரியனில்தான் போட்டியிடவுள்ளனர்) 161 சீட்கள் மீதமுள்ளது. அதில் திமுக போட்டியிடும் என்று தெரிகிறது.

திமுகவின் இந்த ஆபர் குறித்து ராகுல் காந்தியிடம் இளங்கோவன், குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் கூறியுள்ளனர். அதற்கு ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்தாராம்.

கூடுதல் சீட் தர வேண்டும், சரிப்பட்டு வராவிட்டால் தனியாகப் போட்டியிடவும் நாம் தயாராக வேண்டும் என்று கூறியுள்ளாராம் ராகுல் காந்தி.

அதேசமயம், திமுக ஏன் அதிக சீட் தர யோசிக்கிறது என்றால், அதிக சீட்களில் போட்டியிடும் அளவுக்கு காங்கிரஸில் ஆட்கள் இல்லையே என்பதுதான் திமுகவின் பெரும் கவலையாம். 

தென் மாவட்டங்களில் உங்களுக்கு பலம் உண்டு. அங்கு போட்டியிடுங்கள். பிற இடங்களில் நிறுத்தினால் அதிமுகவிடம் தேவையில்லாமல் தோற்றுப் போவீர்கள், எங்களுக்கும் சிக்கலாகி விடும் என்று திமுக கூறுகிறதாம்.

ஒரு வேளை வாசன் வராமல் போனால் திமுக 190 தொகுதிகளில் போட்டியிடும் திட்டத்தில் உள்ளதாம். இருப்பினும் வாசனும் வந்தால் பலமாக இருக்குமே என்று அந்த முயற்சியும் தொடர்கிறதாம்.
தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக அதிகபட்சம் 2 அல்லது 5 சீட்டைக் கொடுத்து பிரச்சினையை திமுக முடிவுக்குக் கொண்டு வந்த தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று தெரிகிறது.

எஸ்றா சொல்வதைப் போல, தனியாகப் போய் தாறுமாறாக அடிபடுவதை விட பேசாமல் திமுக கொடுக்கும் தொகுதிகளைப் பவ்யமாக பெற்றுக் கொண்டு காங்கிரஸும் சமாதானமாகப் போகக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
Tags:
Privacy and cookie settings