லண்டனுக்கு சுற்றுலா வந்த சவூதி நாட்டு பில்லியனர் ஒருவர் தனது விலை உயர்ந்த தங்க நிற கார்களுடன் அணிவகுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள்,
பாதசாரிகளை இந்த கார்கள் வெகுவாக கவர்ந்தது. மேலும், இங்கிலாந்து மீடியாக்களிலும் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது
வளைகுடா நாடுகளை சேர்ந்த பில்லியனர்கள் லண்டனுக்கு சுற்றுலா செல்வதை விருப்பமாக கொண்டுள்ளனர்.
அத்துடன், டாக்சியை பயன்படுத்தாமல், தங்களது சூப்பர் கார்களையும் கையோடு எடுத்துச் சென்று அங்கு ஓட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதேபோன்று, சவூதி நாட்டை சேர்ந்த இளம் பில்லியனர் ஒருவர் லண்டனுக்கு தனது நண்பர்கள் புடை சூழ சுற்றுலா வந்துள்ளார்.
அவருக்கு 20 வயதே ஆகிறது என இங்கிலாந்து பத்திரிக்கைகள் வியப்பு தெரிவித்துள்ளன.
சுற்றுலா வந்திருக்கும் அந்த பில்லியனர் தனது விலை உயர்ந்த கார்களையும் கையோடு லண்டனுக்கு எடுத்து வந்துள்ளார்.
மேலும், எல்லா கார்களுமே ஒரே மாதிரியாக தங்க நிறத்தில் வினைல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கின்றன.
தனது நண்பர்கள் புடைசூழ தனது அனைத்து தங்க நிற கார்களுடன் லண்டன் சாலைகளில் அவர் வலம் வருகிறார்.
தங்க நிற கார்களை பார்க்கும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் வியப்பில் ஆழ்ந்து போகின்றனர். அவர் எடுத்து வந்திருக்கும் கார் மாடல்களை தொடர்ந்து காணலாம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி63 ஏஎம்ஜி மல்டி ஆக்சில் எஸ்யூவியை எடுத்து வந்திருக்கிறார். இதுவும் தங்க நிற வினைல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
சவூதியில் பாலைவன சஃபாரி செல்வதற்கு அட்டகாசமான மாடலாக வாங்கியிருக்கிறார். இந்த எஸ்யூவியில் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் வி8 எஞ்சின் 536 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஸ்யூவியில் 7 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் ரூ.2.17 கோடி எக்ஸ்ஷோரூம் விலை கொண்டது. ஆஸ்திரியாவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
2 கதவுகள் கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கூபே ரக மாடலையும் அந்த இளம் பில்லியனர் எடுத்து வந்துள்ளார். ஆடம்பர ரகத்தில் மிகவும் சிறப்பான அம்சங்களை பெற்றிருக்கும் மாடல்.
ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கூபே காரில் இருக்கும் 6.75 லிட்டர் வி12 எஞ்சின் அதிக பட்சமாக 453பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.
மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்ட இந்த கார் இந்தியாவில் ரூ.5 கோடி எக்ஸ்ஷோரூம் விலை மதிப்பு கொண்டது.
இளசுகளை சுண்டி இழுப்பதில் லம்போர்கினி சூப்பர் கார்கள் முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில், இந்த இளம் சவூதி பில்லியனரிடம் இந்த கார் இருப்பதில் ஆச்சரியமில்லை.
சாஃப் டாப் கூரையை திறந்து வைத்துக் கொண்டு அந்த இளம் பில்லியனர் லண்டன் சாலைகளில் வலம் வருகிறாராம். லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் காரில் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதிகபட்சமாக 700 பிஎச்பி பவரையும், 690 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் தொட்டுவிடும். அத்துடன் மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும். இந்தியாவில் ரூ.6 கோடி எக்ஸ்ஷோரூம் விலை மதிப்பு கொண்டது.
லண்டன் வீதிகளை சுற்றித் திரிந்த தங்க நிற கார் அணிவகுப்பில் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் சொகுசு காரும் உண்டு.
ஜெர்மனியை சேர்ந்த மான்சோரி என்ற புகழ்பெற்ற கார் கஸ்டமைஸ் நிறுவனத்திடம் கொடுத்து கஸ்டமைஸ் செய்து வாங்கியிருக்கிறார் அந்த பில்லியனர்.
பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் காரில் இருக்கும் 6.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 616 பிஎச்பி பவரையம், 800 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
லிட்டருக்கு 8 கிமீ மைலேஜ் தரும் என்று சொல்லப்படுகிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 322 கிமீ வேகம் வரை பறக்கும். ரூ.4.5 கோடி விலை மதிப்பு கொண்டது.
ஆண்டுதோறும் இதுபோன்று வரும் வளைகுடா நாடுகளிலிருந்து சுற்றுலா வரும் பெரும் பணக்காரர்கள், தங்களது சூப்பர் கார்களை லண்டனுக்கு எடுத்து வந்து தாறுமாறாக ஓட்டுவதாகவும்,
இதர வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் லண்டன்வாசிகளிடமிருந்து அரசுக்கு புகார்கள் குவிந்தன.
புகார்களையடுத்து, லண்டனுக்கு கார்களை எடுத்து வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சில புதிய விதிமுறைகள் லண்டனில் அமல்படுத்தப்பட்டன.
அதன்படி, அச்சுறுத்தும் வகையிலும், தாறுமாறாக ஓட்டும் வெளிநாட்டினருக்கு 100 பவுண்ட்டுகள் முதல் 1,000 பவுண்ட்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இது போன்று பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஓட்டியதாக 7 ஓட்டுனர்களுக்கு அபராதத்திற்கான நோட்டீஸ் கொடுக்கப் பட்டிருக்கிறதாம்.