ஜெ. அப்பீல் வழக்கு அன்பழகன் வாதத்தை கேட்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் திமுக பொதுச்செயலர் அன்பழகன் தரப்பு வாதங்களை முன்வைக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
அன்பழகன் தரப்பு வாதத்தில் புதியதாக எதுவும் இல்லை; அப்படி புதியதாக இருந்தால் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யலாம் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக கர்நாடகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இவ்விசாரணையில் கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா தமது வாதங்களை முன்வைத்தனர். சொத்து குவிப்பு வழக்கின் முதல் புகார்தாரர் என்ற அடிப்படையில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியும் தமது வாதத்தை நேற்று முன்வைத்தார்.

இதைத் தொடர்ந்து க. அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா தமது வாதங்களை முன்வைக்க நேற்று நீதிபதிகள் அனுமதி அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை அன்பழகன் தரப்பில் அந்தி அர்ஜூனா தமது வாதத்தை முன்வைக்க எழுந்தார்.

ஆனால் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் அன்பழகன் தரப்பு வாதங்களை முன்வைக்க எந்த ஒரு முகாந்திரமும் இல்லை எனக் கூறி கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார்.

இதனை ஏற்ற நீதிபதிகள், அன்பழகன் தரப்பு வாதங்களை முன்வைக்க என்ன முகாந்திரம் உள்ளது? முகாந்திரமே இல்லாத ஒருவரை எப்படி வாதங்களை முன்வைக்க அனுமதிக்க முடியும்?

அன்பழகன் தரப்பு தமக்கு முகாந்திரம் உள்ளது என்பதை விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், அன்பழகன் தரப்பு என்ன சொல்ல வருகிறார் என்பதை ஏற்கனவே கர்நாடகா அரசு தரப்பில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

அவரது வாதத்தில் புதிதாக எதுவும் இல்லை. அவர் ஏற்கனவே தாக்கல் செய்த ஆவணங்களை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். திரும்ப திரும்ப ஒரே வாதங்களை நாங்கள் கேட்க விரும்பவில்லை.

அப்படி ஏதாவது புதியதாக சொல்ல விரும்பினால் அதை எழுத்துப்பூர்வமாக அன்பழகன் தரப்பு தாக்கல் செய்யலாம் என்றனர். அன்பழகன் தரப்பு... ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி முதல் மனுதாரர்.

இவ்வழக்கை வெளிமாநிலத்துக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் திமுக பொதுச்செயலர் க. அன்பழகன். இவரது வழக்கின் அடிப்படையில்தான் பெங்களூரு தனிநீதிமன்றத்துக்கு ஜெயலலிதா வழக்கு மாற்றப்பட்டது.

மேலும் இவ்வழக்கில் கர்நாடகா அரசை அரசுத் தரப்பாகவும் உச்சநீதிமன்றம் அனுமதித்திருந்தது. அதேபோல் அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்தே அரசு வழக்கறிஞராக இருந்த பவானிசிங் மாற்றப்பட்டார்.

ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அன்பழகனையும் ஒருதரப்பாக சேர்க்க கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings