ஐ.பி.எல் சூதாட்டம்.. சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட தடை !

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

ஐ.பி.எல். சூதாட்டம் 

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2013–ம் ஆண்டில் நடந்த 6–வது ஐ.பி.எல். தொடரின் போது ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா ஆகியோரை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட சூதாட்ட வேட்டையில் சில தரகர்களும் சிக்கினார்கள். சூதாட்டத்தில் சிக்கிய 3 வீரர்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் பின்னர் ஆயுட்கால தடை விதித்தது.

நிர்வாகிகள் தொடர்பு 

வீரர்கள் மட்டுமின்றி ஐ.பி.எல். அணிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் சூதாட்டத்தில் (பெட்டிங்) தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன்,

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ்குந்த்ரா ஆகியோர் அணியின் ரகசிய தகவல்களை சூதாட்டக்காரர்களுடன் பகிர்ந்து பெட்டிங்கில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஐ.பி.எல். சூதாட்ட சர்ச்சை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு உத்தரவு படி ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.

லோதா கமிட்டி அறிக்கை வெளியீடு 

இதுதொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 22–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், ‘ஐ.பி.எல். அணியின் நிர்வாகிகள் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அத்துடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் மீதும்

அவர்கள் சார்ந்த அணிகள் மீதும், ஐ.பி.எல். அதிகாரி சுந்தர்ராமன் உள்ளிட்டோர் மீதும் எத்தகையை நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து தீர்மானிக்க முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படுகிறது.

இந்த குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அசோக்பான், ரவீந்திரன் ஆகியோரும் இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீசு அனுப்பி விசாரணை மேற்கொண்டு 6 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும் கூறப்பட்டு இருந்தது.

ஐ.பி.எல். சூதாட்ட சர்ச்சைகள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான 3 பேர் கொண்ட கமிட்டி தனது அறிக்கையை டெல்லியில் நேற்று நிருபர்கள் மத்தியில் வெளியிட்டது. பரபரப்பான அறிக்கையை வெளியிட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:–

2 ஆண்டுகள் தடை 

குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி என்பதும், பெட்டிங்கில் ஈடுபட்டார் என்பதும் தெளிவாக தெரிகிறது. அவர், இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆயுட்கால தடை விதிக்கப்படுகிறது.

 

இதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்த்ராவுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்பான எத்தகைய நிகழ்ச்சியிலும் பங்கேற்க ஆயுட்கால தடை விதிக்கப்படுகிறது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் அதனை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் அதனை நிர்வகிக்கும் ஜெய்ப்பூர் ஐ.பி.எல். நிறுவனம் ஆகியவை ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடை இன்று (நேற்று) முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்பீல் செய்ய முடிவு 

தீர்ப்பு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்கள் வழக்கறிஞர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதே முடிவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களும் வந்துள்ளனர்.

இதற்கிடையே, ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு வருகிற 19–ந்தேதி அவசர ஆலோசனை நடத்த இருக்கிறது.
Tags: