கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த கலா மாஸ்டர்!!!

சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா நடத்தி வரும் மானாட மயிலாட நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாப்புலரானது.

‘கின்னஸ் சாதனை’யில் இடம்பிடித்த கலா மாஸ்டர்!!!

அதனால் தான் தொடர்ந்து 10 – வது சீஸன் வரை வெற்றிகரமான இந்த 
நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த ‘மானாட மயிலா’ நடன நிகழ்ச்சி இப்போது உலகில் எந்த ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியும் பெறாத வகையில் உலகின் மதிப்பிற்குரிய விருதான கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது.

‘அமெஸ் ரூம் இல்யூஷன்’ (Ames Room Illusion), அடிப்படையில் அமைந்த மிகப்பெரிய அரங்கினுள் இந்த சாதனையை சுமார் 40 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் நடமாடி ‘மானாட மயிலாட’ டீம் இந்த கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார்கள்.

‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் 10வது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 

இந்த நடனப் போட்டியில் பங்கு கொண்ட 6 நடன ஜோடிகளில் 4 ஜோடிகள் அந்த அரங்கினுள் நடனமாடி இந்த சாதனையை செய்திருக்கிறார்கள்.

‘அமெஸ் ரூம் இல்யூஷன்’ என்பது ‘இருக்கு, ஆனா, இல்லை’ என்ற அடிப்படையில் வெவ்வேறு அளவுகளில், கோணங்களில் ஒரு அறைக்குள் உருவாக்கப்படும் செட் என்று சொல்லலாம். 

ஒவ்வொரு பக்கங்கள், முனைகள் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத அளவுகளில் அந்த பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டிருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு செட்டை ‘மானாட மயிலாட’ சாதனைக்காக சுமார் 4000 கன சதுர அடியில் ஒரே ஒரு கதவு மூலம் நுழைந்து, ஒரே ஒரு சாதாரண லென்ஸ் கொண்ட காமிரா மூலம் படம் பிடித்திருக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் 18ம் தேதி சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் இதற்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் லண்டனிலிருந்து வந்த கின்னஸ் குழுவினரின் முன்னிலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

எந்த ஒரு அளவும் மிகவும் துல்லியமாக, சிறிதும் மாறாமல் இருந்தால் மட்டுமே அது சாதனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். நடனமாடுபவர்கள் யாரும் சிறு தவறு கூட செய்யக் கூடாது. 

அப்போது தான் கின்னஸில் இடம் பிடிக்க முடியும். அப்படித்தான் இந்த கின்னஸ் சாதனையை ‘மானாட மயிலாட 10’ டான்ஸ் மாஸ்டர்கள் கலா மாஸ்டர் இயக்கத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

” எல்லா சேனல்களிலும் டான்ஸ் புரோகிராம்கள் காட்டுறாங்க. ஆனா நான் ஒரு டான்ஸ் மாஸ்டர் நான் இயக்கும் ஒரு நடன நிகழ்ச்சி வித்தியாசமாக இருக்கணும். அதனால செலவு கொஞ்சம் ஆகும்னு சொன்னதும் கலைஞர் டிவி முழு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. 

ரயில் செட், பூந்தோட்டம் செட், பழைய பாடல்கள் செட், நிஜக்குதிரைகளை வரவழைத்து நடனமாடுவது என்று நான் கேட்ட எல்லாத்தையும் செஞ்சு கொடுத்தாங்க. அதனால தான் இந்த நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வெற்றிகரமாக 10-வது சீஸனை தொட்டுருக்கு.

இந்த கின்னஸ் சாதனையை செய்றதுக்கு நெறைய சவால்களை நான் சந்திக்க வேண்டியிருக்கு. 99 படிகள் ஏறியாச்சு இன்னும் 1 படி தானே அதையும் ஏறிப்பாத்திடுவோம்னு ஏறினோம். 

இன்னைக்கு என்னோட டான்ஸ் டீமை வெச்சே இந்த சாதனையை செஞ்சிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்கு முக்கிய காரணம் என்னோட மானாட மயிலாட டீம் தான் என்றார் கலா மாஸ்டர்.

இந்த கின்னஸ் சாதனை நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட சீஸர் 10 வரும் மே 3ம் தேதி இரவு 7.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
Tags: