உங்களுக்கு எண்பது வயதா? முதுமையில் தனிமை ஏன் வருகிறது?

0
இளமை எதிர் காலத்தில் இருக்கிறது. முதுமையோ கடந்த காலத்தில் இருக்கிகிறது. நிகழ் காலத்தில் இருப்பதற்கு வெகுசில மனிதர்களுக்கே தெரியும். அப்படி இருப்பவர்கள் பாக்கியவான்கள்.
உங்களுக்கு எண்பது வயதா? முதுமையில் தனிமை ஏன் வருகிறது?
எதிர் காலத்தில் இருப்பவர்களுக்கு அதிக பேச்சும், ஆவலும், பரபரப்பும் இருக்கும். கடந்த காலத்தில் இருப்பவர்களுக்கு பேச்சு குறைந்திருக்கும், கடந்த கால நிகழ்வுகளில், இப்படி இருந்திருக்கலாம்.. 
இப்படி பேசியிருக்கலாம்.. இப்படி செய்திருக்கலாம் என்பதாகிய குற்ற உணர்வு அதிகரித்து பட்ட வேதனையும், படுத்திய பாடுகளும் புத்தியில் வட்டமிடும்.அது மனதுக்குத் தளர்வு தரும். 

அதனால் உடம்பு தளரும். ஒழுகும் எச்சிலை உறுஞ்சிக் கொள்ளவும் மறந்து விடும். கண் பீளை அதிகரிக்கும். காது கேட்காது. மனம் எங்கோ இலக்கு இன்றி லயித்துக் கிடக்கும். 

குடும்பத்தினர் பெயர் ஞாபகம் இருக்காது. உறவு பற்றி தெளிவிருக்காது. சிலருக்குத் தன் பெயரே மறந்து போகும். நல்லன மறந்து விடும். 

துக்கம் மட்டும் ததும்பி நிற்கும். தென்னை மரத்திற்கு எதிரே நின்று மைடியர் பிரைம் மினிஸ்டர். ஐயம் பிரம் தமிழ் நாடு என்று தனக்குத் தானே பேசிக்கொள்கிற கிழவர்களும் உண்டு.

அவர் கடைசி வரை பிரதம மந்திரியை சந்திக்கவே இல்லை. சந்திக்கும் படியான யோக்கியதை வரவேயில்லை. 
நிறைவேறாத அந்த ஏக்கத்தை, நினைவில் தங்கிட ஆசையை, அவர் வெறுமே தென்னை மரம் பார்த்து தீர்த்துக் கொள்கிறார்.

அந்த சோகம் உங்களுக்கு புரிகிறதா? உங்களுக்கு இந்த சோகம் வந்தால் தான் புரியுமா? அப்படி நேர வேண்டாம். அப்படி நேராதிருக்க இப்பொழுது உறுதி கொள்ள வேண்டும். என்ன உறுதி ?

முதியோரை மதித்தல், வலியப்போய் உதவி செய்தல், தாங்குதல், ஆறுதலாக பல வார்த்தை பேசுதல், சிறியதாய் பெரியதாய் உதவிகள் செய்தல்.

உங்களுக்கு எண்பது வயதா? பார்த்தால் அப்படி தெரிய வில்லையே, உற்சாகமாக இருக்கிறீர்களே. 

எல்லோருக்கும் இந்த வயதில் கை நடுங்கும். நீங்கள் வெகு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று சொல்லி அனைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு எண்பது வயதா? முதுமையில் தனிமை ஏன் வருகிறது?
தொடுதல் முதியோர் களுக்கு மிகப்பெரிய நெகிழ்ச்சியைத் தரும். அனைத்துக் கொண்டால் உள்ளமே ஆடி விடும். கைகோர்த்து அமர்ந்தால் மிகமிக சந்தோஷமாக இருக்கும்.

அன்பு செய்வதற்கு காசா, பணமா? சொத்தையா எழுதிக் கேட்கிறார்?இல்லையே, இம்மாதிரி சிறிய அன்பின், அக்கறையின் வெளிப்பாடு களைத் தானே !.

முதியோர் களுக்கு அவர்களுடைய குழந்தைகள் தான் பலம். உங்கள் தாய் தந்தையரைக் கொண்டாட முடியவில்லை யெனில் வேறுயாரைக் கொண்டாடியும் எந்த பயனும் இல்லை.
உங்கள் பொருட்டு பல வழிகளை தாங்கிக் கொண்டு ஈன்று வளர்த்த உங்கள் தாயை கொண்டாட வில்லை எனில் வேறு எந்தத் தெய்வத்தைத் தொழவும் உங்களுக்கு அருகதை இல்லை.’ 
தெய்வம் மனுஷ்ய ரூபனே’தெய்வம் மனித வடிவில் இருக்கிறது. அதுவும் தாய் வடிவில் இருக்கிறது. எழுபது வயது தாய்க்கு தீபாவளிக்கு பட்டுப் புடவை வாங்கிக் கொடுங்கள்.

அன்று கட்டிக் கொண்ட பட்டுப்புடவை, அன்று காட்டிய சந்தோசம் அப்படியே உங்கள் நெஞ்சில் ஒட்டிக் கொள்ளும். 

தாய் தந்தை இறந்து போனார்களா ? முதியோர் இல்லத்துக்கு போங்கள். அங்கிருக்கும் தாய் தந்தையரை கொண்டாடுங்கள். இன்னொரு மிகப்பெரிய ரகசியமும் இருக்கிறது. 

உங்களுக்கும் வயசாகும். உங்களுக்கும் முதுகு வளையும். உங்களுக்கும் இதழ் தொங்கும். உங்களுக்கும் ஜொள்ளு ஒழுகும். உங்களுக்கும் கண் பார்வை மங்கும். கை நடுங்கும்.

இன்று இருக்கிற சதை திமிர் முதுமையில் இருக்காது. எனவே இப்போதே முதியர்களுக் காக நீங்கள் காட்டும் பரிவு, உங்கள் மனதை ரகசியமாய் உங்களுடைய முதுமைக்குத் தயார் படுத்தும்.

கை கால்கள் நடுங்காமல் இருக்கும் போதே நல்ல பழக்கங்கள் என்ன என்று தெரிந்து கொள்ளும். ஏதேனும் ஒரு முதியோர் இல்லத்தை விலாசமாகக் கொள்ளாமல் இருக்க, 
உங்களுக்கு எண்பது வயதா? முதுமையில் தனிமை ஏன் வருகிறது?
இப்பொழுதே மிகச் சரியான விலாசத்தில் மிகத் தெளிவான வாழ்க்கையில் உங்களை நிலை நிறுத்திக் கொள்ளப் பாடுபடுவீர்கள். முதுமையும், மரணமும் எல்லோருக்கும் நிச்சயம் உண்டு. 

எப்படி காபந்து செய்து கொள்ள வேண்டும். முதுமைத் துன்பத்தை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று நீங்களே வேகமாக தயாராகி விடுவீர்கள்.

அடிக்கடி முதியோர் இல்லம் போக, அடிக்கடி முதியவர்களை உற்றுப் பார்க்க, அடிக்கடி அவர்களோடு ஸ்நேகம் கொள்ள, உங்களுக்கு அந்த விஷயங்கள் புரியும். 

வாழ்க்கையை வெகு அழகாக நீங்கள் தீர்மானிப்பீர்கள். உங்கள் முதுமை காலம் தூக்க மில்லாது சந்தோஷமாக, எப்போது வேண்டுமானாலும் வா என்று மரணத்திற்கு சவால் விடுகின்ற ஒரு வாழ்க்கையாக இருக்கும். 
உடல் சில்லென்று இருக்க காரணங்கள் !
மரணத்தை ஜெயிப்பது என்பது மரணம் வராமல் தடுப்பதல்ல. மரணபயத்தை வெல்வது. அப்போ நான் வரேங்க என்று கைகூப்பி விடை பெறுவது. 

அன்பு தான் இதற்கான ஒரே மருந்து.இந்த அன்பை முதியோர் களுக்கு கொடுக்கக் கொடுக்க, அது உங்களு க்குள் அதிகம் வளர்வதைக் காண்பீர்கள்.
தோண்டத் தோண்ட ஊருணி, செய்யச் செய்ய அன்பு.அன்பு செய்தலை முதியோரிடம் ஆரம்பிப்போம். இது வரை இல்லா விடினும் இனிமேலாவது முயல்வோம். முயன்றால் முடியாதது தான் எது?
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)