திருநங்கை அப்சராவின் அதிர்ச்சிப் பதிவு !

பரபரப்பான வாழ்க்கை, பிரம்மாண்ட மால்கள், கோலிவுட், கூவம், மெரினா என இன்னும் பற்பல விஷயங்களுக்காக சென்னையை நாம் அறிவோம். ஆனால், நம்மில் பலரும் அறியாத பக்கமும் இருக்கத் தான் செய்கிறது.
திருநங்கை அப்சராவின் அதிர்ச்சிப் பதிவு !
வாகனங்கள் முந்திச் செல்லும் சென்னையின் பகல் பொழுதை தெரிந்திருக்கும் நாம் நடுநிசியில் சென்னை எப்படி இருக்கும் என்பதை அறிந்திருக்க அதிகம் வாய்ப்பில்லை.

அப்படித்தான் நடுநிசியில் சென்னையை அறிய முற்பட்டிருக்கிறார் திருநங்கை அப்சரா ரெட்டி. சமூக ஆர்வலர், பத்திரிகை ஆசிரியர், 

அரசியல் நோக்கர் என பல்வேறு கோணங்களில் இயங்கிவரும் இவர் தனது அனுபவத்தை தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார்.

அவரது முகநூல் பதிவில் இருந்து:

சென்னை நகரம் நடுநிசி இரவில் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விட வேண்டும் என்பது எனது திட்டம். 

நீண்ட நாள் திட்டத்தின்படி அன்றைய தினம் நண்பர் ஒருவருடன் இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்பினோம். 

லயோலா கல்லூரியைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் வழி நெடுக மூன்றாம் பாலினத்தவர் பாதுகாப்புடன் பெண்கள் நிறைந்திருந்தனர். 

சொகுசு கார்களிலும், காஸ்ட்லி பைக்கிலும் வலம் வந்தவர்கள் அவர்களை வட்ட மிட்டுக் கொண்டிருந்தனர். அங்கே பேரம் நடந்து கொண்டிருந்தது.
காரில் இருந்து இறங்கிய நான் அங்கே நின்றிந்த ஒரு பெண்ணிடம் நான் வழக்கமான கேள்வி கேட்க அவரும் வழக்கமாக சொல்வதைப் போல் எங்களுக்கு யாரும் வேலை தருவதில்லை என்றார். 

நான் வேலை தருகிறேன் என்றேன். என்னைப் பார்த்து சிரித்து, கேலி செய்தனர். அப்போது அங்கு வந்த சிலர் என்னிடம் உனக்கு என்ன விலை எனக் கேட்டனர். வெறுப்பில் அங்கிருந்து நகர்ந்து சென்றேன்.

அப்போது அவ்வழியாக ஒரு ரோந்து வாகனம் வந்தது. அதிலிருந்த காவலர் ஒருவரிடம் இதெல்லாம் நிறுத்த மாட்டீர்களா சார் எனக் கேட்டேன். 

அவரது பதில் என்னை அதிர வைத்தது. என்ன செய்ய மேடம், ஏதாவது சொன்னால் எங்களுக்கு சாபம் விடுகிறார்கள். 

செருப்புடன் துரத்துகிறார்கள் அதையும் மீறி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றால் போலீஸார் எங்களை பலாத்காரம் செய்து விட்டனர் என புகார் கொடுக்கின்றனர். 

அதனால் அமைதியாகவே இருந்து விடுகிறோம் என்றார். மவுனத்தோடு அங்கிருந்து நகர்ந்தோம். அடுத்தடுத்ததாக 4 பகுதிகளுக்குச் சென்றோம். 
மெரினாவின் நேப்பியர் பாலம் அருகே நடந்த சம்பவம் என்னை ஆத்திரப்பட வைத்தது. ஆனால் என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. 

சைக்கிளில் குழந்தையுடன் (4 வயது இருக்கும்) வந்த ஆசாமி சாலையில் நின்றிருந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவருடன் பாலத்துக்கு அடியில் சென்று விட்டார். 

குழந்தையே இருட்டில் செய்வதறியாது அழுது கொண்டிருந்தது. மீண்டும் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தேன். அதே பதில் மேடம், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. 

இன்று இவ்விடத்திலிருந்து துரத்தி விடுவோம். நாளை வேறு ஒரு இடத்தில் இதே வேலையை செய்வார்கள். கைது செய்தால் அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்றார்.

இரவு இன்னும் நீண்டு செல்ல மூன்றாம் பாலினத்தவரை நினைத்து வெட்கிப் போனேன். அவர்களுக்காக வருந்துகிறேன். 

ஆனால், இத்தகைய செயல்களை செய்வதால் எப்படி சமூகத்தில் மரியாதையும், சம அந்தஸ்தும் கோர முடியும். 
திருநங்கை அப்சராவின் அதிர்ச்சிப் பதிவு !
பாலியல் தொழிலின் அடையாளமாக இருந்து கொண்டே வேலை வாய்ப்பில் எப்படி உரிமை கோர முடியும். பாலியல் தொழிலில் இருந்து விடுபட்டு வந்தால் அல்லவா வெகுஜனத்தோடு இயைந்து வாழ முடியும்.

இது சரியான தருணம். இப்போதே இவர்கள் அனைவருக்கும் சரியான வழிகாட்டுதலை தர வேண்டும். கண்டிப்புடன் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

இல்லையெனில் கூடிய விரையில் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் இந்த சமூக விரோத செயலால் நிரம்பி விடும். அவர்கள் தங்களது சுயமரியாதையை உணர வேண்டும். 

மேலும் இத்தகைய பாலியல் தொழிலால் விளையும் ஆரோக்கிய கேடு குறித்தும் நான் கவலை கொள்கிறேன்.

எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஆண் காவலர்கள் இவர்களை கைது செய்வதில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டால் பெண் காவலர்கள் கைது செய்யட்டும். 
ஒவ்வொரு முறை பிடிபடும் போதும் அபராதம் விதிக்கப்பட வேண்டும். 

பாலியல் தொழிலை தடுத்து நிறுத்துவதில் காவலர்கள் துணிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings