7 பேர் விடுதலை... வைகோ மெளனம் !

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரின் விடுதலைக்கான வாகனப் பேரணி, நாளை மறுநாள் வேலூரில் இருந்து சென்னையை நோக்கி நடைபெற உள்ளது. 
'இந்தப் பேரணியில் பங்கேற்பது குறித்து வைகோ இதுவரை வாய் திறக்கவில்லை. அரசியல் கடந்து மனிதாபிமானத்தோடு அனைவரும் குரல் முன்வர கொடுக்க வேண்டும்' என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் ஏழு பேரின் விடுதலைக்காக, தமிழக அரசின் அனுமதியோடு, வாகனப் பேரணி ஒன்று வேலூரில் இருந்து கிளம்ப இருக்கிறது. 

'பேரறிவாளன் உள்பட சிறையில் இருக்கும் ஏழு பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்' என்பதை வலியுறுத்தி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.

திரையுலகில் இருந்தும் நடிகர்கள் சத்யராஜ், ரோகிணி, விஜய்சேதுபதி, கலையரசன் ஆகியோரும் இயக்குநர்கள் ராம், வெற்றிமாறன், ரஞ்சித், நவீன் ஆகியோர் பேரறிவாளனின் விடுதலைக்காகக் குரல் கொடுத்துள்ளனர். 

ஆனால், இதுவரையில் வாகனப் பேரணிக்கு ஆதரவாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தரப்பில் இருந்து எந்தக் கருத்துக்களும் வெளியாகவில்லை. ' 

தமது கட்சி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானது எனச்சொல்லும் வைகோ, பேரறிவாளன் விடுதலைக்கான பேரணி குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?' என்ற கேள்வி, புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ் உணர்வாளர் ஒருவர், " ம.தி.மு.கவின் தொண்டர்கள் பலரும் எங்களைத் தொடர்பு கொண்டு, ' பேரணியில் பங்கேற்க ஆவலாக இருக்கிறோம்.

வைகோ ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை' என ஆதங்கப்படுகின்றனர். ஏழு பேரின் விடுதலைக்காக ஒரு வார்த்தைகூட அவர் பேச மறுப்பதைப் பற்றி ம.தி.மு.க தொண்டர்களே வேதனைப்படுகின்றனர். 

தொடக்கத்தில், பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலைக்காக சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுத்தவர் வைகோ.

இப்போது அமைதியாக இருப்பதற்குக் காரணம், அவரை முன்னிலைப்படுத்தாமல் பேரணி நடக்க இருப்பதை பெரிய குற்றமாக பார்க்கிறார். 

நாங்கள் திரு.வைகோவிடம் மட்டுமல்ல, அனைத்துக் கட்சி நண்பர்களிடமும் தெளிவாக ஒன்றைச் சொல்லிவிட்டோம். ' இந்தப் பேரணி என்பது அரசியல் கலப்பில்லாமல் நடக்க வேண்டும். 

எந்தக் கரைவேட்டிக்கும் இங்கு இடமில்லை' என உறுதியாகச் சொல்லிவிட்டோம். மனிதாபிமான அடிப்படையில் தமிழர்கள் ஒன்றுகூட வேண்டும் என்றுதான் வேண்டுகோள் வைக்கிறோம்.

கடந்த வாரம் மதுரை மத்தியச் சிறையில், ராஜீவ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ரவிச்சந்திரனை சந்தித்துப் பேசியிருக்கிறார் வைகோ. அவரிடம், ' இந்த அரசிடம் கோரிக்கை வைத்தால் எடுபடாது. 

நான் உண்ணாவிரதம் இருக்கிறேன். போராடினால்தான் இந்த அரசு கேட்கும்' எனச் சொல்லியிருக்கிறார்.

அதற்குப் பதிலளித்த ரவிச்சந்திரன், ' போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று கிளம்பினால், தேவையற்ற சர்ச்சைகள் கிளம்பும். முதல்வரின் அனுமதியோடு தான் வாகனப் பேரணி நடக்கிறது.

பேரறிவாளன் என்ன சொல்கிறாரோ, அதன்படி நடக்கவே விரும்புகிறோம்' எனச் சொல்லியிருக்கிறார். இந்தப் பதிலை வைகோ எதிர் பார்க்கவில்லை.
தவிர, முன்பொருமுறை ஏழு பேரின் விடுதலைக்காக பிரபல வழக்கறிஞர் ஒருவர் ஆஜராக வந்தபோதும், வைகோவிடம் சில சங்கடங்கள் ஏற்பட்டன. அவர் எங்களிடம், ' நான் இந்த வழக்கைப் பார்த்துக் கொள்கிறேன். 

வேறு யாரும் தலையிட வேண்டாம்' எனச் சொல்ல, ' ஏழு பேரின் விடுதலைக்காக பல வழக்கறிஞர்கள் எங்களுக்காக பல காலகட்டங்களில் உதவியாக இருந்துள்ளனர்.

அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு எப்படிச் செயல்பட முடியும்?' என வேதனைப்பட்டார் தமிழ் உணர்வாளர் ஒருவர். இதையெல்லாம் கணக்கு போட்டுத்தான், நாங்கள் அவரைப் புறக்கணிப்பதாக நினைத்துக் கொள்கிறார். எங்களுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. 

வாகனப் பேரணிக்கு அரசியல் சாயம் பூசப்பட வேண்டாம் என்றுதான் அனைவரிடமும் வலியுறுத்தி வருகிறோம். வைகோவை புறக்கணிக்கும் எண்ணம் எங்களுக்குத் துளியுமில்லை" என்றார் விரிவாக.

' மனிதாபிமானத்தை முன்வைத்து நடக்கும் வாகனப் பேரணிக்கு அரசியல் கடந்து ஆதரவுக் குரல் திரள வேண்டும்' என்பதுதான் ஏழு பேர் விடுதலையை முன்வைப்பவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
Tags: