ஹலால் ஹராம் சட்டவிதிகள் !

ஹலாலாக்குவதும் ஹராமாக்குவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமுரிய ஏக அதிகாரமாகும் இந்த சட்டவிதி, ஒன்றை ஹலால் என்றோ அல்லது ஹராம் என்றோ தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது எனக் கூறுகின்றது.
மனிதர்களில் எவருக்கும் இந்த உரிமை வழங்கப்படவில்லை. மதத் தலைவர்க ளுக்கோ, மன்னர்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ ஹலால் ஹராமை நிர்ணயிக்கும் உரிமை இல்லை என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

இவ்வாறு நடந்து கொள்பவர் அல்லாஹ்வின் ருபூபிய்யத்| என்ற தனித்துவமான பண்பில் கைவைத்தவராகக் கருதப்படுவதுடன் அவரை ஏற்றுக்கொள்வோர் அவரை அல்லாஹ்வுக்கு இணை வைத்தோராகவும் கொள்ளப்படுவார்கள்.

இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது: ''அல்லாஹ் அனுமதிக்காதவற்றை மார்க்கமாக இயற்றித்தரும் அல்லாஹ்வுக்கு இணையாகக் கொள்ளத்தக்கவர்கள் அவர்களுக்கு இருக்கின்றார்களா?'' (அஷ்ஷூரா : 21)

தமது மதகுருமாருக்கு சட்டமியற்றும் அதிகாரத்தைக் கொடுத்த அஹ்லுல் கிதாப்களை அல்குர்ஆன் கண்டிக்கின்றது. ''அவர்கள் (அஹ்லுல் கிதாப்கள்) அல்லாஹ்வை விட்டுவிட்டு தங்களது மதகுருமார்களை ரப்புகளாக எடுத்துக் கொண்டு விட்டனர்.

மஸீஹ் பின் மர்யமையும் ரப்பாக எடுத்துக் கொண்டனர். ஒரே இறைவனை இபாதத் செய்யுமாறே அவர்கள் ஏவப்பட்டனர். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் தூய்மையானவன். ''(தௌபா: 31)

 சட்டமியற்றும் அதிகாரத்தில் தலையிட்ட முஷ்ரிக்களையும் அல்குர்ஆன் கண்டிக்கிறது. ''அல்லாஹ் உங்களுக்கு உணவுப் பொருட்களாக இறக்கிய வற்றை நீங்கள் ஹராம் ஹலால் என்று விதித்துக் கொள்கிறீர்களா? (நபியே) நீர் கூறுவீராக!

அல்லாஹ் உங்களுக்கு இதனை அனுமதித்து உள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் இட்டுக்கட்டிச் சொல்கின்றீர்களா?'' (யூனுஸ்: 59) ''உங்கள் நாவால் பொய்யாக இது ஹலால், இது ஹராம் எனக் கூறி அல்லாஹ்வின் மீது பொய்யாகப் புனைந்து கூறாதீர்கள்.
 
அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைப்போர் வெற்றி பெறுவதில்லை.'' (அந்நஹ்ல்: 116) இந்த வகையில் ஹலால் ஹராமை தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உள்ளது.

அல்குர்ஆன் மூலமோ அல்லது தனது தூதரின் ஊடாகவோ இப்பணியை அல்லாஹ் செய்கின்றான் என்பதை இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் (புகஹாக்கள்) தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்.

தமது பணி இறை சட்டங்களை விளக்குவதே அன்றி சட்டமியற்றுவதல்ல என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

அல்லாஹ் ஹலாலாக்கியவை எவை ஹராமாக்கியவை எவை என்பதை தெளிவுபடுத்துவதோடு அவர்களின் பணி மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்து இருந்தது. ''உங்களுக்கு ஹராமாக்கியவற்றை அவன் உங்களுக்கு விளக்கியு ள்ளான்.''(அன்ஆம்: 120)

இதனால்தான் அல்லாஹ்வின் இந்த அதிகாரத்தில் தலையிட்ட குற்றத்திற்கு ஆளாகி விடுவோமோ என்ற பயத்தில் பல இமாம்கள், அறிஞர்கள் தாம் பூரண தகுதியுடை யோராக இருந்த நிலையிலும் பத்வா மார்க்கத் தீர்ப்புக்களை வழங்குவதில் பெரிதும் தயக்கம் காட்டினார்கள்.

தவறாகவேனும் ஹராத்தை ஹலாலாகவோ, ஹலாலை ஹராமாகவோ மாற்றிக் கூறிவிடுவோமோ என்ற பயத்தில் அடுத்தவரிடம் இப்பொறுப்பை சாட்டிவிட முயன்றார்கள்.
 
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் மாணவனான இமாம் அபூயூஸுப் கூறுவதாக இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறுகின்றார்கள்:

எமது ஆசிரியர்களான அறிஞர்கள் பலரையும் நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் அனைவரும் குர்ஆனில் மிகவும் தெளிவாக இருந்தால் அன்றி இது ஹலால், இது ஹராம் என்று பத்வா சொல்வதை வெறுத்தார்கள்.

ஒரு முக்கிய தாபிஊன்களில் ஒருவரான ரபீஃ இப்னு கைஸம் கூறியதாக இப்னுஸ் ஸாஇப் கூறுகின்றார்கள்: அல்லாஹ் இதனை ஹலாலாக்கினான். அல்லது ஏற்றுக் கொண்டான் என்று கூறுவதையிட்டு நான் உங்களை எச்சரிக்கின்றேன்.

சிலவேளை நீங்கள் சொல்வது பிழையாக அமைந்து, அல்லாஹ் அதனை ஏற்காமல், நீ பொய் சொல்கின்றாய், நான் அதனை ஹலாலாக்க வில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை எனக் கூறக்கூடும். மேலும் அல்லாஹ் இதனை ஹராமாக்கினான் என்று நீங்கள் கூறுவதையும் நான் எச்சரிக்கின்றேன்.

ஏனெனில் அல்லாஹ் அவரைப் பார்த்து, நீ பொய்யுரைத்து விட்டாய், நான் அதனை ஹராமாக்கவோ தடுக்கவோ இல்லை|என்று கூறக்கூடும். ஹராம் எது? ஹலால் எது? என்று அறிவிக்கும் அதிகாரம் எம்மை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்வுக்கு மாத்திரமே உண்டு.
ஹராம் எது, ஹலால் எது, என்பதை அறிந்து அதனைப் பேணி நடக்காதவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். 6:62. (இதன்) பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்விடமே கொண்டு வரப்படுவார்கள். (அந்நேரத்தில்)

தீர்ப்பு கூறும் அதிகாரம் அவனுக்கே உரியது என்பதை அவர்கள் அறிந்துகொள்ளட்டும். அன்றி அவன் கணக்கைத் தீர்ப்பதிலும் மிகத் தீவிரமானவன்.
Tags:
Privacy and cookie settings