ரேஷன் கடையில் பொருள் வாங்க ஆதார் அட்டை அவசியம் இல்லை !

ஆதார் அட்டை ஜெராக்ஸ் தராவிட்டாலும் கூட ரேஷன் கடைகளில் பொருள் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக உணவு வழங்கல் துறை அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர். 
ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க ‘ஸ்மார்ட் கார்டு' வடிவில் ரேஷன் கார்டுகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாம். மற்றொரு பக்கம், ஆதார் அட்டை நகலை ரேஷன் கடைகளில் தர வேண்டும் என்று உணவு வழங்கல் துறை கேட்டுக்கொண்டது.

ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் எண்களை வாங்க வேண்டும் என்று அனைத்து நியாய விலை கடைக்காரர்களுக்கும், உணவு வழங்கல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. 

ரேஷன்கார்டுதாரருக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு ரசீது வழங்குவதற்கு பதிலாக, பொருட்களின் விவரம், அளவு, விலை, மொத்த தொகை, வாங்காத பொருட்களின் விவரங்கள் அவர்களது குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்பட உள்ளது. 

இதன் மூலம் கடையில் உள்ள இருப்பு விவரத்தையும் தெரிந்து கொள்ள முடியும். இதை காரணமாக காட்டி, செல்போன் எண்ணுடன் ஆதார் நகலையும் தர வற்புறுத்துகிறார்கள் ரேஷன் கடை ஊழியர்கள்.

ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கும் பொருட்கள் வழக்கம் போல் வழங்கப்படும் என்று உணவு வழங்கல் துறை கூறியிருந்தாலும், பல கிராமங்களில், ஆதார் அட்டை நகலை தந்தால்தான் ரேஷனில் பொருட்களை வினியோகம் செய்வோம் என்று ஊழியர்கள் வம்பு செய்வதாக தகவல்கள் வருகின்றன. 

இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதும், விழித்துக்கொண்ட உணவு வழங்கல் துறை உயர் அதிகாரிகள், ஆதார் அட்டையை கட்டாயமாக கேட்கக்கூடாது என்றும், ஆதார் அட்டை வைத்துள்ளோர் விவரம் தரலாம், இல்லாதவர்கள் தராமலும் இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். 

ஆதார் அட்டை ஜெராக்ஸ் தராதாவர்களுக்கும், உணவு பொருள் எந்த குறைபாடும் இன்றி சப்ளை செய்யப்படும் என்றும் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings