ஆசைப்பட்ட பதவி அம்பேல்.. விஜயதாரணி?

காங்கிரஸ் கட்சியில் நிலவும் உள்குத்து காரணமாக வசந்தகுமார் மற்றும் விஜயதாரணி ஆகிய இருவரில் ஒருவருக்கு கூட சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் பதவி கிடைக்காமல் போய்விட்டதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தோர். 
கடந்த ஆட்சி காலத்தின் இறுதிகட்டத்தில், தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தார்.

தம்மை மிக மோசமாக இளங்கோவன் விமர்சித்ததாக கூறி விஜயதாரணி தரப்பு போலீசுக்கு போனது. 

அதேபோல் விஜயதாரணி ஜாதியின் பெயரால் தங்களை மிக மோசமாக திட்டியதாக இளங்கோவன் ஆதரவாளர்களும் போலீசில் புகார் கொடுத்தனர்.

நடந்த சம்பவங்கள் தொடர்பாக ராகுல் காந்திக்கு இ மெயில் ஒன்றை அனுப்பினார் விஜயதாரணி. இளங்கோவன் என்னை விமர்சிப்பதும் திட்டுவதும் இது 3-வது முறையாகும். 

என்னை மட்டுமல்ல கட்சியில் இருக்கும் பெண்கள் பலரையும் இதேபோல் திட்டியிருக்கிறார். பெண்களுக்கு தொல்லை கொடுப்பது இளங்கோவனுக்கு வாடிக்கையாகிவிட்டது.

இவ்வாறு விஜயதாரணி குற்றம்சாட்டிய நிலையில், அவரிடமிருந்த மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியை பறித்து ராகுல் காந்தி உத்தரவிட்டார். 

இதனால் இளங்கோவன் கை ஓங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் குஷியான நிலையில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியை விஜயதாரணிக்கு வழங்கி அதிரடி செய்தார் ராகுல் காந்தி.
இந்நிலையில் விஜயதாரணி விளவங்கோடு சட்டசபை தொகுதியில் இருந்து மீண்டும் வெற்றி பெற்று எம்எல்ஏவாகியுள்ளார். கடந்த சட்டசபையில் காங்கிரஸ் கட்சி கொறடாவாக இருந்த விஜயதாரணி இம்முறை, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராகிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

சட்டப்பேரவை குழு தலைவர் பதவி கிடைத்தால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்த அதிகாரம்மிக்க பதவியாக அது அமையும் என்பதால் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளலாம் என்று விஜயதாரணி திட்டமிட்டார்.

இதுஒருபக்கம் என்றால் நாங்குநேரி சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசந்தகுமாரும், இப்பதவிக்கு காய் நகர்த்தினார். 

கோடீஸ்வர எம்எல்ஏவான இவருக்கு காங். மேலிடத்தில் செல்வாக்கு இருப்பதாலும், ஏற்கனவே எம்எல்ஏவாக பதவி வகித்தவர் என்ற அனுபவத்தின் அடிப்படையிலும், சட்டசபை காங்கிரஸ் குழு தலைவராக விரும்பினார்.

வசந்தகுமார் மற்றும் விஜயதாரணி ஆகிய இருவருமே இளங்கோவனுக்கு ஆகாதாவர்கள் என்பதால், எப்படியாவது, இருவரையும் வரவிடக்கூடாது என்று ஒருபக்கம் இளங்கோவன் தரப்பு காய் நகர்த்தியதாக கூறப்படுகிறது.

விஜயதாரணியின் மகிளா காங்கிரஸ் தலைவி பதவி பறிக்கப்பட்டதை போலவே வசந்தகுமாரிடமிருந்த காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் பதவியையும் பறிக்க காரணமாக இருந்தவர் இளங்கோவன் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், காங்கிரஸ் குழு தலைவர் பதவியை மட்டும் இவர்களுக்கு கிடைக்க இளங்கோவன் விட்டுவிடுவாரா என்ன? என்று சவால்விடுத்தனர் அவரின் ஆதரவாளர்கள்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவராக காரைக்குடி எம்.எல்.ஏ. கே.ஆர். ராமசாமி, கொறடாவாக விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று இளங்கோவன் இன்று அறிவித்தார். 
பேட்டியின் போது விஜயதாரணியும் அருகிலேயே அமரச் செய்யப்பட்டிருந்தார். பெரிதாக கேள்விப்படாத ராமசாமியை, காங்கிரஸ் குழு தலைவராக்கி விஜயதாரணிக்கும், வசந்த குமாருக்கும் செக் வைத்துள்ளார் இளங்கோவன்.

விஜயதாரணியும், முதல்வர் ஜெயலலிதாவும் நட்புறவோடு இருப்பவர்கள். இதை பயன்படுத்தி, விஜயதரணி 5 எம்எல்ஏக்களுடன் அதிமுக செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இதையும் காங்கிரசின் உள்குத்து வேலைதான் என்று விஜயதாரணி கூறியிருந்தார். சட்டசபை குழு தலைவராக விடாமல் தடுக்கவே அவ்வாறு வதந்தி பரப்பப்பட்தாக அவர் கூறினார்.

இப்போது, சட்டசபை குழு தலைவர் பதவி தரப்படாமல் விஜயதாரணி புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அதிமுக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கிசு கிசுக்கிறார்கள். 

இளங்கோவனுக்கு எதிராக காங்கிரசின் உள்ளேயிருந்தே விஜயதாரணி போராடுவாரா, அல்லது வெளியேறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings