ஒரு குடம் தண்ணீர் ரூ.10 வறட்சியில் வாடுகிறது பெங்களூர் !

கோடை சுட்டெரிக்கும் நிலையில், கர்நாடகாவில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பின்னணியில் குடிநீர் மாஃபியாக்கள் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். 
கர்நாடகாவில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டது. பெங்களூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. 

எப்போதுமே வறட்சிக்கு பெயர் பெற்ற வட கர்நாடகாவும் இதில் விதிவிலக்கு கிடையாது. கோடையின் தாக்கம் அதிகரிக்க, அதிகரிக்க குடிநீர் தட்டுப்பாடும் கூடிக்கொண்டே போகிறது.

வட கர்நாடகாவின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டால், திருமணங்கள் 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் திருமண மண்டபங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ரூ.10 விலை வட கர்நாடகாவின் பல கிராமங்களில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 என்ற விலையில் விற்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்கள் அதிகம் கொண்ட அம்மாவட்டங்களில் இது மிகப்பெரிய தொகையாகும்.
தலைநகர் பெங்களூரும் இதற்கு தப்பவில்லை. காவிரி நீர் என்று அழைக்கப்படும் கார்பொரேஷன் தண்ணீர் வரத்து 1 வாரத்திற்கு ஒருமுறை என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. இதனால் குடிநீருக்காக கேன்களை மக்கள் நம்பியுள்ளனர்.

குளிப்பது போன்ற அன்றாட தேவைகளுக்கு டேங்கர் லாரிகளில் தண்ணீர் வரவழைத்து தொட்டிகளில் நிரப்பிக்கொள்கிறார்கள். 

ஒரு லோடு டிராக்டர் தண்ணீர் ரூ.300 முதல் ரூ.400 வரையில் விற்பனையாகிவருகிறது. குடிநீர் பிரச்சினையோடு, மின்வெட்டு பிரச்சினையும் பெங்களூர் மக்களை வாட்டி வருகிறது. 

மின்சார வெட்டு காரணமாக, டேங்கர் லாரிகள் கூட நினைத்த நேரத்தில் தண்ணீரை ஏற்றி கொண்டுவர முடிவதில்லை. இதனால் லாரி தண்ணீருக்காக பல மணி நேரங்கள் மக்கள் காத்திருக்கிறார்கள்.

அரசுக்கு சொந்தமான நீர் நிலைகளில் தண்ணீரை இலவசமாக நிரப்பும், டேங்கர் லாரிகள், அதை மக்களிடம் அநியாய விலைக்கு விற்பனை செய்கின்றன. 
தண்ணீர் மாஃபியாக்களை கர்நாடக காங்கிரஸ் அரசு கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது மக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.

ஜூன் மாதம் தொடங்கும் மழைக்காலத்தின்போது, கடந்த ஆண்டைவிட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை இலாகா கூறியுள்ளது. அவ்வாறு பெய்யும் மழையைதான் மக்கள் மலைபோல நம்பியுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings