தமிழ் சினிமாவில் நெப்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் நெப்போலியன் மாதிரி சினிமாவிலும் அரசியலிலும் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டவர்கள் யாருமில்லை.
புது நெல்லு புது நாத்துவில் வில்லனாக அறிமுகமானவர், எஜமானில் ரஜினிக்கு இணையான வில்லனாகக் கலக்கினார். அடுத்து சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா போன்ற படங்களில் நாயகனாகவும் ஜெயித்தார்.
குடும்பமே பாரம்பரியமாக அரசியல் சார்ந்தது என்பதால், திமுகவில் எம்எல்ஏ, எம்பி, மத்திய அமைச்சர் என அடுத்தடுத்து புரமோஷன்.
கடைசியாக பொன்னர் சங்கர் படத்தில் நடித்தார். அப்போது மத்திய அமைச்சராகத் தான் இருந்தார். பிரதமரின் சிறப்பு அனுமதியுடன் நடித்தார் நெப்போலியன்.
அதன் பிறகு குடும்பத்தோடு அமெரிக்காவுக்குப் போய் செட்டிலாகிவிட்டார். பாஜகவில் சேர்ந்தாலும், பின்னர் அரசியலில் ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கி விட்டார்.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, நெப்போலியன் மாதிரி தோற்றம், வேடப் பொருத்தம் உள்ள நடிகர்கள் அரிது. எனவே இன்னும் அவருக்கான இடம் அப்படியே தான் உள்ளது.
அவர் அமெரிக்கா விலிருந்த போது, பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தொடர்பு கொண்டு நடிக்க அழைப்பு விடுத்தனர். ஆனால் அவற்றை ஏற்கவில்லை.
இப்போதும் தொடரும் அழைப்புகளைத் தட்ட முடியாமல் ஒரு முடிவெடுத் திருக்கிறார் நெப்போலியன். தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டும் நடிக்கலாம் என்பது தான் அந்த முடிவு.
முடிவெடுத்த கையோடு இரண்டு படங்களில் நடித்தும் கொடுத்து விட்டார் மனிதர். ஷங்கரின் உதவியாளர் சந்துரு இயக்கத்தில் தமிழ் - தெலுங்கில் வெளியாக விருக்கும் சரபா என்ற படத்தில் பிரதான வேடமேற்றுள்ளார்.
அந்தப் படத்தில் இவர் நடித்த விதம், தொழில் நேர்த்தி பார்த்து வியந்த தெலுங்கு டெக்னீஷியன்கள், 'சார், இங்கேயே இருந்து விடுங்கள்... உங்களைப் போன்ற சின்சியரான கலைஞர்களைப் பார்ப்பது அரிது' என்றார்களாம்.
அந்தப் படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக நடித்த ஜெயப்ரதாவும் 'என்ன சார்..
இத்தனை நாள் நடிக்காம இருந்துட்டீங்களே...' என்றாராம். இந்தப் படத்தில் அவர் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரு பாடலை சொந்தக் குரலில் பாடியுள்ளாராம்.
அடுத்து தமிழில் பாபி சிம்ஹா நடிக்கும் வல்லவனுக்கு வல்லவன் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம் நெப்போலியன்.
படங்களில் நடிப்பது குறித்துக் கேட்ட போது, "தொடர்ச்சியான அழைப்புகள் காரணமாக படங்களில் நடிப்பதைத் தொடரப் போகிறேன்.
ஆனால் தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டும் தான். ஆண்டுக்கு நான்கு படங்கள் பண்ணாலே போதும். இது பணத்துக்காக அல்ல... எனது மனத்திருப்திக்காக," என்றார்.