சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு படு உற்சாகமாக தயாராகிவிட்டார் திமுக தலைவர் கருணாநிதி. சகல வசதிகளுடன் தயாராக உள்ள ஹைடெக் பிரச்சார வாகனத்தில் டிரையல் பயணம் செய்து திமுகவினரை உற்சாகப்படுத்தினார்.
92 வயதாகும் கருணாநிதி இன்றைக்கும் படு சுறுசுறுப்பாக தன்னுடைய எழுத்துக்கள் மூலம் எதிர்கட்சியினரை எதிர் கொள்கிறார். எனினும் அவர் பிரச்சாரம் செய்வதற்காக சகல வசதிகளும் கொண்ட தனி பிரச்சார வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வறியா தலைவர்
அரசியலில் முதுபெரும் தலைவர் என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி. அவரைப் பொறுத்தவரையிலும், வயது என்பது வெறும் எண் மட்டுமே. ஓய்வறியா தலைவர்.
எழுத்துப் பணியிலோ, கட்சிப் பணிகளிலோ என்றைக்கும் தொய்வு ஏற்பட்டதில்லை. தேர்தல் நேரத்தில் அவருக்கு உடல்நலம் இல்லை என்ற தகவல் பரவியது தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
சூறாவளி சுற்றுப் பயணம்
உடல் சோர்வாக இருந்த நிலையிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தான் தயாராக இருப்பதாகவே கூறினார். முக்கிய தொகுதிகளில், அவரே நேரடி பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும், பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடையில் பேசுவார் என்றும் திமுக வட்டார தகவல்கள் தெரிவித்தன.
ஹைடெக் வேன்
இதை உறுதி செய்யும் விதமாக, கருணாநிதியின் பிரசாரத்திற்காக, சிறப்பு வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார வாகனத்தில் கருணாநிதியின் வீல் சேரை ஏற்றி இறக்கவும், அதை வசதியாக வேனில் பொருத்தவும் இடம் உள்ளது. இது தவிர பிரசாரம் செய்ய வசதியாக மைக், ஒலிபெருக்கிகளும், பிரகாசமான விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
ஸ்டாலின் பயணம்
வேனில் ஓய்வு எடுக்கவும், வேனை சுற்றிலும் பாதுகாப்புக்கு போலீசார் நின்று பயணம் செய்யவும் தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வேனில் உள்ள வசதிகள் மற்றும் வடிவமைப்பை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமையன்று நேரில் பார்வையிட்டு
சிறிது தூரம் பயணம் செய்தார். இதில், முழு திருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து, தலைவர் கருணாநிதிக்கும் இதுபற்றி தகவல் தெரிவித்தார்.
கருணாநிதி உற்சாகம்
அண்ணா அறிவாலயத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரச்சார வேனை மாலையில் பார்வையிட்டார் கருணாநிதி. பிரச்சார வேன் ஜம்மென்று இருப்பதை பார்த்த உடன் உற்சாகமடைந்தார்.
வேனில் அமர்ந்து நீலாங்கரை வரை பயணம் செய்தார். அவருடைய உற்சாகம் அவருடன் பயணித்த மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோரும் தொற்றிக்கொண்டது.
நான் ரெடி... நீங்க ரெடியா
கடந்த சில நாட்களாக, உடல்நலமின்மை காரணமாக, கட்சி நிகழ்ச்சிகள் தவிர, மற்ற தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை கருணாநிதி தவிர்த்து வந்தார். இப்போது பிரச்சார வேனைப் பார்த்த உடன் அவருக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. மொத்தத்தில், எத்தனை போட்டிகள் இருந்தாலும், அவற்றை எதிர்கொள்ள கருணாநிதி தயாராகி விட்டதையே இது காட்டுகிறது.
தொண்டர்கள் உற்சாகம்
பிரச்சார வேனில் தலைவரைப் பார்த்த திமுகவினர் உற்சாகமடைந்தனர். எங்கள் தலைவரைப் பொறுத்தவரை உடல்நலம் மட்டுமே, நடக்க உள்ள தேர்தலில் அவருக்க எதிரி. மற்றபடி, ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் ஒளி மறைவதில்லை, என கூறுகின்றனர்.
நீண்ட நெடிய அரசியல் பயணம்
தேர்தல் களத்தில் எதிரிகளை சந்திக்க கருணாநிதி என்ற ஒருவர் இருந்தாலே போதும், என திமுக தொண்டர்கள் கூறுகின்றனர். ஏன் எனில், அவரைப் பொறுத்தவரை, நீண்ட நெடிய அரசியல் பயணத்தில், இந்த தேர்தலும் கடந்துபோகக்கூடிய ஒன்றே.
இந்த தேர்தலில் வெற்றிக்கனியை சுவைக்க வேண்டும் என்ற அவரது ஆசையை 92 வயது வாழ்ந்த பலனை தொண்டர்கள் நிறைவேற்றுவார்களா பார்க்கலாம்.