மகாமகம் சிறப்பு லோகோ வெளியீடு !

மகாமக விழாவை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு அடையாள சின்னம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப் பட்டுள்ளது என்று அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன் கூறினார்.
மகாமகம் சிறப்பு லோகோ வெளியீடு !
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற உள்ள மகாமக பெருவிழா வருகிற பிப்ரவரி மாதம் 13-ந் தேதி காலை 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதன் முக்கிய பெருவிழாவான மகாமக தீர்த்தவாரி வருகிற 22-ந்தேதி மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் நடைபெற உள்ளது. 

இந்த விழாவிற்கு லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் பல கோடிரூபாய் மதிப்பீட்டில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் மகாமக விழா 2016-ம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு அடையாள சின்னம் (லோகோ) வெளியிடப் பட்டுள்ளது.

இது குறித்து மயிலாடுதுறை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன் கூறியதாவது:- 
மகாமக விழா 2016-ம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அடையாள சின்னத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் கோபுரம்,

மகாமக குளம் மற்றும் அதில் சிவன் பார்வதி படத்துடன் சூலத்தையும், பெருமாளுக்குரிய திருமண்ணை அந்த எழுத்துகளின் நடுவில் பொறிக்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது.

இந்த அடையாள சின்னம் அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் வெளியிடப்படும் தகவல்களில் இடம் பெற உள்ளது.