பென்குயின்களுக்கு பாதுகாவலனாக உள்ள நாய்கள் !

அவுஸ்திரேலியாவின் மிடில் தீவில்தான் உலகிலேயே மிகச் சிறிய பென்குயின்கள் வசிக்கின்றன. ஓர் அடி உயரமும் ஒரு கிலோ எடையும் கொண்ட இவை ஓரிடத்தில் கூட்டமாக வசிக்கும் இயல்புடையவை. 
பென்குயின்களை நரிகள் வேட்டையாடுவதால் அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டன. 15 ஆண்டுகளுக்கு முன்பு 800 பென்குயின்கள் காணப்பட்ட அங்கே 10 ஆண்டுகளுக்கு முன்பு 4 மட்டுமே எஞ்சியிருந்தன.

இவற்றைக் காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் ஒன்றும் பலனளிக்கவில்லை. அவுஸ்திரேலியாவில் கோழிகள், ஆடுகளைக் காப்பாற்றுவதற்கு நாய்களைப் பயன்படுத்துவதுண்டு. இதனால் 2006-ம் ஆண்டு நாய்களை அனுப்பி, பென்குயின்களை காக்கும் முடிவுக்கு வந்தனர். 

நரிகள் வரும் வழிகளில் நாய்களை நிறுத்திவிடுவதால் நாய்களின் குரைப்புக்குப் பயந்துகொண்டே நரிகள் நெருங்கி வருவதில்லை. திங்கள் முதல் வெள்ளி வரை நாய்கள் பென்குயின்களைக் காக்கும் பணியில் ஈடுபடுகின்றன. 

நாய்களின் வாசம் அங்கேயே இருப்பதால் சனி, ஞாயிறுகளிலும் நரிகள் எட்டிப் பார்ப்பதில்லை. கடந்த 9 வருடங்களில் நரிகளால் ஒரு பென்குயினைக் கூட வேட்டையாட முடியவில்லை.

தற்போது மீண்டும் அங்கு பென்குயின்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்திருக்கிறது. பென்குயின்களைக் காப்பாற்றும் நாய்களின் கதை ‘ஆட்பால்’ என்ற பெயரில் ஹொலிவுட் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.
Tags:
Privacy and cookie settings