வெள்ளத்தில் சிக்கிய கீர்த்திசுரேஷ் !

கீர்த்தி சுரேஷ் சென்னையில் வெள்ளத்தால் மிகவும் அலைக் கழிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் ஒரு புகைப்படமும், தான் அனுபவித்த பிரச்னை குறித்தும் பகிர்ந்துள்ளார்.  
நீங்கள் பார்க்கும் இந்தப்படம் வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட என் வீட்டின் நிலைதான். என் இடுப்பு வரை தண்ணீர் ஏறியுள்ளது. உண்மையில் என் குடும்பத்தாருடன் நான் அனுபவித்த இந்த வெள்ள பாதிப்பு நம்பமுடியாதது. 

எனது பாட்டி அறுவை சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கே அம்மா துணைக்கு நிற்க எனது இரண்டு மாமாக்களும் வீட்டுக்கு வந்து சேர்ந்த போது திடீரென என்ன நடக்கிறது என்றே தெரியா வண்ணம் தண்ணீர் வீட்டினுள் ஏறத் துவங்கியது. 

எங்களால் என்ன நடக்கிறது என்பதை உணர முடிகிறது. நாங்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் அறை அறையாக பொருட்களைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருக்கிறோம்.

முட்டி அளவிற்குத் தண்ணீர் ஏறி விட்டது. அதே சமயம் மின்சாரத் தடை வேறு , இருளிலேயே கையில் கிடைத்த சில உணவுப் பொருட்கள், உடைகளுடன் மேல் தளத்திற்குச் சென்றுவிட்டோம். இரண்டு நாட்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தீவு போல் இருந்தது. 

நூற்றுக்கும் மேலான மக்கள் நீரில் நடந்து சென்று மெட்ரோவில் ஏறுவதை எங்களால் காண முடிந்தது. மக்கள் பலரும் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு நடந்து சென்றனர். ஒரு தாய் தன் இரு குழந்தைகளுடன் நீரில் நடந்து சென்றதைப் பார்க்கையில் அவ்வளவு கடினமாக இருந்தது. 

இருட்டையடுத்து மொபைல் நெட்வொர்க்குகளும் தடுமாற ஆரம்பித்தன. என் அம்மா கடைசியாக பேசியபோது மருத்துவமனையில் ஜெனரேட்டர் அறையில் தண்ணீர் புகுந்ததால் பாட்டிக்கு சிகிச்சை ரத்தானது எனக் கூறினார்.

எனது நண்பர்களின் உதவியுடன் எங்கள் வீட்டில் இருந்த ஒவ்வொருவராக வெளியேறத் துவங்கி எங்கள் உறவினர்கள் வீடுகளை அடைந்தோம். மருத்துவமனையில் பாட்டியுடன் இருந்த என் அம்மா, வெறும் 5 பிஸ்கட்டுகள், இரண்டு கிளாஸ் பால் மட்டுமே உணவாக உண்டதாகக் கூறியது கேட்டு அதிர்ந்தேன்.
அருகிலிருந்த கடைகளில், பிஸ்கட்டுகளை, சாக்லேட்டுகளை உண்டு உயிர் வாழ்வது முடியாத காரியம். என நினைத்து மருத்துவமனையிலிருந்து போரூர்வரை மார்பளவு தண்ணீரில் நடந்து வந்துள்ளனர். 

நல்ல வேளை என் பாட்டிக்கு அறுவைசிகிச்சை நடத்தவில்லை. நடந்திருந்தால் அவரும் ஐசியூவில் இருந்திருப்பார். அங்குதான் 18 பேர் செயற்கை சுவாசமின்றி உயிரிழந்தது தெரிந்தது. 

ஹோட்டல்களிலும் ரூம்கள் இல்லை என்ற நிலையில் எனது நண்பர்கள் வீடுகளில் தங்கி தப்பிப் பிழைத்தோம் எனக் கூறியுள்ளார் ரஜினிமுருகன், மற்றும் இது என்ன மாயம் படங்களின் நாயகி கீர்த்தி சுரேஷ்.
Tags:
Privacy and cookie settings