ஆசிரியர் கெட்ட வார்த்தையால் திட்டியதால் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!

தூத்துக்குடி அருகே மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆபாசமாக திட்டிய ஆசிரிய ரைக் கண்டித்து மாணவர்கள் திடீர் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற் பட்டது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அரசு உதவி பெறும் ராஜா மேல் நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது.
 

இங்கு சுமார் 1200 மாணவர்கள் படித்து வருகின்றனர். பிளஸ் ஓன், பிளஸ் டூ வகுப்புகளில் மட்டும் சுமார் 500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேல்நிலையில் கணிதம், அறிவியல், வரலாறு, வணிகவியல் பாடப்பிரிவுகள் உள்ளன.

இதில் வணிகவியல் மட்டும் சுயநிதி பிரிவாக உள்ளது. இந்த பிரிவு ஆசிரியர்களுக்கு மாணவர்களிடம் இருந்து நன்கொடை வசூலித்து ஊதியம் வழங்கப்படுகிறது.

வணிகவியல் பிரிவில் கடந்த 18 வருடமாக பணிபுரிந்த ஆசிரியரை நி்ர்வாகம் நீக்கிவிட்டு புதிதாக தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரை நியமித்தது.

இந்த நிலையில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆசிரியர் பாடம் நடத்துவது தங்களுக்கு புரியவில்லை என்றும் மாணவர்களை பட்டபெயர் வைத்து அழைப்பதாகவும், மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். மாணவர்களுக்கு ஆதரவாக மா கம்யூ, பாஜ, மனித நேய மக்கள் கட்சி, காங் உள்ளிட்ட கட்சியினரும் களம் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் எட்டயபுரம் தாசில்தார் ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
 
ஆனால் கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் மற்றும் அரசியல் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நீக்குவதாகவும், இதுகுறித்து பெற்றோர்- மாணவர்கள் கூட்டத்தை கூட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டதால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:
Privacy and cookie settings