லலித் மோடியின் பெயரை பத்ம விருதுக்கு பரிந்துரை செய்த வசுந்தரா ராஜே !

 2007 ஆம் ஆண்டு லலித் மோடியின் பெயரை "பத்ம" விருதுக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே பரிந்துரை செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, லண்டனில் இருந்து, தனது மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்காக போர்ச்சுக்கல் செல்ல பயண ஆவணங்கள் பெற உதவியதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் மீது குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், அவர்கள் பதவி விலகவேண்டும் என்று  காங்கிரஸ் தொடர்ந்து போராடி வருகின்றது. மேலும் லலித் மோடிக்கும், வசுந்தரா ராஜே குடும்பத்துக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் விதமாக அடுக்கடுக்கான புகார்களையும் காங்கிரஸ் கூறி வருகிறது.

இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு ராஜஸ்தான் முதலமைச்சராக வசுந்தரா ராஜே பதவி வகித்தபோது மதிப்புவாய்ந்த "பத்ம" விருதுக்கு லலித் மோடியின் பெயரை மத்திய அரசிடம் பரிந்துரை செய்தது, தற்போது தெரியவந்துள்ளது.

தொழில் மற்றும் கிரிக்கெட் வளர்ச்சிக்கும் ஆற்றி வரும் சேவையை கவுரவிக்கும் வகையில் இந்த விருதை வழங்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில விளையாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே இந்த பரிந்துரையை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த விவரம் வருமாறு: லலித் மோடியின் பெயரை "பத்ம" விருதுக்கு வசுந்தரா ராஜே சிபாரிசு செய்ய முடிவு எடுத்த உடனே, விருதுக்கு விண்ணப்பிக்குமாறு மாநில விளையாட்டு ஆணையம் லலித் மோடியை கேட்டுக்கொண்டுள்ளது.

பின்னர் அவரிடம் பெறப்பட்ட விண்ணப்பத்தை, அப்போதைய ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க செயலாளர் சுபாஷ் ஜோஷியின் ஒப்புதலுக்காக ராஜஸ்தான் விளையாட்டு ஆணையத்தின் செயலாளராக இருந்த யு.டி.கான் அனுப்பிவைத்துள்ளார். 

அப்போது ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவராக லலித் மோடி பதவி வகித்து வந்தார். இதன்பிறகு, மாநில விளையாட்டு ஆணையம் அந்த விண்ணப்பத்தை மேல் நடவடிக்கைக்காக 2007 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளருக்கு அனுப்பிவைத்தது.

அதன் அடிப்படையில் "பத்ம" விருதுக்கான பரிந்துரையை ராஜஸ்தான் அரசு மேற் கொண்டது. இதில் இரண்டு விதமான சிபாரிசுகள் செய்ய ப்பட்டு உள்ளன.

ஒரு பரிந்துரையில் லலித் மோடியின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இன்னொரு பரிந்துரையில் லலித் மோடியின் பெயருடன் சர்வதேச வில்வித்தை வீரர் லிம்பா ராமின் பெயரையும் "பத்ம" விருதுக்கு இணைத்து இருந்தனர்.

இந்த சிபாரிசில், ராஜஸ்தான் மாநிலத்தில் லலித் மோடி தொழில் முதலீடு எவ்வளவு செய்துள்ளார் என்பது பற்றியும், மாநிலத்தின் விளையாட்டு வளர்ச்சிக்கு

அவர் ஆற்றி வரும் சேவை குறித்தும் குறிப்பிடப் பட்டிருந்தது. லலித் மோடி 2006 ஆம் ஆண்டு இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் கோப்பையை நடத்தியவர் .

எனினும், அப்போது மத்திய அரசு, லலித் மோடிக்கு ராஜஸ்தான் அரசு "பத்ம" விருது வழங்க கோரிய சிபாரிசை புறக்கணித்து விட்டது. லிம்பா ராமுக்கு 2012 ஆம் ஆண்டு மத்திய அரசு "பத்மஸ்ரீ" விருது வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில், லலித் மோடிக்கு, "பத்ம" விருது வழங்க வசுந்தரா ராஜே சிபாரிசு செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது என்பது குறிப்பபிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings