நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது !

நடிகர் சங்கத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சற்று முன்னர் மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. வாக்களிப்பு முடிந்த கையோடு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
 
கடந்த சில மாதங்களாக பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வந்த நடிகர் சங்க தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. 

நீதிபதி பத்மநாபன் மேற்பார்வையில் நடந்த இந்தத் தேர்தல், சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை மற்றும் சிசிடிவியின் பலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்திருக்கிறது. 

முதல் ஆளாக நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியில் இருப்பவரும், அதே பதவிக்கு மீண்டும் போட்டியிடுபவருமான ராதாரவி வாக்களித்தார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கிய இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

காலை 7 மணிக்கே தேர்தல் தொடங்கி சுமுகமாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து 12 மணியளவில் சிலபல தள்ளு முள்ளுகள், அடிதடிகள் ஆகியவை நடந்து நடிகர் சங்கத் தேர்தலை பரபரப்பாக மாற்றின. 

இடையில் விஷாலின் மயக்கம் வேறு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது. அவரை யாரும் தாக்கவில்லை என்று நடிகர் சரத்குமார் ஊடகங்கள் முன்னிலையில் பேட்டி கொடுத்தார். 

தேர்தலில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டால் தேர்தலை ரத்து செய்துவிடுவேன் என்று தேர்தல் அதிகாரி பத்மநாபன் எச்சரிக்கையின் பின்னர் தேர்தல் மீண்டும் அமைதியாக நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பொன்வண்ணனும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடுகின்றனர். 

சரத்குமார் அணியில் தலைவர் பதவிக்கு மீண்டும் சரத்குமாரும், பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவியும், துணைத் தலைவர் பதவிக்கு சிம்புவும், பொருளாளராக எஸ்எஸ்ஆர் கண்ணனும் போட்டியிடுகின்றனர். 

சற்று நேரத்திற்கு முன்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, முதல் சுற்று முடிவுகள் மாலை 6.30 மணியளவில் தெரியவரும்.இன்று இரவு 9 மணிக்குள் தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாகி விடும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
Tags: