அதிமுக அரசு விழித்துக் கொள்ளா விட்டால் சிறை நிரப்பும் போராட்டம்: ஸ்டாலின்

தமிழகத்தில் நிலவும் கடும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க அ.தி.மு.க. அரசு விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும், இனியும் அமைதி காத்து நடவடிக்கை எடுக்கத் தவறினால்,
 
செயலற்ற அ.தி.மு.க. அரசை எதிர்த்து மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கூறுகையில்,

"சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்த்து வைக்காத அ.தி.மு.க. அரசை கண்டித்து கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினேன். மனித குலத்தின் அடிப்படை தேவைகளில் ஒன்று தண்ணீர்.

ஆனால் அந்த தண்ணீரை முறைப்படி விநியோகிக்காமல் அ.தி.மு.க. அரசு மக்களை வாட்டி வதைக்கிறது. இன்று நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது.

ஆறுகள், குளங்கள், ஏரிகள், கிணறுகள் என்று 5,70,000த்திற்கும் மேற்பட்ட நீர் ஆதாரங்கள் தமிழகத்தில் உள்ளன என்றாலும், மக்களின் அடிப்படை தேவையான தண்ணீரை வழங்கும்

இந்த நீர் ஆதாரங்களை பாதுகாக்கவோ அல்லது மேம்படுத்தவோ அ.தி.மு.க. அரசு முயற்சி எதுவும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக அ.தி.மு.க. ஆட்சியில் நீர் ஆதாரங்களும், நிலத்தடி நீரும் குறைந்து கொண்டே வருகின்றன.

சமீபத்தில் வெளிவந்துள்ள செய்தியின் படி சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் 1220 கோடி ரூபாய் கடனில் மூழ்கியிருக்கிறது. இந்த வாரியத்திற்கு அதிக நிதி ஒதுக்க அ.தி.மு.க. அரசு மறுத்து வருகிறது.

இதன் மூலம் பொது மக்களின் நலனைப் புறக்கணித்து, அவர்கள் படும் துயரத்தை அ.தி.மு.க. அரசு புரிந்து கொள்ள மறுக்கிறது என்பதுதான் தெளிவாகிறது. ஆனால் குடிநீரை விலைக்கு விற்பதில் மட்டும் அ.தி.மு.க. அரசு அக்கறை காட்டுகிறது.

"இரண்டாவது வருடமாக மழை பெய்யும் அளவு குறைந்து விட்டது என்றாலும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க அரசு முழு வீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது" என்று ஜூன் 2014ல் முன்னால் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்திருந்தாலும்,

இன்றைக்கு எங்கும் மக்கள் குடிநீருக்காக காலிக் குடங்களுடன் அலைவதைத்தான் பார்க்க முடிகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சோழாவரம் ஏரி ஏற்கனவே வற்றி விட்டது.

பூண்டி ஏரி இன்னும் சில தினங்களில் வற்றிவிடப் போகிறது. 2003-ல் அ.தி.மு.க. அரசு இருந்த போதுதான் சென்னையில் இப்படியொரு கடும்குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

அதே நிலைமை இப்போது மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியில் "ரிப்பீட்" ஆகியிருக்கிறது. ஆனாலும் இன்னமும் இந்த கடும் குடிநீர் பற்றாக்குறையை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் அ.தி.மு.க. அரசு திணறிக் கொண்டிருக்கிறது.

தற்போது நிலவும் கடும் குடிநீர் பற்றாக்குறை ஒவ்வொருவரையும் மோசமாக பாதிக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சோதனையாக அமைந்திருக்கிறது.

குடிநீர் இல்லாமல் உயிர்வாழ முடியும் என்று கற்பனையில் கூட நாம் யோசித்துப் பார்க்க முடியாது. விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கும் கடும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க அ.தி.மு.க. அரசு விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.

இனியும் அமைதி காத்து நடவடிக்கை எடுக்கத் தவறினால், செயலற்ற அ.தி.மு.க. அரசை எதிர்த்து மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings