சசிபெருமாள் மறைவுக்கு தமிழக அரசே பொறுப்பு: ராமதாஸ் !

மது ஒழிப்புக்காக தொடர்ந்து போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சசிபெருமாள் மறைவுக்கு தமிழக அரசே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " மது ஒழிப்புக்காக போராடி வந்த காந்தியவாதி சசி பெருமாள் மார்த்தாண்டம் அருகே மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

தமிழ்நாட்டில் மது ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் சசிபெருமாள் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். மதுவுக்கு எதிராக அவர் போராடியபோதெல்லாம் பா.ம.க. ஆதரவு அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 2013 ஆம் ஆண்டு காந்தியடிகள் பிறந்த நாளான ஜனவரி 30 ஆம் தேதி சென்னையில் சாகும்வரை உண்ணா நிலையைத் தொடங்கிய சசிபெருமாள் 33 நாட்கள் தொடர்ந்தார்.

ஆனாலும், அவரது கோரிக்கைகள் குறித்து அவருடன் பேச்சு நடத்தக் கூட தமிழக அரசு முன்வரவில்லை.

தொடர் உண்ணாவிரதத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில், எனது அறிவுறுத்தலை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அதன்பின் மதுவுக்கு எதிரான போராட்டத்தை சற்று தீவிரமாகவே சசி பெருமாள் நடத்தி வந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணா மலைக்கடை என்ற இடத்தில் பள்ளி & கோயில்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அ

தன்பிறகும் மதுக்கடை அகற்றப்படாததைக் கண்டித்து தான் அவர் செல்பேசி கோபுரத்தில் ஏறி இன்று போராட்டம் நடத்தினார். அவரது கோரிக்கையை ஏற்று ஒரே ஒரு மதுக்கடையை அகற்றியிருந்தால் மதுக்காக போராடி வரும் அவரை காப்பாற்றியிருக்கலாம்.

ஆனால், கல்நெஞ்சம் கொண்ட தமிழக அரசு மனசாட்சியின்றி நடந்து கொண்டதன் விளைவாக சசி பெருமாளை நாம் இழந்து நிற்கிறோம். சசி பெருமாளின் இறப்புக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

சசி பெருமாளின் மறைவு மது ஒழிப்பு போராட்டத்திற்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சசிபெருமாளின் விருப்பப்படி தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்" என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.
Tags:
Privacy and cookie settings