இலவச மிக்ஸி, கிரைண்டரு க்காக அலை கழிக்கப்படும் பொதுமக்கள் !

இலவச மிக்ஸி, கிரைண்டரை வாங்குவதற்காக அதிகாரிகள் எங்களை அலைகழிக்கின்றனர் என திருவான்மியூர் பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
 
கடந்த சில நாட்களாக திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி மண்டல அலவலகத்தில் இலவச மிக்ஸி மற்றும் கிரைண்டர் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.

இலவச பொருட்களை வாங்க வரும் அவர்களிடம் ஒரு டோக்கனை மட்டும் கொடுத்து விட்டு நாளை வா என்று அதிகாரிகள் சொல்லி அனுப்பியிருக்கின்றனர்.

இலவச பொருட்களை வாங்குவதற்காக நான்கைந்து நாட்கள் அலைய வேண்டியுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், ''நாங்கள் வேளச்சேரி தொகுதியைச் சேர்ந்தவர்கள்.

சென்னையைப் பொறுத்தவரை இங்கிருக்கக்கூடிய பெரும்பான்மை தொகுதிகளில் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டு விட்டது.

வேளச்சேரி தொகுதியில் திட்டம் தொடங்கிய போது சிலருக்குக் கொடுத்ததொடு விட்டு விட்டார்கள். இப்போது மீண்டும் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் இங்கே கூட்டம் அலைமோதுகிறது.

திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முதல்  நாள் வரச்சொல்லி ஒரு டோக்கன் என்ற பெயரில், ஒரு துண்டுச் சீட்டில் நம்பரைக் குறிப்பிட்டுக் கொடுத்துவிட்டு மறுநாள் வரச்சொன்னார்கள்.

மறுநாள் ரேசன் கார்டை சரிபார்த்துவிட்டு, அந்த டோக்கனுடன் அடுத்த நாள் வரச்சொன்னார்கள். மூன்றாவது நாள் வந்தபோது, முதலில் கொடுத்த டோக்கனை வாங்கிவிட்டு இன்னொரு டோக்கன் தருகிறார்கள்.

இதனை எடுத்துக் கொண்டு தரமணியில் உள்ள அரசு பள்ளிக்குச் சென்று கொடுத்தால்தான் விலையில்லாப் பொருட்களைத் தருகிறார்கள். மூன்று நாட்கள் நாங்கள் இதற்காக வந்து வந்து செல்கிறோம்.

அதுவும் எல்லோரும் அடித்து பிடித்து வருவதால் கூட்டம் முண்டியடிக்கிறது. இதற்குப் பதிலாக அந்தந்த ரேசன் கடைகளில் டோக்கனை வழங்கச் செய்யலாம்.

தினசரி இத்தனை நபர்கள் என்று ரேசன் கார்டு வரிசைப்படி, கடைகளில் வைத்து டோக்கன் கொடுத்தால், டோக்கனைப் பெற்றுக் கொண்டு பொருளையும் அன்றே வாங்கிவிட முடியும்.

இதையெல்லாம் யார் அதிகாரிகளுக்கு எடுத்துச் செல்வது?'' என்று அங்கலாய்த்தார்கள்... - மு.செய்யது முகம்மது ஆசாத்
Tags:
Privacy and cookie settings