குவைத் நாட்டின் வங்கிக் கணக்கில் ரூ.10 கோடியை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்த வெளிநாட்டைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
குவைத்தில் மசூதி உள்ளிட்ட பொது இடங்களில் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் ரம்ஜானை ஒட்டி அதிகமானோர் மசூதிக்கு வருவதால், அங்கு பிச்சை எடுப்பவர்களை பிடிக்க போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் குவைத் சிட்டியில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே ஒரு நபர் அங்கு வருபவர்களை தொந்தரவு செய்து பிச்சை எடுத்து வந்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
அவர் வெளிநாட்டில் இருந்து குவைத்துக்கு வந்தவர். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது உள்ளூர் வங்கிகளில் மட்டும் அவர் ரூ.10 கோடி அளவுக்கு பணம் வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குவைத்தில் மட்டுமின்றி பஹ்ரைன், ஓமன், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலும் பிச்சை எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரம்ஜான் பண்டிகை காலத்தில் மசூதிக்கு வருவர்களை பிச்சை எடுப்பவர்கள் அதிகம் தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்கு வரும் பலர் பணத்துக்காக பகுதி நேரமாக பிச்சை எடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
குவைத்தில் மட்டும் கடந்த ஏப்ரல் மாதம் பிச்சை எடுத்த குற்றத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

