பிரித்தானியா நாட்டிற்கு செல்வதற்காக அந்நாட்டை சேர்ந்த மூதாட்டியை திருமணம் செய்த வாலிபர் ஒருவர் 2 வாரங்களில் அவரை பிரிந்து சென்றதால், மூதாட்டி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள Leicester என்ற நகரில் Patricia Hancocks என்ற 64 வயது மூதாட்டி ஒருவர் தனது 3 மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.
25 வருடங்களுக்கு முன்னரே தனது கணவரை இழந்ததால், ஒரு அன்பான ஆணின் ஆதரவை அவர் பல வருடங்களாக எதிர்ப்பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவை சேர்ந்த Mondher Mezni என்ற 26 வயது வாலிபரை மூதாட்டி இணையத்தில் சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையே பழக்கம் மிக நெருக்கமானதால், வாரத்திற்கு 5 முறை அவர்கள் ஆன்லைன் மூலமாக பேசி வந்துள்ளனர்.
இவ்வாறு, பழக்கம் நெருக்கமாக செல்ல ‘தன்னை நேரில் பார்க்க வர முடியுமா’ என அந்த நபர் கேட்டுள்ளார்.
அப்போது தான் வாலிபரிடம் ஒரு விசயத்தை மறைத்து வந்தது மூதாட்டியை பயம் கொள்ள செய்துள்ளது.
கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் கொடூரமான நோய் தாக்கியதில் அவர் சக்கர நாற்காலியில் மட்டுமே அமர்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த உண்மையை மறைக்காமல் அவர் அந்த வாலிபரிடம் சொல்ல, அவர் மூதாட்டியை பார்த்து ‘நீங்கள் ஒரு அழகு தேவதை, உங்கள் உடல் குறைபாடு தனக்கு எந்த விதத்திலும் பிரச்சனை அளிக்காது’ என
கூற அந்த மூதாட்டி மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த வாலிபரை சந்திக்க இங்கிலாந்தில் இருந்து துனிசியாவிற்கு சென்றுள்ளார்.
துனிசியாவில் இருவரும் சந்தித்ததும் வாலிபர் மூதாட்டியை திருமணம் செய்ய விரும்புவதாக சொல்ல, அவர் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ளார்.
இருவரின் நெருக்கமும் அதிகரித்தது. பின்னர், வாலிபரின் பெற்றோர்கள் ஆதரவுடன் திருமணமும் நடைபெற்றது.
திருமணத்திற்கான சுமார் 4,700 பவுண்டுகள் உட்பட அனைத்து செலவுகளையும் மூதாட்டியே ஏற்றுள்ளார்.
சில தினங்களுக்கு பிறகு, தனக்கு இங்கிலாந்திற்கு வர விருப்பம் இருப்பதாகவும், நீ முதலில் அங்கு சென்று எனக்கு விசா எடுக்க தேவையான வேலைகளை பார்க்குமாறு கூறி அந்த மூதாட்டியை அனுப்பி வைக்கிறார்.
இங்கிலாந்திற்கு திரும்பிய அந்த மூதாட்டி, தன்னிடம் இருந்த சேமிப்பை எல்லாம் பயன்படுத்தி கடும் சிரமத்திற்கு இடையே 8 மாதங்களில் தனது புதிய கணவருக்கு விசா எடுத்து முடிக்கிறார்.
தனது ஆசை கணவன் வருவார் என்றும், தன்னை வாழ்நாள் முழுவதும் அன்பாக பார்த்துக்கொள்வார் என்ற கற்பனையில் மிதந்த அந்த மூதாட்டிற்கு பேரிடி காத்திருந்துள்ளது.
இங்கிலாந்திற்கு வந்த அவரது கணவன் இரண்டு வாரங்கள் மட்டுமே மூதாட்டியுடன் தங்கி இருந்துள்ளார். பின்னர், வெளியே சென்றுவருவதாக கூறி சென்ற அந்த நபர் திரும்பி வரவே இல்லை.
2012ம் ஆண்டில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் புகார் அளித்துள்ள அந்த மூதாட்டி, விசா வாங்குவதற்காக
தனது உணர்வுகளுடன் விளையாடிய அந்த நபரிடமிருந்து விவாகரத்து பெற பணத்தை சேமித்து வருவதாக கூறியுள்ளார்.
ஆனால், தற்போது துனிசா நாட்டிற்கு திரும்பி சென்றுள்ள அந்த நபர், மூதாட்டி கூறிய அனைத்து புகார்களையும்
மறுத்ததுடன் இல்லாமல், அவருடன் சேர்ந்து வாழும் விருப்பம் எல்லை எனவும் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்னும் சில வாரங்களில் நீதிமன்றத்திற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

