கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள் !

0
அவருடன் நான் கடைசியாகப் பேசி 8 மணி நேரம் மட்டுமே கடந்திருக்கிறது. தூக்கம் என் கண்களுக்குள் நுழைய மறுத்து இமைகளை விட்டு விலகிச் செல்கிறது.
கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள் !
(இது கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் அவரது ஃபேஸ்புக்கில் இப்பதிவை பதிந்த போது குறிப்பிடப்பட்டிருந்த நேரம்) 

துக்கம் கண்ணீராகக் கரை புரண்டோடுகிறது. அதில் கலாமின் நினைவுகள் கலந்து வழிந்தோடுகின்றன. அப்துல் கலாமுடன் நான் சேர்ந்திருந்த அந்த கடைசித் தருணமானது 27-ம் தேதி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது. 

குவாஹாட்டிக்கு விமானத்தில் ஒன்றாக புறப்பட்டோம். டாக்டர் கலாம் 1-ஏ எண் கொண்ட இருக்கையிலும் நான் 1-சி இருக்கையிலும் அமர்ந்திருந்தோம். அவர் அடர் நிறம் கொண்ட ஆடை அணிந்திருந்தார். 

அவரைப் பார்த்த மாத்திரத்தில் 'நல்ல நிறம்' என அவரது ஆடையைச் சுட்டிக் காட்டிச் சொன்னேன். அப்போது என் மனம் அறிந்திருக்க வில்லை அதுவே அவரை நான் பார்க்கும் கடைசி நிறமென்று. 
பருவமழை காலத்தில், விமானத்தில் இரண்டரை மணி நேரம் பயணம் என்பது சற்று எரிச்சலைத் தருவதே. அதுவும் விமானத்தின் சிறு ஜெர்க்குகள் எனக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால், கலாமுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். 

எனது வெறுப்புணர்வைப் புரிந்து கொண்ட கலாம், என் அருகில் இருக்கும் கண்ணாடி ஜன்னலுக்கு மேல் இருக்கும் திரையை இழுத்து விட்டு இப்போது நீ அச்சமின்றி இருக்கலாம் என்றார். 
 
விமானப் பயணம் ஒருவழியாக முடிந்தது. அடுத்ததாக ஐ.ஐ.எம். ஷில்லாங்குக்கு கார் மூலமாக இரண்டரை மணி நேரப் பயணம். விமானப் பயணம், கார் பயணம் என பயணமே 5 மணி நேரத்தை விழுங்கி விட்டது.

ஆனால் அந்த 5 மணி நேரமும் நாங்கள் நிறையப் பேசினோம், ஆலோசித்தோம், விவாதித்தோம். கடந்த ஆறு ஆண்டுகளில் இது போன்ற நிறைய தருணம் எனக்கு வாய்த்திருக்கிறது. 

இருப்பினும் எனக்கும் கலாமுக்கும் இடையேயான அந்த கடைசி பேச்சுகளில் மூன்று முக்கிய நிகழ்வுகள்/ஆலோசனைகள் எப்போதும் நினைவில் நிற்கும். 

முதலாவது, பஞ்சாபில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் கலாமை வெகுவாகவே பாதித்திருந்தது. அப்பாவி உயிர்களின் பலி அவரைத் துயரத்தில் ஆழ்த்தி யிருந்தது. 

அன்றைய தினம் அவர் ஷில்லாங் ஐ.ஐ.எம். அரங்கில் பேசவிருந்த தலைப்பு 'வாழ்வதற்கு உகந்த பூமி'. 

பஞ்சாப் சம்பவத்தையும் அவர் பேசவிருந்த தலைப்பினையும் ஒப்பிட்ட கலாம், "மனிதர்களால் ஆன சக்திகள் பல இந்த புவியை வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றி வருகின்றன. 

வன்முறையும், சுற்றுச்சூழல் மாசும், சற்றும் பொறுப்பற்ற மனித நடவடிக்கைகளும் தொடர்ந்தால் இன்னும் 30 ஆண்டு காலத்தில் நாம் இந்த பூமியை விட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். 

இதைத் தடுக்க உங்களைப் போன்றவர்கள் ஏதாவது ஆக்கப் பூர்வமாக செய்ய வேண்டும். எதிர்காலம் உங்கள் கைகளிலேயே இருக்கிறது என்றார். 

இரண்டாவதாக நாங்கள் பேசிக் கொண்டது தேசிய அரசியல் பற்றியது. நாடாளுமன்றம் முடங்கி வருவது குறித்து கலாம் மிகுந்த வேதனை தெரிவித்தார். 
எனது பதவிக் காலத்தில் நான் இரு வேறு அரசுகளைப் பார்த்திருக்கிறேன். அதன் பின்னரும் நிறைய ஆட்சி மாற்றங்களை பார்த்து விட்டேன். ஆனால், இத்தகைய முடக்கங்கள் மட்டும் மாறவில்லை. 

இது சரியானது அல்ல. நாடாளுமன்றம் வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த ஏதாவது ஒரு வழிவகை காண விரும்புகிறேன் எனக் கூறினார். 
பின்னர் என்னிடம் ஐஐஎம் மாணவர்களிடம் கேட்பதற்காக சில கேள்விகளை தயார் செய்யுமாறு வலியுறுத்தினார். அதை தனது உரை முடிந்தவுடன் மாணவர்களுக்கு வழங்க விருப்பதாக தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தை ஆக்க பூர்வமானதாகவும், துடிப்பு மிக்கதாகவும் மாற்றக் கூடிய வழிமுறைகள் மூன்றினை மாணவர்கள் குறிப்பிட வேண்டும். 

அதுவே கலாம் மாணவர்களுக்காக தயார் செய்து வைத்திருந்த அந்த கடைசி நேரக் கேள்வி. சிறிது நேரம் கழித்து என்னிடம் அந்த கேள்வி பற்றி மீண்டும் பேசினார். 

என்னாலேயே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை என்றால் மாணவர்களால் எப்படி முடியும் என்றார். அடுத்த ஒரு மணி நேரம் இதைப் பற்றியே எங்கள் பேச்சு இருந்தது. 

பல்வேறு யோசனைகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். எங்களது அடுத்த படைப்பான 'அட்வான்டேஜ் இந்தியா' என்ற புத்தகத்தில் இது குறித்து சேர்க்கலாம் என முடிவு செய்தோம். 

மூன்றாவது நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சிகரமானது. அவரது பண்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம். 
கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள் !
எங்கள் வாகனத்துக்குப் பாதுகாப்பாக 6 வாகனங்கள் வந்தன. நாங்கள் இரண்டாவது வாகனத்தில் இருந்தோம். எங்கள் காருக்கு முன்னதாகச் சென்ற ஒரு திறந்த ஜிப்ஸி வாகனத்தில் 3 வீரர்கள் இருந்தனர். 

இருவர் ஜிப்ஸிக்குள் அமர்ந்திருந்தனர். ஒருவர் வாகனத்தில் நின்றபடி பயணித்தார். ஒரு மணி நேர பயணம் ஆகியிருக்கும், அந்த நபர் ஏன் நின்று கொண்டே வருகிறார்? அவர் சோர்ந்து விடுவார். 

இது அவருக்கு தண்டனை போல் அல்லவா இருக்கிறது? ஏதாவது செய்யுங்கள். 

ஒயர்லெஸ் கருவியில் தகவல் அனுப்பி அவரை அமரச் செய்யுங்கள் அல்லது கை அசைத்தாவது அவரை உட்கார சொல்லுங்கள் எனக் கலாம் என்னிடம் கூறினார். 

அவரிடம் நான் எவ்வளவோ எடுத்துரைத்தேன். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரை நிற்கும்படி மேலதிகாரி கூறியிருக்கலாம் என்றேன். 
ஆனால், கலாம் சமாதானம் அடைய வில்லை. ரேடியோ கருவி மூலம் தகவல் அனுப்ப எவ்வளவோ முயன்றோம். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. 
அடுத்த 1.5 மணி நேரப் பயணத்தின் போது ஷில்லாங் சென்றதும் அந்த நபருக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதை அவர் என்னிடம் மூன்று முறையாவது நினைவு படுத்தி யிருப்பார். 

அதேபோல் ஷில்லாங் சென்றதும், அந்த நபரை நான் ஒருவழியாக தேடிப்பிடித்தேன். அவரை கலாமிடம் அழைத்துச் சென்றேன். 

அந்த வீரரிடம் கைகுலுக்கிய கலாம், சோர்வாக இருக்கிறாயா? ஏதாவது சாப்பிடுகிறாயா எனக் கேட்டார். எனக்காக நீ நீண்ட நேரம் நிற்க வேண்டியதாகி விட்டது. 

அதற்காக நான் வருந்துகிறேன் என்றார். கலாமின் பண்பைக் கண்டு வியந்துபோன அந்த வீரர், சார், உங்களுக்காக நான் 6 மணி நேரம்கூட நிற்பேன் என்றார். 

அதன் பிறகு நாங்கள் கருத்தரங்கம் நடைபெற விருந்த இடத்துக்குச் சென்றோம். அவர் எப்போதுமே குறித்து நேரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற கொள்கையுடவர். 

மாணவர்களை காக்க வைக்கக் கூடாது என என்னிடம் அவர் அடிக்கடி கூறியிருக்கிறார். அங்கே, அவருக்காக ஒலிப்பெருக்கியைச் சரி செய்தேன். கருத்தரங்கு குறித்து சுருக்கமாக குறிப்பு வழங்கினேன். 

அப்போது அவர் என்னிடம், 'ஃபன்னி கை'- விளையாட்டுப் பையன் நீ! என்றார். அவருடனான 6 ஆண்டுகளில் குறிப்பிட்ட இந்த வார்த்தைக்குப் பல அர்த்தங்களை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். 
கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள் !
ஒழுங்காக வேலை செய்தால், சிறு தவறு செய்திருந்தால், அவர் சொல்வதற்கு செவி சாய்க்க வேண்டுமென நினைத்தால், எனப் பல்வேறு தருணங்களில் கலாம் இந்த வார்த்தையை என்னிடம் பயன்படுத்தி யிருக்கிறார். 

ஆனால், இந்த முறை அவர் கூறியதே கடைசியானது, இறுதியானது. மேடையில் ஏறி இரண்டு நிமிடங்கள் பேசியிருப்பார். நான் அவருக்குப் பின் அமர்ந்திருந்தேன். 

2 நிமிட பேச்சுக்குப் பின்னர் நீண்ட இடைவெளி. நான் அவரைப் பார்த்தேன். அவர் கீழே சரிந்தார். அவரை நாங்கள் தூக்கினோம். மருத்துவர்கள் விரைந்து வந்தனர். 
என்ன முதலுதவி யெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தனர். என் ஒரு கரத்தில் கலாமின் தலையைத் தாங்கிக் கொண்டிருந்தேன். 

பாதி மூடிய கண்களில் அவர் என்னைப் பார்த்த அந்த கடைசிப் பார்வையை என்றென்றைக்கும் மறக்க முடியாது. 

அவரது கை எனது கையை இறுகப் பற்றியது; அவரது விரல்களை என் விரல்களோடு கோர்த்துக் கொண்டார். அவரது முகத்தில் அமைதி தவழ்ந்தது. அவர் எதுவும் பேசவில்லை. 

வலியை சிறிதும் காட்டவில்லை. அவரது கண்களில் ஞான ஒளி வீசியது. அடுத்து 5 நிமிடங்களில் நாங்கள் மருத்துவமனையை அடைந்திருந்தோம். ஆனால், அப்போதே ஏவுகணை நாயகன் நம்மைவிட்டு பறந்திருந்தார். 

அவரது பாதம் தொட்டு வணங்கினேன். எனது மூத்த நண்பருக்கு, எனது குருவுக்கு பிரியாவிடை செலுத்தினேன். உங்கள் நினைவுகள் என்னைவிட்டு நீங்காது. அடுத்த பிறப்பில் சந்திப்போம். 

நினைவலைகளில் இருந்து இன்னும் கொஞ்சம்...
நீ ஒரு இளைஞன். நீ எதற்காக அடுத்தவர்களால் நினைவு கூரப்பட வேண்டும் என நினைக்கிறாய்? இக்கேள்வியை கலாம் என்னிடம் அடிக்கடி கேட்டிருக்கிறார். 

அவரது கவனத்தை ஈர்க்கும் பதிலைத் தேடியலைந் திருக்கிறேன். ஒரு நாள், அவரிடம் இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்டேன். நீங்கள் முதலில் சொல்லுங்கள். நீங்கள் எதற்காக நினைவு கூரப்பட விரும்புகிறீர்கள்? 

குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகர், இந்தியா 2020 புத்தகம் அல்லது டார்கெட் 3 பில்லியன்.... இவற்றில் எதற்காக நீங்கள் நினைவு கூரப்பட விரும்புகிறீர்கள்? என்றேன். 

பல்வேறு பதில்களை நானே அளித்திருந்ததால் அவர் எளிதில் சொல்லி விடுவார் என எதிர்பார்த்தேன். 

ஆனால் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் விதமாக, ஆசிரியராக இருந்ததற்காகவே நினைவு கூரப்பட விரும்புவேன்! என்றார். 
நோவற்ற மரணம் வரம்!
 
சில வாரங்களுக்கு முன்னதாக நானும் கலாமும் அவரது பழைய நண்பர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் பேச்சு, பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் பேணுவது தொடர்பாக விரிந்தது. 

அப்போது கலாம், பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் அது நடைபெறாதது வருத்த மளிக்கிறது. 

அதே போல் பெரியவர்கள் தங்கள் சொத்துகளை வாரிசுகளுக்குப் பிரித்தளிக்க மரணப் படுகையில் விழும் வரை காத்திருக்கக் கூடாது. அது குடும்பத் தகராறு ஏற்பட வழி செய்யும். 

அதே போல் நோவற்ற மரணம் பெரிய வரம். ஒருவர் தன் பணியின் போதே மரித்துப் போவார் எனில் அது வரமே. இறுதி மூச்சு, இழுபறி யின்றி பிரிய வேண்டும் என்றார். 
கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள் !
அவரது வார்த்தைகளை இன்று நான் அசை போடுகிறேன். அவரது இறுதிப் பயணம் அவர் விருப்பத்துக்கேற்ப கற்பிக்கும் போதே நிகழ்ந்திருக்கிறது. கடைசி நேரத்தில் அவர் படுக்கையில் துவண்டு கிடக்கவில்லை. 

கம்பீரமாக நின்று கொண்டு, பணி செய்து கொண்டு, உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒரு பெருந்தலைவர் நம்மை விட்டு மறைந்து விட்டார். 

அவர் சேர்த்து வைத்தது எல்லாம் மக்களின் அன்பு மட்டுமே. இறுதிப் பயணத்திலும் அவர் ஒரு வெற்றியாளரே. 

அவருடனான காலை சிற்றுண்டி, இரவு உணவு வேளைப் பொழுதுகள் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். அவருடைய எளிமை, ஆர்வம் போன்ற குணங்கள் என்னில் எப்போதும் நினைவலைகளாக வியாபித்திருக்கும். 
அவர் விட்டுச் சென்ற பாடங்கள் எத்தனையோ. ஆனால், இனி அவரிடம் கற்க முடியாது என்ற வேதனை என்னை அமிழ்த்துக் கொண்டே இருக்கிறது. 

நீங்கள் எனக்கு கனவுகளைத் தந்தீர்கள். அந்தக் கனவுகள் சாதிக்க முடிந்த சாத்தியமாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தீர்கள். உங்களை என்றும் மறவேன். 

கலாம் சென்ற ுவிட்டார் ஆனால் அவரது பணிகள் காலம் கடந்து வாழும். 
 
உங்களுக்கு நன்றிக் கடன்பட்ட மாணவன், 
 
ஸ்ரீஜன் பால் சிங் - அப்துல் கலாமின் ஆலோசகர்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !