திருநங்கைகளுக்கான ஆதார் அட்டை சிறப்பு முகாம் !

இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கு ஆதார் அட்டை எடுக்கும் சிறப்பு முகாம் மதுரையில் இன்று காலை நடந்தது.
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வந்த திருநங்கைகளுக்காக பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகள், இயக்கங்களால் இவர்களுக்கான உரிமைகள் பேசப்பட்டு, இன்று ஓரளவு திருநங்கைகளும் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். 

இருப்பினும் அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இன்னும் பல நகரங்களில் வீடு வாடகைக்கு கிடைப்பதில்லை. 

வேலையில்லாததால் பல திருநங்கைகள் பிச்சையெடுத்தும், பாலியல் தொழிலில் ஈடுபட்டும் பிழைப்பை நடத்துகின்றனர். இந்த நிலையில் அவர்களின் குடியுரிமையை உறுதி செய்யும் முக்கிய ஆவணமான ஆதார் அட்டை எடுப்பதற்கு ஏகப்பட்ட தடைகள் இருந்து வந்தன. 

 மத்திய, மாநில அரசுகள் இவர்களை மூன்றாம் பாலினம் என்று அறிவித்து, அரசு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டாலும், பல மாவட்டங்களில் அவர்களால் ஆதார் அட்டை எடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் திருநங்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் மதுரையைச் சேர்ந்த ப்ரியா பாபு என்ற திருநங்கை, மதுரை மாவட்ட ஆட்சியரிடம், திருநங்கைகள் ஆதார் அட்டை எடுப்பதற்காக தனியாக முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

இதை பரிசீலித்த ஆட்சியர் இல.சுப்பிரமணியனும் இன்று (4ஆம் தேதி) திருநங்கைகள் ஆதார் அட்டை எடுப்பதற்கான முகாமுக்கு ஏற்பாடு செய்தார். 

இதன்படி, இன்று நடந்த சிறப்பு முகாமை ஆட்சிய தொடங்கி வைத்தார். இதில், 300க்கும் அதிகமான திருநங்கைகள் கலந்து கொண்டு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். 

இதையடுத்து அனைத்து திருநங்கைகளும், மாவட்ட ஆட்சியர் இல.சுப்ரமணியனுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
Tags:
Privacy and cookie settings