இந்தோனேசியாவில் எரிமலையால் வரும் சாம்பல்; விமானம் ரத்து

இந்தோனேசியாவில் மிகப்பெரிய எரிமலை வெடித்து வானில் சாம்பல் புகை பரவி வருவதால் கடந்த ஒரு வாரமாக அங்கு முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
 
இதனால், ரம்ஜான் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அங்குள்ள வெளிநாட்டினர் தவித்து வருகின்றனர். அங்குள்ள ருவாங் விமான நிலையம் பல வாரங்களாக மூடப்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான பாலி விமான நிலையமும் ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயா விமான நிலையமும் மூடப்பட்டிருப்பதால் அங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங், வடக்கு மாலுகுவில் உள்ள டெர்னேட் விமான நிலையங்களையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, பான்யூவாங்கி, ஜெம்பர் விமான நிலையங்களும் இயங்கவில்லை.

முசுலிம்கள் அதிகம் வாழும் இந்தோனேசியாவில் ரம்ஜான் பண்டிகை நேரத்தில் இவ்வாறு எரிமலை இடையூறு செய்வது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எரிமலை சாம்பல் பரவிக் கொண்டிருக்கும் போது விமானங்களை இயக்கினால் என்ஜின்கள் வெப்பமாகி, உருகிவிடும் ஆபத்து இருப்பதால்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings